இராணி மேரிக் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பணிபுரிந்த தமிழச்சி,ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் எஞ்சோட்டுப் பெண்,வனப்பேச்சிக்குப் பிறகு வெளிவந்துள்ள மற்றுமோர் கவிதைத்தொகுப்பு மஞ்சணத்தி.

வெள்ளைப் பூக்களையும்,பற்களில் கறையேற்படுத்தக் கூடிய மஞ்சள் பழங்களையும் கொண்ட மஞ்சணத்தி மரத்தை ஒரு தாயாகவும்,சினேகிதியாகவும் பார்க்கும் தமிழச்சி..ஒரு படிமமாக இம்மரத்தை தன் கவிதைகளில் ஆண்டிருக்கிறார்.

” இருத்தலும்,இருத்தல் நிமித்தமும்” என்ற தலைப்பில்,நகரத்தின் ஒட்டாத மனப்போக்கையும்,நகர் சார்ந்த உணர்வுகளானதனிமை,துவேஷம்,பிரிவு,துரோகம்,சுயநலம்,வேஷம் போன்றவற்றை அழகாகக் கையாண்டுள்ளார்.தனித்திருத்தல் என்ற தலைப்பின் கீழ் உள்ளவை,தனிமையின் கொடூரத்தையும்,மறுதலிப்பின் அச்சுறுத்தலையும் வெளிப்படுத்துவன. “ஒரு பிச்சைக்காரனின் ஆழ் தூக்கத்தையும்,சுவரொட்டி ஒட்டுபவனது பெருஞ்சிரிப்பையும்”கவிதையில் காட்டியுள்ள தமிழச்சியின் ஆளுமை பாராட்டுக்குரியது.

“பாலைக்கலி 2”என்ற கவிதையில்__

” பிடாரி களவெடுத்து வந்திருந்தாள்__
மாதாந்திர உபாதைக்கான
மாற்றுத் துணிக்காக
அம்மாவின் சேலையை
அடித்துத் துவைக்கும் முத்து மாரிக்காக –
மெலிதான ஸானிடரி நாப்கின்களை”

என்ற வரிகளில் ,பெருநகரத்துப் பெருமாட்டிகள் அறிந்தேயிராத அடிதட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரமும் துயரமும் தெரிக்கின்றது.

“மஞ்சணத்தி மரம்”என்ற கவிதையில்”என் ஆதித் தாயே மஞ்சணத்தி”என்கிறார் தமிழச்சி.

எத்தனை அழகிய சிந்தனை!பரிணாமக் கொள்கையின் படி கூட நாம்,“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்லிருகமாகிப் பறவையாய்ப்” பிறகு தானே மனிதரானோம்!

கவிப்பரரசு சொல்வாரே”மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்று?

“வானவில்லைப் பார்த்த பொழுதெல்லாம் மனம் விம்மிய” வோர்ட்ஸ்வொர்த்தின் வீட்டிலிருந்து எழுதப் பட்டிருக்கும் “கறுப்பு வெள்ளை வானவில்” அருமையானதோர் இலக்கியச் சிந்தனை.

“நிசாந்தினியின் நீண்ட காதணி”வித்தியாசமான தலைப்பென்று எண்ணி படித்தால்,முடித்ததும் விம்முகிறது மனம்.
பதுங்கு குழிகளில் பயந்து தங்கும் பள்ளிப் பிள்ளைகளைப் பற்றியது இக்கவிதை.

“புன்னகையின் வன்முறை”..பெண்ணியம் பேசும் கவிதை,
பெண்ணிற்கான தேவைகளைக் கூட ஆணே தெரிவு செய்யும் வன்முறையின் மீதான கோபம் தெறிக்கும் கவிதை.

“மழையும் மழைசார் வாழ்வும்” என்பதான கவிதைகள் விரகம்,நேயம்,ஏக்கம்,மரணத்தின் விகாரம் போன்றவற்றைப் பேசுகின்றன.
“கம்பளியையும்,கணப்படுப்பையும்
நோயற்ற இளமை குறித்த பெருமூச்சோடு
பரணிலிருந்து இறக்கி வைக்கிறது
இந்த மழை”என்கிற கவிதை எனக்கு மிகப் பிடித்தமானது.

“வெய்யில் ருசி”யில்__
நகரம் மற்றும் கிராமங்களில் வெய்யிலும்,கோடையும் எவ்விதம் எதிர் கொள்ளப்படுகின்றன என்று கவிதை பேசியிருக்கிறார் தமிழச்சி.
குறிப்பாய்….
“தின்பதற்கு என்ன வாங்கி வந்தாய் என்று
ஓடி வரும் குழந்தைகளிடம்
எப்படிக் கொடுப்பத

சில்லுக் கருப்பட்டியில் உருகி ஓடும் வெய்யிலை” என்பது மிக அருமை.

“ஒரு நல்ல கவிதை முடிந்த பின் துவங்குகிறது” மஞ்சணத்தி கவிதைகள் நல்ல கவிதைகள்!

Advertisements