பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைச் சந்தித்து கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் கௌரி விஸ்வனாதன் கலந்துரையாடியதன் ஒரு பகுதி 4.7.10 ஆம் “தி ஹிந்து” நாளேட்டில் வெளியாகியுள்ளது.அந்த பேட்டியின் போது திரு.ருஷ்டி தெரிவித்த கருத்துக்களும் அதற்கு தக்க பதில்களும் பின்வருமாறு;

‘காலம் மற்றும் பிரதேசத்துக்கு தக்கவாறு தான் ஒன்று சரியா அல்லது தவறா என்ற அடிப்படைகள் மாறும்’ என்ற கொள்கையானது முற்போக்கு கொள்கைகளுக்கு, சாவுமணி அடித்து விடும் என்கிறார் ருஷ்டி. ஆனால் அகில உலகிற்கும் பொதுவான உரிமைகளான மொழிஉரிமை, கனவு காண்பதற்கான உரிமை,கற்பனை செய்யும் உரிமை ஆகியவைகளைப் பற்றி விவாதிக்கலாம் என்கிறார்.

விவாதத்தின் போது ,பேட்டியாளர் ருஷ்டியின் கதைகளில் வரும் சில கதா பாத்திரங்களைக் குறிப்பிட்டு ஒருவரை முற்போக்குவாதியாக அதாவது கடவுள் இல்லை எனக் கூறுபவறாகவும்…. அவர் மனைவியை அற்புத மயக்கங்களைத்தேடி அலைபவராகவும், ஒரு கதா பாத்திரத்துக்கு அக்பர் என்று பெயர் சூட்டி அவர் நாத்திகராகவும் பல தத்துவங்களைக் கொண்டவர்களுடன் விவாதம் செய்வதாகவும் அவர் மனைவிக்கு அரசி ஜோதா என்று பெயரிட்டு அவர் மந்திர வித்தைகளையும் அற்புதங்களையும் தேடி அதில் மூழ்கித்திளைப்பவராகவும் ஏன் முரண்பட்டவர்களை சேர்ந்து வாழ்வது போல் காட்டியுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ருஷ்டி’ கடவுளும் மதங்களும் தோற்றுவிக்கப்பட்டவைகள்.எல்லா மதங்களும் நாம் எங்கிருந்து வந்தோம் எவ்வாறு வாழப் போகிறோம் ?என்ற கேள்விக்கு விடையாகவே தோற்றுவிக்கப்பட்டன’ என்று கூறுகிறார்..’நாம் என்கிருந்து வந்தோம் என்பதைக் குறித்து மதங்கள்பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை” என்கிறார்.”மதங்கள் நன்னெறிகளைப் பற்றி கூறுவதெல்லாம் ஆய்வுக்குட்பட்டவையாகவும் அடக்கியோடுக்குவதற்காக ஏற்பட்டவையாகவும் உள்ளன” என்றும் கூறகிறார்.மேலும் தன் எழுத்தில் இயற்கையின் ஆற்றலுக்கு முரணான கூறுகள் அதிகம் இருப்பது தனி மனிதனான தன் கருத்துக்கு எதிரானது என்றும் ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் தனக்கு அவை தேவையென்றும் கூறுகிறார்.

மேற் சொல்லப்பட்ட ருஷ்டியின் கருத்துக்களுக்கு பின் வரும் விமர்சனங்களை நான் முன் வைக்கிறேன்;கதை எழுதும் ருஷ்டிக்கு, உண்மையிலேயே வாழ்ந்து, சரித்திரத்தில் இடம் பிடித்த கதாபாத்திரங்களின் பெயர்களும் ,அவர்களது சரித்திரப்பூர்வமான குணாதிசயங்களும், அவர்களின் மதங்களும் தேவை ஆனால்….. உண்மைகள் தேவையில்லை!ஏனெனில் இவர் எழுதுவது, இவர் மனம் போல் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழும் சமுதாயத்திற்கு.இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதுவதற்காக மேலை நாட்டினரால் கொம்பு சீவி விடப்படுபவர்.

