அவனுடைய விளையாட்டு மட்டையை
நான் உடைத்த..

மற்றும்…

என்னுடையை மதிப்பெண் சான்றிதழை ,
அம்மாவிடம் நான் அறியாமல்….
அவன் காட்டி கொடுத்த,

போர்க்காலங்களில்…

என்னுடைய தலையணையில்,
அவன் மூச்சும் பட்டுவிடலாகாதென்றும்
அவனுடைய பங்கு தின்பண்டத்தில்,
எனக்கான சலுகைப் பங்கு நிராகரிப்பிலும்
கண்டிப்பாயிருப்போம் தம்பியும் நானும்!

பெற்றோரின் யுத்த காலங்களின் போது…

என்னுடைய கட்டம் போட்ட தலையணை உறை,
கறைபடும் எம்மிருவரின் கண்ணீரால்.

என்னுடைய ஆளுமை குறித்தான
விமர்சனங்களில் அவனும்,
அவன் வாழ்வியல் கொள்கைகள் குறித்த
அதிருப்தியில் நானும்…..
போருக்கான ஆயத்தங்கள்,
புரிந்து கொண்டிருக்கும்
தற்பொழுதுகளில்…..

‘வெளியில் போ’ என்று விட ,
அவனுக்கும்,
முகத்தை முறித்துக் கொள்ள
எனக்கும்..
எளிதாயிருக்கிறது!

இன்று….

அவனுடைய தலையணை உறை,
ஓர்…….பூப்போட்ட ரோஜா வண்ணம்..

என்னுடையதில் காணலாம் ,
என் பிள்ளைகளின் எச்சில் தடம்.
…….ஷஹி…..

Advertisements