மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான மக்சீம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற நாவல் “தாய்”….நாவல் என்பதை விடவும் காவியம் என்பதே சரியான பதம்.

ஜார் மன்னனின் ஆட்சியில் ருஷ்யாவில் சமூக ஏற்ற இறக்கங்களையும் தெளிவாகக் காட்டுகிறது “தாய்”.மனித சிந்தனையும், உழைப்பும், வெற்றி கண்ட சகல பொருட்களையும், அனைவருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்பதில் உறுதியோடு நின்று,பயத்துக்கும் பொறாமைக்கும்…பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையான மக்களை அத்தளைகளில் இருந்து வெளியில் கொணர தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த சோழலிஸ்டுகளின் கதை தான் “தாய்”.

ஆலைத்தொழிலாளியான மிகயீல் விலாசவ்………
வறுமையும்,புகையும் அழுக்கும்,சலிப்பும் மண்டிக் கிடந்த ஓர் குடியிருப்பில் தன் மனைவி பெலகேயா நீலவ்னா உடனும் மகன் பாவெல் விலாசவ் உடனும் வசித்து வருகிறான்.கதையின் நாயகனாக பாவெல் சித்தரிக்கப் பட்டாலும், கதையின் தலைப்புக்குப் பெயர் கொடுத்திருக்கும் நீலவ்னாவே உண்மையில் கதையின் நாயகி. கதையோட்டம் எங்கும் அவள் “தாய்” என்றே குறிப்பிடப்படுவது மிகவும் சிறப்பான மற்றும் நெகிழ்வான ஓர் அம்சம்.

போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் எல்லாத்தொழிளாலர்களையும் போலவே மிகையீல் விலாசவும் குடித்துக் குடித்தே குடல் கருகி இறக்கிறான்.அவனோடு காலமெல்லாம் நரக வாழ்வு வாழ்ந்த நீலவ்னாவும் பாவெலும் நிம்மதியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.தொழிற்சாலையில் வேலைக்குச் சேரும் பாவெல், ஏழை மக்களுக்காகப் போராடும் சோஷலிஸ்டாக உருவெடுக்கிறான்.படிப்பறிவோ வெளிவுலக அனுபவமோ அற்ற நீலவ்னா தன் மகன் செல்லும் வழி சிறப்பானது,உண்மையானது என்று உணர்வதோடு,அவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள்.மேலும் மே தினப் போராட்டத்தின் போது பாவெல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட மகனின் மார்கத்துக்கு தன்னால் இயன்ற வரையிலும் உதவுகிறாள் “தாய்”.தொழிற்சாலையில் உணவு விற்கும் சாக்கில் உள் புகுந்து, பாவெலின் நண்பர்கள் அச்சிட்டுக் கொடுக்கும் பிரசுரங்களை விநியோகித்து,ஆலைத் தொழிலாளிகள் மத்தியில் சோஷலிஸக் கருத்துக்களைப் பரப்புகிறாள்.பல மாறு வேடங்கள் பூண்டு வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று சோஷலிஸ புத்தகங்களையும் பிரசுரங்களையும் விநியோகித்து ,உண்மையின் வழி, தன் மகனின் வழி நிற்கிறாள்.

நாவலின் மைய கருத்தை அதிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளில் இருந்தே அறியலாம்.

“குறைகூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?
‘இது என்னுடையது ‘ என்று எவன் முதன் முதல் சொன்னானோ அவன் தான்.”

“எல்லாமும் எல்லாருக்கும்” என்ற சோஷலிஸ்ட்டுகளின் கருத்தை இவ்வரிகள் மிக அழகாக உணர்த்துகின்றன.

பாவெலும் அவனுடைய நண்பர்களும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப் பட வேண்டும் என்று தீர்ப்பான போதும் கலங்காது ,தன் கொள்கையில் இருந்து மாறாமல் நிற்கிறாள் “தாய்”.விசாரணயின் போது தன் மகன் செய்த கொள்கைப் பிரசங்கத்தை…அவனுடைய
தோழி லுத்மீலா அச்சிட்டுக் கொடுக்க ,மிகுந்த காவலுக்கிடையிலும் அவற்றை விநியோகிக்கச் சென்ற இடத்தில் உளவாளியிடம் அகப்பட்டு விடுகிறாள் “தாய்”.அந்நிலையிலும் தனது வயோதிகத்தையோ பயத்தையோ ,தன் ஒரே மகன் நாடு கடத்தப் பட உள்ளதையோ, ஒரு சிறிதும் கருதாது,தன் துணிவையெல்லாம் திரட்டி…. பிரசுரங்களை மக்களிடம் சேர்க்கிறாள் “தாய்”.அந்நேரத்திலும் கொள்கைப் பிரச்சாரம் செய்கிறாள் பின்வருமாறு;

“நாம் பெற வேண்டிய இன்பத்தையும் ,நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள்.எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்!நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையை விட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப்போவதில்லை...” 

என்று தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராட உத்வேகம் அளிக்கிறாள் :”தாய்”.

பாவெலும் அவனது சக தோழியான சாஷாவும் காதலர்கள்…ஆனாலும் தங்களது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது,சுயநலம்கருதாது, லட்சியவெறியோடுசெயல்படும்அவர்களதுஉறுதியும்,சகதோழர்களான
அந்திரேய்,பியோதர்மாசின்,கூசெவ்சகோதரர்கள்,சமோய்லவ்,புகின்,சோமவ் முதலியோரின் தியாகமும்….நமக்கெல்லாம் மக்கள் சக்தியின் மகத்தான ஜோதியை கண்களின்முன்னே கனன்றெரியச் செய்கிறது.

நம் சங்க இலக்கியங்களில் முற்றாத இளம் பிஞ்சு மகனை போருக்கு அனுப்பிய தாய்க்கு…. எவ்விதத்தில் குறைந்தவள் கார்க்கியின் “தாய்”?

Advertisements