உள்ளத்தை உறைய வைப்பது காதல் என்றால் காதலை உணர வைப்பது காலம் எனலாமா? காலத்தின் மாற்றத்தில் காதலும் மாறுவது காதலின் பரிணாமம் எனக்கொள்வோம். 10ல் வரும் காதல் பள்ளிக்காதல் பக்கத்து  பையனின் புத்தகங்கள் புதுமையாத் தோன்றும். உணர்வில் மட்டுமே தோன்றி பின் தொடர்ந்து வரும். காலங்கள் கடந்து அசைபோட வைக்கும் அம்சமான காதல் காமம் இல்லாத காதல் இது…… காலத்தை வெல்லும் காதலும் இதுவே……

15ல் வரும் காதல் பருவக் காதல் பார்த்தது அனைத்தும் பிடித்துப் போகும். வாயடித்து சண்டை போட்ட வயதெல்லாம் வாயடைத்து வெட்கி நிற்கும். கண்ணாடிகள் கர்வம் கொள்ளும். ஆம்! கண் பாராதா என்று காளையர் காத்துக் கிடக்க கண்டேனே உன்னை என்று கண்ணாடியை கட்டிக் கிடக்க கண்ணாடிகளும் கர்வம் கொள்ளும்.

20 ல் வருவது வஞ்சியின் காதல் வாலிபத்தின் வளைவு, நெளிவுகள் வட்டமடிக்க.. வஞ்சியின் வாளிப்பு பட்டமடிக்க சின்ன சின்ன ஆசைகள் சீறி சிறகடிக்க, நடந்து வந்த நிழல்கள் நம்மை நிராகரிக்க தனிமைகள் தனித்தனியாய் தவித்திருக்க ,தொடர்ந்தது காதல் அடுத்த கட்டதிற்கு!

35 ல் வரும் காதல்  முதிர்ந்த காதல்! முன்னுரைத்த காதல் முதுமைக்கு முன்னுரையாய் கண்ணுறங்கும் நேரத்திலும் கடமைக்கு கட்டுப்பட்டு பொன், மணி என்று பொருளுக்கு ஆசைப்பட்டு காதலின் சாயலை மட்டும்
சுமந்து சம்ப்ரதாயத்தில் உழன்று தனக்கென யாதும் கொள்ளாமல் தள்ளாடும் நிலையற்றக் காதல்……….

50ல் வரும் காதல் தாம்பத்யத்தை தரம் பார்க்கும் காதல்… சொந்தங்கள் சோதிக்கும் போதெல்லாம் முதல் காதல் முதுமைக்கு அசையாய் போகும்.
சங்கீதத்தில் வரும் சந்தங்களாய் ஆகிப்போன பந்தங்கள் தத்தம் பங்கிற்கு
சொல்லிவிட்டுப் போடும். நிலை நின்று பறிபோகும்.
கொல்லைப்புறக் காற்று கொடியசைத்து கூப்பிட்டாலும் தொல்லைதரும் சுற்றம் சுகமாகத்  தோன்றும். கைப்பிடித்த காதல் காத்திருக்க காலத்தின் பிடியில் காணாமல் போகும் இந்தக்காதல்………

60 க்கு மேற்பட்ட காதல் ஆனந்தக் காதல்! ஆயுளின் அஸ்தமனக் காதல்….. வாழ்க்கைப் பாடங்களின் கூட்டல், கழித்தல்களை கணக்கிட்டு பின் பெருக்கிவிட்ட சந்ததிகளை சந்தோஷப்படுத்த வகுத்துக்கொண்ட வழிமுறைக்காதல். நிலை ஏழாக இருந்தாலும் நிலைத்து வாழும் காதல் மட்டும்
ஒரே நிலையாய் இருந்திட அலை அலையாய் பெருகிவரும் ஆனந்தத்
ை ஆராதித்து ஆர்ப்பரிக்கும் இந்த அறுபதின் நிலையே ஆனந்தத்தின் எல்லை……….

– கொற்றவை

Advertisements