இந்தியர் நிம்மதி நிலை குலைந்த தேதி…
92 டிசம்பர் ஆறு!
அரசியல் புலிக்கு இங்கு…
மதத்தோல் போர்த்தியதாரு?
சிறு பொறி நெருப்புக் கிளம்பி…
காட்டைக் கொளுத்தி மாயும்!
மத வெறி நெருப்புக் எழும்பி…
நாட்டை அழித்து ஓயும்!
ஜாதீயம் பேசும் நாயை ..

எங்கேனும் கண்டதுண்டா?
மதவாதம் பேசும் கிளியை,
எவரேனும் கேட்டதுண்டா?
மனிதப் பயலை மட்டும்
மதப் பேய் பிடித்து ஆட்டும்!
தேள்களின் கூட்டம் போல,
தேசத்தின் உயிரில் கொட்டும்!
ராமரும் பாபருமா….
கோவில்கள் கேட்டார் சொல்வீர்!
சமாதானத் தூதுவர் பெயரால்,
கொலைக்களம் கட்டாதீர் நீர்!
புறாக்கள் கூட்டம் எல்லாம்
பொதுவாய் அமைதி காக்கும்!
கோவிலிலும் குடியிருக்கும்,
மசூதியிலும் மகிழ்வாய் வாழும்!
வல்லூறுகள் வாழுதற்கே …
வகையாய் இடமது தேடும்!
கிழித்துக் கூறு போட,
அழித்துக் கொலைகள் செய்ய!

குரானும் கீதையும் ஓத
பூமியில் இடமா இல்லை?
மனமே கோவிலானால்
தனியிடம் தேவையில்லை!
சாதி மத துவேஷம் எல்லாம்
சங்கடங்கள் மட்டும் செய்யும்!
சந்ததிகள் வளமாய் வாழ
போற்றுவோம் மனித நேயம்!

….ஷஹி….

Advertisements