‘மாறாதது மாற்றம் ஒன்று தான்’என்பதைக்கூட இவர் ஏற்க மறுக்கிறார்.இடம் காலம் இவைகளுக்கு ஏற்பவே மனித இனம் தன் கொள்கைகளையும் சட்டங்களையும் இயற்றிக் கொண்டு காலம் தோறும் அவைகளைப் புதுப்பித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.தன் எசமானர்களின் அற்ப சந்தோஷத்திற்காக எழுதும் ருஷ்டி, தான் முஸ்லிம் என்பதைக்கொண்டே சம்பாதிக்கிறார்.இவர் குர்-ஆனைக் கூட முழுமையாகப் படித்ததில்லை என்பது தெளிவான ஒன்று.உண்மை என்பது காலம், வெளி,சூழல்,மக்கள் பிரிவு சார்ந்து,நாள்தோறும் வளர்ந்த வண்ணம் உள்ளது.இறைவன் அளித்த ஞானத்தைக் கொண்டே ,இறைவன்
ளித்த பூமியில், மனித குலம் தன் சந்ததிகளைப் படைத்துக் கொள்வதுடன், தன் வாழ்வை செம்மைப்படுத்தி ,நாள்தோறும் வளர்ந்து வருகிறது.ஆதத்தை இறைவன் இப்பூமிக்குத் தன் பிரதிநிதியாக அனுப்பியதாலேயே மனித குலம் இவ்வளவு சாதனைகளையும் செய்ய இயன்றது.

.டார்வினின் பரிணாமக் கொள்கை வகுக்கப்படுவதற்கு முன் அறிவுலக வட்டம் மனித இனம் தோன்றி 9000 முதல் 14000 ஆண்டுகள் என வரையறுத்தது.குகைகளிலும் பாலைவனப்பகுதிகளிலும் ,பாறையிடுக்குகளிலும் ,சதுப்புநிலங்களிலும் ஆய்வு செய்த டார்வினும் ஏனையோரும் மனித இனம் நான்கு படி நிலைகளைக் கடந்து 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்ற முடிவுக்கு வந்தனர்.இதற்கு அடிப்படையாக எலும்புக்கூடுகள் ,கல்லில் உள்ள படிமங்கள் இன்ன பிற ஆதாரங்களைக் கொண்டுள்ளனர்.இவை மனிதனின் உடற்கூறுகளைச் சேர்ந்தவை தானா ?என்ற ஐயமும் உள்ளது.

ஆதம் எப்போது தோன்றினார்?அவருக்குப் பின் வாழ்ந்த சமுதாயங்கள் தொடர்ந்து இருந்தவையா?என்பதெல்லாம் மாபெரும் கேள்விகள்!பரிணாம சித்தாந்தத்தை ஒப்புக் கொண்டால்…நம் கண்ணெதிரே மீன் மீனாகவும்,குரங்கு ,கால்நடைகள் எல்லாம் அப்படியப்படியே தானே நீடிக்கின்றன?புதிய கொள்கைப் படி அரைகுறையாக எதுவும் இல்லையே ஏன்?

மனிதனின் கண்டுபிடிப்புகள் மிகக்குறைவே .நாம் காண வேண்டியது மிக அதிகம் உள்ளது.பிற்காலம் இவற்றிற்கு விடை அளிக்கலாம். சல்மான் ருஷ்டி போன்றவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல்… மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான ,சமூகப் பங்களிப்புகளைச் செய்யும் அமர்த்தியா சென்,பாப்லோ நெரூடா,அருந்ததி ராய்,ராகுல் சாங்கிருத்தியான்,மக்சீம் கார்க்கி போன்றவர்களின் பாதையில் பயணிக்கலாமே?

…….மக்தூம்……

Advertisements