எழுத்தாளர்கள்…”துண்டு துண்டாய்ச் சதையை மசிக்கூட்டில் இட்டு உழைப்பதாகச்”சொல்வார் லியோ டால்ஸ்டாய்.பேயத்தேவர் பெரியாம்பள என்ற பேய் பிடித்தாட்ட தன் முன்னோர்களின் கண்ணீரையும் தன் உதிரத்தையும் மசிக்கூட்டில் நிரப்பி வைரமுத்து எழுதிய காவியம் 2003 சாகித்திய அகாதமி விருது வென்ற” கள்ளிக் காட்டு இதிகாசம்”.பொதுவாகவெழுதப் படுவது போல பிரபுக்களைப் பற்றி எழுதாமல் பேயத்தேவர் என்ற குடியானவனின் வாழ்க்கைப் போராட்டத்தை இதிகாசமாக்கிய கவிஞரின் ஆளுமைக்கு வந்தனம்.

“பாவங்கள் மொத்தம் ஆறு,கள்ளிக் காட்டில் குடிதண்ணீரில் கைகழுவுவது ஆறாவது பாவம் “
என்று எண்ணும்படியான இயற்கையன்னையால் சபிக்கப்பட்ட பூமி கள்ளிக்காடு.இவ்வாறான “எழில் கொஞ்சும்” பூமியில் பிறந்து வாழ்ந்து மறைந்த பேயத்தேவருக்கு..மாட்டுப்பிரசவம் முதல் கோழிக்குழம்பு பக்குவம் வரை அத்தனையும் அத்துப்படி.அவர் கைபிடித்து,காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்ந்த மகராசி அழகம்மாள்.

முதலாவது பெண் செல்லத்தாயி,முதல் பிள்ளை பெற்ற ஆறாம் மாதமே தாலியறுத்து ஏற்கெனவே சேதாரமாகிப் போன பேயத்தேவரிடமே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வந்தவள்.மொக்கராசு அவள் தலை மகன்,தாத்தாவுக்கு சகலமும் ஆகிப்போனவன்.ஒச்சுக்காளை என்ற, ,மாமனாரின் காசிலேயே பிழைக்க நினைத்தவனுக்கு,இரண்டாந்தடவை வாழ்க்கைப்பட்டு குட்டிப்பாம்பாக அவன் மொக்கராசைப் பார்க்க,பெற்றவரிடம் தான் பெற்றவனை விட்டுப் போகிறாள் செல்லத்தாயி.

அழகம்மாள்,பத்து மாதம் சுமந்து பெற்ற பிரச்சினை சின்னத்தேவன் என்கிற சின்னு.சிறுவனாய் இருந்த போதே விதை பருப்பை வீட்டிலிருந்து திருடியது முதல்,சொக்கலால் பீடி பிடித்தது வரை செய்த தறுதலை.

அப்பனிடம் நேரடியாகவே”எனக்குக் கல்யாணம் பண்ணி வை” என்று கேட்டு பண்ணிக் கொண்டவளை,”மல்லிகைப் பூப்பந்தை,சாணிக்கூடை போட்டு மூடிவைத்த மாதிரி”பாடாய்ப் படுத்தி,விரட்டியடித்த போக்கிரி.
சாராயமும் காய்ச்சத் துவங்கி “போச்சே!என் வம்சம் போச்சே”என்று இடி விழுந்த பனைமரமாக்கினவன்.
தாய் செத்துக் கிடந்த போதும்”சொத்தப் பிரிச்சுக் குடுக்கச் சொன்ன”பிள்ளைப் பூச்சி.

“இத்துப் போன பேயத்தேவன் எத்தனையத்தான் தாங்குவான்” என்று நாமெல்லாம் மருகும் விதமாக புருஷன் கொலை செய்துவிட்டு தலைமறைவாக,நாத்தனார் நாண்டு கொண்டு சாக,பிழைக்க வழியில்லாமல்,பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பெற்றவரிடமே சேர்கிறாள் மின்னல்,தேவரின் இன்னொரு மகள்.

