ஜெயமோகன்,குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தவர்.நிழல்வெளிக் கதைகள்,விசும்பு போன்ற அவருடைய தொகுப்புகளின் வரிசையில்,பெரிதும் பேசப்படுகிற மற்றுமோர் படைப்பு” ஊமைச்செந்நாய்”.செவ்வியல் படைப்புகளை படிப்பதற்கும்,புரிந்து கொள்வதற்குமான மன அமைப்பும்,தயாரிப்பும் உள்ளவர்களை வெகுவாகக் கவரக்கூடிய ஓர் கதை “ஊமைச்செந்நாய்”.மிகப் பிரம்மாண்டமானதாகவும் அதேவமையம் மிக எளிமையானதாகவும் விரிகிரது கதையின் புனைவு.
வில்சன் என்ற துரையின் “வேட்டைநாயாக”__ஆம் நாய் போலவே நடத்தப் படும் வேட்டைத்துணைவனாக வருகிறான்” ஊமைச்செந்நாய்”என்கிற இந்த நாவலின் “கதை சொல்லி”(narrator).ப்ளெட்சர் துரைக்கும் அவன் வீட்டில் சமையல் செய்து வந்த இந்திய (அடிமை)பெண்ணுக்கும் பிறந்த,செந்நிறக்கண்களை உடைய,அதிகம் பேசாதவனாகிய ஊமைச்செந்நாய்.
வில்சன் துரை இன வெறி பிடித்த ,இந்தியர்களை அடிமைகளாக நடத்தும் வேட்டைப்பிரியன்.காலைகடன் கழித்த பிறகு தன்னைச் சுத்தம் செய்யும் வேலையக்கூட வேலைக்காரர்களைச் செய்யச்சொல்லும் கொடூரன்.சமைக்கவும்,தன் உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களை அழைத்து வரவும் தோமா என்பவனை அமர்த்தியிருக்கும் ஆணவக்காரன்,திடகாத்திரமான உடல் அமைப்பு கொண்டவன்.அவனுடைய எல்லாத்தேவைகளையும் நிறைவேற்றும் ஏழைகளை, மனிதர்களாகக் கூடக் கருதாமல் கீழ்த்தரமாகத் திட்டி ,அடித்துத் துன்புருத்துபவன்.“கதை சொல்லியும்”,வில்சனும் காட்டில் உலவி வரும்,மிகப்பெரிதான,மிக நீண்ட தந்தங்களை உடைய,தனித்துத்திரியும் இயல்பினதான,சாதாரண மிருகங்களைப் போலல்லாது__ சிந்திக்கும் திறனுடைய, கொம்பன், என்கிற யானையை வேட்டையாடச் செல்கிறார்கள். பயணத்துக்குத் தேவையான அத்துணை ஏற்பாடுகளையும் தோமாவும்,ஊமைச்செந்நாயும் செய்கிறார்கள்.
“வெய்யில் கண்ணாடிக் குழாய்கள் போலவும்,திரைச்சீலைகள் போலவும்,காட்டருவிபோலவும்,பெரிய அடிமரங்கள் போலவும்,சில இடங்களில் வெள்ளைச் சுவர் போலவும் விழுந்து கிடந்தது”என்று நம்மையும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் ஜெயமோகன்.ஒரு மானை வேட்டையாடி அதைச் சமைப்பது முதல் துரை உறங்கக் கூடாரம் அமைப்பது வரை, துரைக்கு எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுகிறான் ஊமைச்செந்நாய்.முதல் நாள் துரையின் இச்சையைத் தீர்க்கவென ஊமைச்செந்நாய் அழைத்து வந்த சோதி, ஊமையின் தோழி என்று அறிந்து அவனை மிகக்கேவலமான முறையில் இழிந்துபேசுகிறான் துரை.ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மட்டும் அவன் தொட்டானென்றால் அவனைத்தேடி வந்து கொல்வதாகவும் கூறுகிறான்.
கொம்பன் யானை இட்டிருக்கும் பிண்டத்தை வைத்தே அதன் இருப்பிடத்தையும்,அது அங்கு வரக்கூடிய நேரத்தையும் கணிக்கிறான்” கதை சொல்லி”.மனிதர்களை விடவும் அறிவில் சிறந்த கொம்பன்,துரையைக் கண்டு கொண்டு சுதாரித்து விடுகிறது.குண்டு அதன் கால்களைத்துளைக்க,உயிர் பிழைத்து ஓடுகிறது.எரிச்சலடையும் துரை எப்படியாகிலும் அதைக்கொல்ல விழைகிறான்.கொம்பனும் அவர்கள் வருவதை அறிந்து அதற்கு வாகான இடத்தில் பதுங்கிக் காத்திருக்கிறது.பொறுமை இழக்கும் துரை,கொம்பனை உசுப்ப வேண்டி ஊமைச்செந்நாயின் உயிரைப்பற்றிக் கவலைப் படாமல், அவனை மிரட்டி அனுப்புகிறான்.அவனை நோக்கிப் பாய்ந்து வரும் கொம்பனைக் கொல்கிறது துரையின் தோட்டா.
விஷப் பாம்பு ஒன்று துரையைக் கடித்து விட, தன்னைக் கொல்லப் பார்த்த அவனுடைய உயிரைக் காக்கிறான் ஊமைச்செந்நாய்.
“நீ என் நண்பன்.என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன்.சொல் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்”
என்றெல்லாம் உருகுகிறான் துரை.எப்போதும் போல் ஊமைச்செந்நாய் மௌனியாகவே இருந்து விடுகிறான்.
கதையின் முடிவில் செந்நாய்க்கூட்டமொன்று துரத்த,பிடி தவறி பெரும் பள்ளத்துக்குள் விழ இருக்கிறான் ஊமைச்செந்நாய்.தானிட்ட பிச்சையில் உயிர் பிழைத்த இனவெறியனின் உதவி கொண்டு பிழைக்க விரும்பாமல்,உதவ வந்த துரையின் முகத்தில் உமிழ்ந்து விட்டு பள்ளத்தில் விழுகிறான் ஊமைச்செந்நாய்.
“ஆனால் நீ ஒரு நாய்..ஆங்கிலேயன் ஒரு போதும் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை.அதை நீ மறந்து விட்டாய்.நீ என் காலை நக்கும் நாய் மட்டும் தான்.உன்னுடைய செந்நாய்க்கண்களைப் பார்க்கும் போதெல்லாம் உன் தலையைக் குண்டுகளால் சிதறடிக்க எனக்கு வெறி வருகிறது…“என்று துரை உறுமும் வரிகளில் அவனுடைய இனவெறி மனப்பான்மை நம் ரத்தத்தைச் சுண்ட வைக்கிறது.
கொம்பன் யானை சாகும் இடத்தில்,“மிருகம் எப்போதுமே சாவின் மூலம் மனிதனை வென்று விடுகிறது”என்கிறாரே ஜெயமோகன்.நாய் என்று இழிந்துரைக்கப்படும் ஊமைச்செந்நாய் ,கொம்பனை போன்ற ஒரு தீரன்!ஆணவம் கொண்ட துரையின் பிச்சையில் உயிர் பிழைக்க விரும்பாமல்,தானிட்ட பிச்சையில் அவனை வாழ விட்டு,மரணத்தை ஏற்று, கதாநாயகனாகிறான்.
Advertisements