அந்த கேத்தி ரயில் நிலையத்திலிருந்து கொஞ்சம் முட்டம் ரயில் நிலையத்திற்கு வருவோமா? இங்கே முட்டம் சின்னப்பதாஸ் தன் “டீச்சரை” வழியனுப்பக் காத்திருக்கிறான்.

“ஏசுகிட்ட வந்த மாதிரி வழிதவறி மந்தையிலிருந்து ஒரு ஆடு உங்கிட்ட வந்தா என்ன பண்ணுவ தாஸ்?”
“அடி, பிரியாணிதான் டீச்சர்!”
“அந்த ஆடு ஜெனிஃபராயிருந்தா?”
ஜெனிஃபர் கற்றுத் தந்த பாடமும் கண்ணில் தந்த காதலும் சின்னப்பதாஸுக்குள் இன்னமும் உயிரோடு இருக்க ஆனால் அவன் மட்டும் நடைபிணமாய் நின்றிருந்தான். அது பிரியப் போகும் நேரம். அவன் காதல் சரியப் போகும் நேரம்.

“பொத்தி வச்சா அன்பு இல்லே
சொல்லிபுட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே!
இந்தத் துன்பம் யாராலே!”
என்ற  வரிகளுக்குள் அவர்கள் வாழ்க்கை வரையறுக்கப்பட்ட நிலையில் , காதலை மனதிற்குள் மலர வைத்து வார்த்தைப் பூக்களை பறிக்காமலேயே விட்டதால் அவர்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருவருமே கண்ணைக் கட்டிக் கொண்டார்கள்.

“வீட்டுக்கு வா, வீட்டுக்கு வா! ” என வாய் நிறைய அழைத்துவிட்டு தனியாய்க் கூப்பிட்டு “வந்துடாதேப்பா” எனக் கெஞ்சும் ஜெனிஃபரின் அப்பாமுன் தோற்றுப் போகிறது அவனது காதல். அவனுடைய பைங்கிளி வானில் பறக்க அவனும் சேர்ந்து போக அவனிடம் சிறகும் இல்லை உறவும் இல்லை என்ற உண்மை புரிந்த ஆற்றாமைக் காதல் அவன் காதல். மதம் , பணம் , கல்வி, சமுதாய நிலை என எல்லாவற்றிலும் வேறுபட்ட இந்த ஜெனிஃபரும் சின்னப்பதாசும் நம் மனதில் சரிசமமாய் இடம் பிடிக்கிறார்கள். பாரதிராஜாவின் காதல் கவிதைகளில் கடலோரக் கவிதைகளை நாம் மறக்கத்தான் முடியுமா?

Advertisements