அதட்டும் தொனியிலான உன் பேச்சு,
திமிரும் உன் தோள்களுணர்த்தும் உன் ஆளுமை,

நண்பனை உயிராகவும்,
சகோதரியை விரோதியாகவும்..
பாவிக்கும் உன் மனோபாவம்,

வேகமாய்க் கறுத்தடரும் மீசையில்
ஒளிந்து கொள்ளும் உன் பிள்ளைமை..

இறுகச்சாத்தப்படும் மன மற்றும் அறைக் கதவுகள்..

உன் கைபேசிக்குள் காணாமல் போகும்
உன்னைப் பற்றிய என் கனவுகள்,

முள் போலவும் ,மீண்டும் அலையாகவும்
மீள மீளத் திருத்தப்படும் உன் சிகை,

குளியலறைக்குக் கிடைக்கப் பெறும்
உன்னுடனான கூடுதல் நிமிடங்கள்,

உன் தந்தை,
திடீரென,
என் கணவனாக மட்டும் பார்க்கப்படும்
அவலம்.

இரு சக்கர வாகனமும்,
பின்னமர்ந்து செல்ல தோழியொருத்தியும்,
இல்லாதவனெல்லாம் சபிக்கப்பட்டவன்..
என்ற உன் சித்தாந்தமும்,

வளர்கிறாயா ?விலகுகிறாயா?
என்ற தாபத்தில்
தள்ளுதெனை எக்கணமும்!

உறங்கும் போது…..
உனை….
நீ அறியாமல் பார்க்கும்
அந்த சில விநாடிகள்
தவிர்த்து!
….ஷஹி….

Advertisements