வாசம் என்பதென்ன சுவாசம் நமக்களித்த,
சின்ன உபாயம் மட்டும் தானா?

ஊருக்குப் போயிருக்கும் அப்பாவின் …
அழுக்குச் சட்டையில் வீசுமே அது பாதுகாப்பு!

கனவில் பயந்தலறி அணைப்பேன் அம்மாவை,
சந்தனச் சோப்பில் வீசும்… அது அன்பு வாசம்!

சடங்கான சமயம் அத்தை தேய்த்துவிட்ட சின்த்தால்…
வயிற்றைப் பிசையும் கலவர வாசம்!

புதுப் புத்தகங்கள்,முகர்வேன் பிரித்ததும்…
சுவாசப் பை நிறைக்கும்...பரவச வாசம்.

புலவு சமைக்குந்தோறும் நினைவில் மணக்கும்…
உறவுகள் கூடும் பண்டிகை வாசம்…

பாட்டியின் மீது வீசும் எண்ணைச் சிக்கு,
அது வயோதிகம் நினைவுறுத்தும்..மூப்பு வாசம்!

எப்போதோ சென்ற துக்க வீட்டில் புகைந்த ,
ஊதுபத்திப் புகை..அது மரணம் பற்றிய பய வாசம்.

பள்ளிச் சுற்றுலா நினைவில் கொணரும்..கோடைத் தைலம்..
அது நெஞ்சை விட்டு நீங்காத இளமை வாசம்!

குழந்தைச் சோப்பு முகர மாட்டேன் நான்…
அது பிரசவ அறையின் அலறல் வாசம்!

காற்றில் கலந்தடிக்கும் மருதாணிப் பூ வாசம்..
அது காதல் நினைவு தரும் வசந்த வாசம்!

சவரச் சோப்பு மிகப் பிடிக்கும் எனக்கு!!!
அது…….ம்ம்ம்ம்ம்……!!!
….ஷஹி….

Advertisements