மேன்சன் ரூமில் ரம் பார்ட்டி நாலாவது ரவுண்டைத் தொட்டு விட்டிருந்தது. விமல் மட்டும் இன்னமும் அவன் சொன்ன ஃபிஷ் பிங்கர் சைட் டிஷாக வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அந்த குடுகுடுப்பை ஓசை கேட்டது

“சரியா நடுராத்திரி பன்னண்டு மணிக்கு வந்துர்ராண்டா உன்னோட குடுகுடுப்பை!” கோபியைப் பார்த்து பாஸ்கி சொன்னான்.
கோபி சிரித்துக்கொண்டே ஓல்ட் மங்கை இன்னொரு சிப் அடித்தான். குடுகுடுப்பைக்காரன் குரல் மேன்சன் ஜன்னலில் கரைந்து வந்தது…

“நல்ல காலம் பொறக்குது ! நல்ல காலம் பொறக்குது! தமிழ்நாட்டு அரசியல் தடம் மாறிப் போகுது….”

மேன்சனில் ஓடிய எந்திரன் பாட்டு உடனே பாஸ் செய்யப்பட்ட்து.

“எழுத்தர் அடுத்த தேர்தலுக்கு அப்புறம் ஓய்வெடுக்கப் போறதாகவும் எல்லாத்தையும் சின்னத்தம்பி பொறுப்பில விடப்போறதாவும் சேதி வருது! தேர்தல்ல அதுகேத்தாப் போல ஆள நிறுத்த முடிவாயிடுச்சி. இதெல்லாம் பெரிய தம்பிக்கு புரியாம இல்ல. “இத்தனை எலக்ஷன் ஜெயிச்சேன்! இத்தனை பேர அந்தக் கட்சிலேர்ந்து இழுத்துக்கிட்டு வந்தேன் ..இன்னும் இந்த எழுத்தருக்கு யாரு தெறமயானவன்னு புரியலன்னு தனக்கு நெருக்கமானவங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்காரு. ஆனாலும் வயசு தந்த முதிர்ச்சியா இல்லை பக்கத்திலிருக்கற பெரிசுங்க சொல்ற பக்குவமான்னு தெரியல, மொதல்ல மாதிரி கட்சிய விட்டுப் போறேன்னெல்லாம் மிரட்டாம சரியான சமயம் பாத்துக்கிட்டு இருக்காரு பெரிய தம்பி!”

என்னடா குடுகுடுப்பைக் காரன் வந்தோன்னயே டாப் கியர்ல போறான்” பாஸ்கி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்

“இன்னுமொரு முக்கியமான சேதி ! முக்கியமான சேதி! தமிழ்நாட்டு அரசியல்ல கூட்டு மாத்துற முயற்சி கூடுதலாப் போச்சு!”

எல்லாரும் காதுகளைக் கூர்மையாக்கினார்கள்…

“மத்திய இளவரசந்தான் வடக்க இருக்கற கூட்டுல எல்லாம் முடிவெடுக்குறாரு. ஆனா தெக்க பொறுத்த வரைக்கும் சீமை அம்மா சொல்லுறதுதான் வேத வாக்கு. அதனாலதான் இது வரைக்கும் எழுத்தருக்கு எந்த சோதனையும் இல்லாம போச்சு. ஆனா இப்ப தெக்கயும் இளவரசன் பார்வை திரும்பியிருக்கு. கொடநாட்டு புரட்சியம்மாவும் மத்திய இளவரசும் ஃபோன்ல மனம் விட்டுப் பேசுனதாவும் சேதி வருது. அதுல அம்மா அவிங்க அப்பாருகூட தன்னோட பழைய கால நெனப்பெல்லாஞ் சொல்லி செண்டிமென்டா டச்சு பண்ணி போட்டாஹளாம் ! இந்தச் சேதி எழுத்தரையே கொஞ்சம் கலக்கித்தான் இருக்காம்!”

“என்றா இவன் என்னென்னமோ சொல்றான்…” சிக்கன் ஃப்ரையை மென்றுகொண்டே ரவி சிரித்தான்.

“நல்ல காலம் பொறக்குது ! நல்ல காலம் பொறக்குது ! தமிழ்நாட்டு அரசியல் தடம் மாறப் போகுது!” குடு குடுப்பைக்காரனின் கர கர குரல் இரவைக் கிழித்துக் கொண்டே காற்றில் கரைந்தது.

Advertisements