ஞானபீட பரிசு பெற்ற ஜெயகாந்தன் அவர்கள் கடலூர் மாவட்டத்தின் மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்,”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”,” சுந்தர காண்டம்” போன்றவை இவருடைய குறிப்பிடத்தக்க நாவல்களில் சில.

சாராயம் கடத்தும் சபாபதி, கதையின் நாயகன்.கோனார் வீட்டில் பிறந்த அவன் எருமை மாடுகளைக் கட்டி அழுது பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா என கௌரவமாக மெக்கானிக் ஷாப் வைக்க எண்ணி, பிறகு டாக்சி ஓட்ட முடிவு செய்கிறான்,அதிலேயும் தடம் புரண்டு சாராயம் கடத்த ஆரம்பிக்கிறான்.

உண்ணாமலை, சபாபதியின் எருமை மாடுகளைப் பார்த்துக் கொள்வதற்காகக் கட்டிக் கொண்டு வந்த மாமன் மகள்.நாலு பிள்ளைகளுக்குத் தாயான அவளை நல்லவிதமாக வைத்து குடித்தனம் நடத்துகிறான் நம்ம சபா.

என்ன தான் கடத்தல் தொழில் செய்தாலும் அதிலும் ஒரு” யோக்கியதை வேண்டும் “என்று தன் கூட்டாளி கன்னியப்பனிடம் புத்தி சொல்பவன் சபாபதி.

நம்ம சபாவுக்கும் இளம் வயதில் இன்னதென்றே தெரியாமல் காதல் பூக்கிறது..அவன் அம்மா பச்சையம்மாள் பெரிதும் மதித்து வந்த,”பெரிய ஆபீசரு” மகளான லீலா விடம்.

பால் ஊற்றப் போகும் நேரத்தில்… விளையாடும் லீலா, மருதாணியிடும் லீலா,அவனிடமே பூப்பறித்துத் தரச் சொல்லி கேட்கும் லீலா என்று அவளைப் பார்த்து மனதைப் பறி கொடுக்கிறான் சபாபதி.குழந்தைப் பிராயத்தில் உண்டாகும் பல காதல்களையும் போலவே சபாவின் காதலும், அவனாலேயே உணரப்படாமல் போகிறது.கால மாற்றத்தால் லீலாவின் குடும்பம் நொடித்துப் போக, லீலா பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.தான் வழக்கமாக” சரக்கு” சப்ளை செய்யும் ஒரு ஓட்டல் ரூமில் எதிர்பாரா விதமாக லீலாவைச் சந்திக்கிறான் சபா.அவளின் இழி நிலை குறித்து ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைகிறான்.

அவளை அவனே கொண்டு வீடு சேர்க்கும் படியாகிறது.வழியில் தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளாத லீலாவுக்கு தான் யார் என்று உணர்த்துகிறான்.அவள் பெரிதாக வியப்படையாமல் சகஜமாக நடந்து கொள்கிறாள்.

அவர்கள் இருவரும் ஒன்றாக அறையில் தங்க நேர்கிறது,அவளின் கடந்த கால அவல வாழ்வை அறிந்து கொள்கிறான் சபா.தான் பெரிதும் விரும்பி வந்த பெண்ணுடன் தனியே இருக்கும் சந்தர்ப்பத்திலும் அவளே வியக்கும் படியாக மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறான் சபா.அவளுக்குப் பணம் தேவைப் படும் போதெல்லாம் தன்னுடன் தங்க வருமாரு ஏற்பாடு செய்துகொள்கிறான் ஒரு கண்ணியமிக்க நண்பனாக மட்டும்.தன்னையும் ஒருவன் இத்தனை விரும்புவதைக் காணும் லீலா அவனிடம் தன் மனதை இழக்கிறாள்.

