ஆப்கன் பெண் ஆயிஷாவின் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்…நம் நாட்டில் ஆயிஷாக்களின் மூக்கு மட்டுமல்ல நறுக்கப்படுவது…கால்கள் உடைக்கப்படுகின்றன,சிறகுகள் முறிக்கப்படுகின்றன. அதிலும் தமிழகத்தின் தென் பகுதிகளில் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தில்,பெண்களுக்கெதிரான கொடுமைகள் கொஞ்சமல்ல.இங்கு நான் வலியுறுத்திச் சொல்ல விழைவது…தவறு மனிதர்களிடத்தில் தான்..மதத்தில் அல்ல.

பெண் பார்க்கும்போதே இப்பொழுதெல்லாம் மெத்தப் படித்த பெண்ணாகத் தான் கேட்கிறார்கள், வேலைக்கு அனுப்பவா என்றால்.. நிச்சயமாக இல்லை!பத்திரிக்கையில் கௌரவமாகப் போட்டுக் கொள்ளத்தான்! மற்றபடி படிக்காத,விபரம் அறியாத பெண்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதை(!) தான் படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கும். சில பெண்கள் ப்ரொஃபஷனல் கோர்ஸ்கள் படித்து விட்டு இப்படி மாட்டிக் கொள்கிறாகள்!

சரி ஒத்து வரவில்லை, ரத்து செய்து கொள்ளலாம் என்றால், கடுமையான மன,உடல் உளைச்சல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், பெண் வீட்டினர். பெண்ணுக்கு மஹர் கொடுத்து, கட்டி வரச் சொல்லியிருக்கும் மதத்தைச் சார்ந்தவர்கள் என்று கூசாமல் சொல்லிக் கொண்டு, நாத்தனாருக்கு முதற் கொண்டு சீர் செய்யச் சொல்லுகின்றனர்!

தாய் வீடு செல்வது முதல், கணவனுடன் வெளியில் செல்வது வரை எல்லாவற்றுக்கும் பிரச்சினை தான். இதெல்லாம் ஏதோ போன நூற்றாண்டில் நடந்தது இப்பொழுது நிலை மாறி விட்டது என்றெல்லாம் பேசி ஏமாற்றிக் கொள்வதில் பிரயோசனம் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்து, மெத்தப் படித்த மனிதர் ஒருவர் வீட்டில், மனைவி சீராகக் கொண்டு வந்த டி.வி யில் பழுது ஏற்படும் போதெல்லாம் மாமனார் தான் அதை சீர் செய்து தர வேண்டும்! இரண்டாவதாகப் பெண் குழந்தை பெற்று விட்டால்…தொலைந்தது !ஏதோ செய்யக்கூடாத தவறு செய்து விட்டவளைப் போல நடத்தப் படுவாள் அந்தப் பெண்!

ஆயிஷாவின் கதை படித்ததால் மட்டுமல்ல இந்தக் குமுறல்…முறிக்கப்படும் பல சிறகுகளையும், ஒடிக்கப்பட்ட பல கால்களையும் நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் அவலமும் தான்.

Advertisements