பத்து வயதினளாய் இருந்தேன்..
பள்ளிக்கூட வாசலில் பலூன் விற்றானொருவன்..
ஐந்தே பைசாவுக்கு….
வண்ண பலூனொன்று ,
விலைக்கு வாங்கியதென்னை!

நீலம் ,ஆரஞ்சென்று,
நாளைக்கொரு நிறம் மாறும்!
குளிக்கும் என்னுடன் கூடவே நனையும்,
நான் உறங்கும் போது…
அது மிக விழித்திருக்கும்!

எப்போதும் என் துணை அது..
என் பெற்றோரின் பிரிவெல்லாம்,
களையும் இணை அது!

கணக்கில்..பூஜ்ஜியம் வாங்கிய ஓர் நாளில்..
வானவில் காட்டி ஆற்றுப்படுத்தியதெனை,
ஓட்டப் பந்தையத்தில் தோற்ற நாள் ஒன்றில்,
அதன் வால் பிடிக்கச் சொல்லி,
விண்ணில் சேர்த்தது என்னை!

வகுப்பறையின் வாசலில்,
நாளெல்லாம் காத்திருக்கும்!
தோழியர் சண்டைகளில், எப்போதும் என்
கட்சி சேரும்!
பதின் பருவத்து மயக்கங்கள்
பகிர அதன் செவிகள்
எப்போதும் திறந்திருக்கும்!
அதிர்ச்சிகள்,அச்சங்களில்..அன்போடு
என் கண்ணீர் துடைத்தெறியும்!

பருக்கள் இல்லா சருமம்,
பால் போல் நிறம் என்று..
நான் விரும்பியவாரெல்லாம்
என் தோற்றம் தன்னில் காட்டும்!
பல நாள் பல பொழுது,
அதைப் பார்த்தே என் பசி தீரும்!

ஆனால்….

பள்ளி இறுதியிலே …
பட்டென்று உடைந்தது என் பலூன்!!!

சிறுமியர் ஸ்ரீமதியர் ஆனால்….
செல்ல பலூன் …..
சட்டென்று ….
உடையும் தானே!!!
……ஷஹி….

Advertisements