சினிமாஞ்சலி : முரளி

நடிகர் முரளி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை அகால மரணமடைந்தார். கிட்டத்தட்ட தன் இருபது வருட திரை வாழ்க்கை முழுவதும் கல்லூரி மாணவனாக வலம் வந்த முரளியின் மரணம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சமீபத்தில் அவர் மகன் அதர்வா நடித்த “பாணா காத்தாடி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. முரளி 47 வயதிலேயே இதயக் கோளாறால் மரணமடைந்திருக்கிறார். 

“இதயம்” படத்தில் உணர்ச்சிகளை உள்ளடக்கி காதலின் கனத்தால் இதயக் கோளாறு ஏற்பட்ட ஒரு தய்ங்கிய காதலனாய் வந்த முரளி இதயக் கோளாறாலேயே மரணமடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம்தான் . பிரபல கன்னட தயாரிப்பாளரின் மகனான முரளி ஏனோ தமிழில் அமீர்ஜான் இயக்கத்தில் அதுவும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பான “பூ விலங்கில்” அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட். இளையராஜாவின் பாடல்கள் “ஆத்தாடி பாவாடை காத்தாட, போட்டேனே பூவிலங்கு” பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தமிழ் உலகம் முதன் முதலில் முரளியை கவனித்தது. வெறும் காதலனாகவே பார்க்கப்பட்ட அவர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த “வண்ணக் கனவுகள்” அவரை ஒரு நல்ல நடிகராய் அடையாளம் காட்டியது. 
ஆனாலும் முரளி உண்மையில் பிரபலமானது விக்கிரமன் இயக்கிய “புது வசந்தம்” படத்தில்தான். அந்தப் படத்தின் மூலம் “மைக் மோகனுக்கு” ஒரு நல்ல போட்டியாளராய் பாடகனாய் முரளி நடித்த படங்கள் ஏராளம். கதிர் இயக்கிய “இதயம்” முரளியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். முரளி அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் பேசும் ஒரு நீள வசனம் அவரின் ஃபேவரிட். எல்லா நிகழ்ச்சியிலும் அதைப் பேசிக்காட்டுவார். இதயத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவால் “கல்லூரி மாணவனாய்” முத்திரை குத்தப்பட்டு அப்படியே வீணடிக்கப் பட்டார் முரளி.மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான “பகல் நிலவு” படத்திலும் முரளி தான் கதாநாயகன்.

முரளி என்றதும் நினைவுக்கு வருவது அவர் நடித்து வந்த அற்புதமான பாடல்கள்தான்…இளையராஜாவுக்கு முரளி என்றாலே தனி பிரியம் போல. முரளிக்கென்றே எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட பாடல்களில் சில
 ஆத்தாடி பாவாட காத்தாட
பூமாலையே தோள் சேரவா

துள்ளி எழுந்தது பாட்டு

ஒரு ஜீவன் அழைத்தது

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

என் பாட்டு என் பாட்டு
சமீபத்தில் முரளியை ஒரு டி.வி ஷோவில் அவர் மகன் அதர
வாவுடன் பார்க்க நேரிட்டது. “எது உண்மை எது பொய்” என்று கண்டு பிடிக்க வேண்டிய ஒரு போட்டியை உள்ளடக்கிய நிகழ்ச்சி. அதில் முரளி தன் மகனுடன் சரி சமசமாய் போட்டி போட்டார். பார்க்கவும் தன் மகனின் அண்ணன் போல இருந்த அவரைப் பார்த்து “இந்த அளுக்கு வய்சே ஆகாதா” என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். ஆனால் வெளியே இளமையாய் இருந்த முரளியின் இதயம்.. அவரை கைவிட்டு விட்டது.. என்ன சோகமோ? “இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே!” என்று  அன்று பாடினார்…இன்று நடந்து விட்டது.
Advertisements