நமக்கே தெரியாமல் சில நிகழ்வுகள் ஒரு முக்கிய இடத்தை தனக்குத்தானே சொந்தமாக்கிக் கொள்கின்றன! சில இடங்கள், சில பெயர்கள், சில வரிகள், சில வார்த்தைகள், சில பார்வைகள், சில மௌனங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதவை! பலருடைய வாழ்க்கையிலும் பல நிகழ்வுகளிலும் பதிந்த ஒரு இடம் ரயில் நிலையம்! பயணங்களுக்கு மட்டுமல்ல; நம் வாழ்க்கைப் பாதையில் இழையோடும் பல பிரிவுகளுக்கும் கூட ரயில் நிலையங்களே சாட்சி! இந்த ரயில் நிலையங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல , திரைப்படங்களிலும் தம் உணர்ச்சிமிகு ஆதிக்கத்தை தொடருகின்றன! அப்படி, ரயில் நிலையங்களில் நடந்த , பலர் மனதில் நீங்கா இடம் பிடித்த சில வண்ணத்திரை காட்சிகள் ரயில் நிலைய ஸ்நேகங்கள் நினைவில் நிரம்பும்போதெல்லாம் சில இரும்பு மனங்கள் கூட இளகிப் போகும்! அந்தக் கற்பனை உலகில் காவியக் காட்சிகளில் நாமும் கூட கொஞ்சம் கரைந்து விட்டு வருவோமா?
இடம் : கேத்தி ரயில் நிலையம்
அந்த இளைஞன் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருந்தான். அந்த ரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும் “விஜி விஜி” என்னும் அவன் குரல் சன்னமாய் ஒலிக்கிறது. அவன் முகத்தில் திடீர் பிரகாசம். அவனுடைய விஜியைப் பார்த்துவிட்ட பரவசம். ஆனால் ஒரு அரசியல் கூட்டம் அவளை அண்ட விடாமல் தடுக்கிறது! அவனுடைய கூக்குரலுக்கு அந்த விஜி பாக்கியலட்சுமியாய் தலை திருப்புகிறாள். அவளுக்கு அவன் நினைவில்லை. அவளுடைய அம்னீஷ்யா நாட்கள் ஆற்றங்கரை ஓவியமாய் கரைந்தே போனது! 
ரயில் மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்க அவன் குட்டிக் கரணங்கள் கூட அவள் நினைவுகளை திரும்ப தாவ வைக்க முடியாமல் போக கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ரயிலின் வேகமும் அவனின் சோகமும் கூட , அதுவரை பாலுக்காக அழுத என் பக்கத்து இருக்கை குழந்தை அந்த சீனிவாசனுக்காக கொஞ்சம் அழ ஆரம்பித்தது!

 

அன்றுதொட்டு இன்றுவரை பாலுமகேந்திராவின் மூன்றாம்பிறை நம் இதயவானில் சோகக் கதிரை வீசிக்கொண்டுதான் இருக்கிறது! கமலையும் ஸ்ரீதேவியையும் விட அந்த சீனிவாசனும் விஜியும் மனதில் அதிகம் பதிந்தார்கள்.

Advertisements