“செப்புச் சிலையழகி,
செம்மாந்த மாரழகி,
உலகத்து அழகையெல்லாம்
ஊர வச்ச பேரழகி”

என்று தேவரின் இளம் பிராயத்தில் அவருக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்தவள் முருகாயி.மழை பெய்வதே தெரியாமல் வானம் பூந்த
வலாய்த் தூவுகையில் திடீரென நனைய நேரும் போது சில்லென சிலிர்க்குமே உடலும் மனமும்!அப்படி சிலிர்க்க வைக்கும் கதை பேயத்தவர்,முருகாயி காதல் கதை.
அவள் வேறொருவனை கட்டி,காலக்கொடுமையால் வாழாமல்,வெட்டியாய் வந்து சேர்கிறாள் தேவரிடமே.அத்தனை காதலும்,பிரியமும் கொண்டிருந்தவள் தன்னிடம் வந்த பிறகும் அத்தனை கண்ணியம் காக்க நம் தேவரால் மட்டுமே இயலும்.

தேவரின் வாழ்க்கையில் மனம் விட்டுப் பேச அழ,வரவு செலவு வைத்து கொள்ளவென இருந்த ஒரே “ஆத்துமா”வண்டி நாயக்கர்.அவர் கஷ்டம் பொறுக்காமல் கடவுள் கொடுத்த “சின்ன வீடு” ஒன்றும் நாயக்கருக்கு உண்டு.

“மனுசன் செத்தா துக்கமில்ல,
ரெண்டாந்தடவ சாவில்ல,
மனசு செத்தா ரொம்பத் துக்கம்,
மறுபடி சாக தெம்பில்லாமப் போகும்,
மனசொடிஞ்சு போகாதீரு ஐயா தேவரே”

என்று நாமும் சேர்ந்து கதறும் விதமாக பல சம்பவங்கள் நடக்கின்றன தேவரின் வாழ்வில்.அழகம்மாள் இறப்பதும்,வண்டி நாயக்கரின் மரணமும்,தேவரின் தாய் போன்ற நிலத்தை வண்டிநாயக்கரின் சின்ன வீட்டுப் பெண் பறித்துக் கொண்டு விடுவதுமாக.

எழுபது வயதைத் தொட்ட நிலையிலும்,தேவர் பேரன் மொக்கையுடன் கிணறு வெட்டுவதும்,வெடிவைத்து பாறையைத் தகர்க்கையில் மின்னலின் மகள் கருகி இறப்பதும்,ஒரு வருடம் படாத பாடு பட்டு பொட்டல் மண்ணை பொன் விலையும் பூமியாய் தேவர் மாற்றுவதுமாய் பயணிக்கிறது கதை.கடைசியில் அணை கட்டவென ஊரைக் காலி செய்யச் சொல்லி சர்க்கார் உத்தரவிட அதிகம் அதிர்ந்தது நாமா?பேயத்தேவரா?என்பது பெரிய கேள்வி!

பிறந்த ஊரைப் பிரிய மனமில்லாமல் தேவர் கலங்குகிறார்.திறந்துவிடப்பட்ட ஆற்று நீர்,கடலெனக் கிளம்பி ஊரை மூழ்கடிக்க யத்தனிக்கையில்,முருகாயி,மின்னல்,மொக்கையை அழைத்துச் சென்று பத்திரமான இடத்தில் சேர்ப்பிக்கிறார்.தன் வீட்டின் பிடிமண் அள்ளவென நீருக்குள் மூழ்கி அவர் அள்ள, அவரைப் பிரிய மனமில்லாத பூமி வீட்டுச் சுவரை அவர் மேல் தள்ளி,தன்னுடனே சேர்த்துக் கொண்டுவிடுகிறது.

சாராயம் காய்ச்சுவது,சவரத் தொழில் லாவகம்,கோவணம் கட்டுவதன் தொழில் நுட்பம்,கிணறு வெட்டுவது முதல் அணை கட்டுவது வரை,வெட்டியானின் வேலை திரண் என்று பிரித்து மேய்கிறார் வைரமுத்து.நம் உள்ளங்களை வீங்க வைத்து,பேயத்தேவரின் முடிவில் நம் கடை விழியில் கண்ணீரை ஒழுக விட்டு,இதிகாசம் எழுதியதன் பெருவெற்றியைப் பெற்று விடுகிறார் கவிப்பேரரசு.

Advertisements