தன் மனைவியிடம் லீலாவைப் பற்றியும், தங்களின் உடற் தேவையற்ற தொடர்பு பற்றியும் ஒளிக்காமல் சொல்கிறான் சபா.இந்நிலையில் வழக்கமாக செய்வது போல் சபாவும் அவன் கூட்டாளிகளும் சாராயம் கடத்துகையில், போலீசாரால் துரத்தப்படுகிறான், லீலாவின் முந்நாள் காதலன் ஒருவனால் பழிதீர்க்கப்படுவர்காக சுடப்பட்டு ஊனமாகிறான
்.

மருத்துவமனையில் அவன் இருக்கும் போது லீலா கன்னியப்பன் மூலமாகக் கொடுத்தனுப்பும் கடிதங்களின் தெம்பில் காலம் கழிக்கும் சபா, உடல் தேறி லீலாவை மீண்டும் சந்திக்கும் போது அவள் முற்றும் மாறிவிட்ட,ஒழுக்க வாழ்வுவாழ்பவளாக,தன்னை உயிரினும் நேசிப்பவளாக இருக்கக் கண்டு ,நண்பன் என்ற நிலை மாறி காதலன் என்ற நிலையில் சேர்கிறான்.

இதையும் ஒளியாமல் மனைவியிடம் ஒப்புவிக்கிறான் சபா.எந்தப் பெண்ணையும் போல் வெகுண்டெழும் உண்ணாமலை அவன் தாயின் ஒழுக்கத்தை கேவலப்படுத்தும் விதமாக வசைபாட ,அது வரையில் அவள் பேசியதெல்லாம் பொறுத்துக் கொண்டவன் அவளை அடித்துதைக்கிறான்.மனைவி கோபம் கொண்டு பிறந்தகம் செல்கிறாள்.

தன்னால் ,வாழ்ந்து வந்த ஒழுக்கக்கேடான வாழ்க்கையைத் திருத்திக்கொண்ட,லீலாவை கைவிட மனம் அற்ற சபா,அவளுடனும்,தன்னை விட்டு தாயிடம் செல்லாத மகன் மணியுடனும் தன் குடிசையிலேயே வாழ ஆரம்பிக்கிறான்,ஒரு பால்காரனாக!
தாயின் விருப்பம் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு பெண்ணையே பார்க்காமல் மணம் புரிந்து,அவள் அழகில் குறையிருந்தாலும் அவளுக்காக இரங்கி,பிள்ளைகள் மீது பிரியமாய் இருந்து,சாராயம் கடத்துவதிலும் நேர்மை பாராட்டி,இழிதொழில் செய்பவளாயிருந்தாலும் தான் நேசித்தவளைக் காத்து,அவளுக்காக தன் தொழிலைக் கைவிட்டு,உடல் ஊனம் கொண்டாலும் மனதின் உறுதியால் ஊனத்தை வென்று வாழும் சபா ஒருகதா நாயகன் தான்.

தான் சரண்டராகச் சம்மதித்த போதும், பழிஉணர்ச்சியால் தன்னை ஊனப்படுத்திய போலீஸ் ஆஃபீசரை பழி வாங்கும் சந்தர்ப்பம் வந்த போதும்.. மனம் இரங்கி மன்னிக்கும் சபாபதியை மனதில் கொண்டே கதைக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.”ஒரு மனிதன் “என்பது சபாபதியே தான் ஆனால் “சில எருமைமாடுகள் “அவன் பராமரித்து வந்தவை அல்ல…..மனித உருவில் அஃறிணைகள் போல் நடந்து கொள்ளும் சில மனிதர்கள் தாம்.

மனைவி இருக்க ,இன்னொரு பெண்ணா? என்று மனம் முரண்டினாலும் ‘அம்மாதிரியான சூழலில் அப்படித்தான் நடக்க முடியும் மனித குணம் கொண்டவர்களால்’ என்று சிறு கசப்போடு என்றாலும் சபாபதிக்காக சப்பைக்கட்டு கட்டத்தான் செய்கிறது மனம்.
(படங்கள் இணையத்திலிருந்து)…ஷஹி….

Advertisements