கேள்வி1.;வணக்கம் டாக்டர் அகிலா..உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

(டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருடைய புகைப்படம் வெளியிடப்படவில்லை..இணையத்திலிருந்து ஒரு பெண் மருத்துவரை சித்தரிக்கும் படம் போடப்பட்டுள்ளது)பதில்;வணக்கம். ….நான் டாக்டர் அகிலா ஜெகதீசன், MD.Radiation therapist கதிரியக்கச் சிகிச்சை நிபுணர்)..இபொழுது DM.Oncology படித்துக்கொண்டு இருக்கிறேன், சென்னை மருத்துவக் கல்லூரியில்.புற்றுநோய் குறித்த உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.


கேள்வி2.
எல்லோருடைய முதல் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும்
டாக்டர்.புற்று நோய் என்றால் என்ன?புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

பதில்;
புற்று நோய் என்பது, செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து, பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.இந்த செல்கள் பிரிந்து பரவி, மற்ற தசைகளையும் தாக்குகின்றன.பிறகு, ரத்தத்தின் வழியாகப் பரவி இறப்பை உண்டாக்கும்.

மிகவும் முக்கியமான விஷயம் இதுதான்.அறிகுறிகளைப் பற்றின போதுமான விழிப்புணர்வு இருந்தால், பெரும்பான்மையான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதங்களைத் தவிர்க்கலாம்.
ஆங்கிலத்தில் SEVEN WARNING SIGNS OF CANCER என்போம், மிக மிக முக்கியமான அறிகுறிகள் இவை, அனைவரும் எப்பொழுதும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டியவையும் கூட.

1. ஆறாத புண்

2. விடாத இருமல்
3. மார்பில் தோன்றும் கட்டி அல்லது கழலை ( எந்த உறுப்பிலும்) 4.மச்சங்களின் அளவில் ஏற்படும் மாறுதல்
5. மலத்தோடு கழியும் இரத்தம்
6.திடீரென உண்டாகும் பசியில் மந்த நிலை மற்றும் எடைக் குறைவு
7. விழுங்குவதில் உண்டாகும் சிரமம்.

கேள்வி3;
இன்ன வயதில் இன்ன விதமான புற்று நோய் உண்டாகலாம் என்று ஏதும்?

பதில்;
இல்லை ! எந்த வயதிலும் உண்டாகலாம், யாருக்கு வேண்டுமானாலும்.

கேள்வி4;
ரேடியேஷன்தெரபி என்றால் என்ன டாக்டர்?


பதில்;
நோயுற்ற பகுதியில் பாய்ச்சப்படும் X RAYS...அதாவது கதிரியக்கம் தான் ரேடியேஷன்தெரபி .

புற்று நோயாளி ஒருவருக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் , புற்று நோய் பாதிப்புள்ள பகுதியில் கொடுக்கப்படும் கதிரியக்கச் சிகிச்சை தான் ரேடியேஷன்தெரபி.இதைச் செய்வதால் புற்று நோய்க் கட்டியானது அறுவை சிகிச்சை செய்ய தயாராகிறது. அறுவை சிகிச்சை செய்த பிறகு அளிக்கப்படும் ரேடியேஷன் தெரபி, மீண்டும் அந்தப் பகுதியில் நோய்த்தாக்கம் ஏற்படாதிருக்க உதவும்.

கேள்வி5; கீமோதெரபி என்றால் என்ன ?

பதில்;
கீமோதெரபி என்றால் புற்றுநோய்க்கெதிரான
மருந்துகளை ஊசியின் மூலமாக உடலில் செலுத்துவது.

கீமோதெரபி அளிக்கப்படுகிறது

கேள்வி6; புரியும் படியான விளக்கம் டாக்டர், எவ்வகையான கான்சர்களுக்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பீர்கள்?

பதில்;
எந்த கான்சருக்குமே ,…..கழலை… ,அறுவையின் மூலம் நீக்கப் படக்கூடியது என்றால் ,முதலில் அறுவையை தான் பரிந்துரைப்போம்.

கேள்வி7; புற்று நோயினால் ஏற்ப்படக்கூடிய முக்கியமான தொந்தரவுகள் என்ன?

பதில் ;
மிகவும் இம்சை கொடுக்கக் கூடிய தொந்தரவுகள் என்றால்,
1. கடுமையான வலி
2. மூச்சிரைப்பு
3. மஞ்சள் காமாலை இவையே.

கேள்வி8;
புற்று நோய் பரவும் விதம் பற்றி?

பதில்; 1.முக்கியமான ஒரு விஷயம், இது தொற்று வியாதி அல்ல!
2. ஒரு பாகத்தில் இருந்து மற்ற பாகத்துக்கு இரத்தம் மூலம் பரவும்,
3. கத்தி பட்டால் புற்று பரவும் என்பது அறியாமையினால் நம் மக்கள் மனதில் உள்ள மிகத்தவறான கருத்து,
4. புற்று நோய் கண்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதாலோ , அவர்கள் உபயோகித்த பொருட்களை பயன்படுத்துவதாலோ, புற்று நோய் தொற்றாது!

கேள்வி9;
புற்றுநோய் உண்டாக்குவதில், வம்சாவளி மற்றும் பரம்பரைக்கூறுகளின் ரோல் என்ன டாக்டர்?

பதில்;
சரியான கேள்வி! மூலக்கூறுகளும் வம்சாவளியும் புற்று நோய் உண்டாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் பெண்களின் மார்பகப் புற்று நோய், மற்றும் பெருங்குடலில் உண்டாகும் கான்சருக்கு பரம்பைக் கூறுகள் முக்கிய காரணம்! மற்றபடி நம் வாழ்க்கை முறையும், சுற்றுச்சூழல் மாசு, உணவுப் பழக்கங்கள் இவையும் முக்கிய காரணிகள்.

கேள்வி10; பொதுவாக உங்கள் அறிவுறை என்ன?

பதில்;அறிகுறிகள் பற்றி விழிப்பாய்இருத்தலும், ஏதேனும் சந்தேகத்துக்குண்டான அறிகுறி தென்பட்டால் உடனே கவனிப்பதும், மிக மிக முக்கியம். ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப் பட்டால், புற்றுநோய் முழுவதுமாக குணமாக்கப் படக்கூடிய வியாதி தான்.

கேள்வி11.; சரி டாக்டர், ஒருவருக்கு புற்று நோய் என்று உறுதியாகி விட்டால் எப்படி அவரிடம் தெரிவிப்பீர்கள்? How do you break the bad news?

பதில்;
இது மிகவும் கடினமான ஒன்று தான். யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செய்தி தான் இது. அதிலும் நம் நாட்டில் ,we are a very sentimental lot! நாம் உணர்வுபூர்வமான மற்றும் குடும்ப அமைப்பில் கட்டுண்டவர்கள், அதனால் நோயாளியிடம் முதலில் சொல்லாமல் அவர் குடும்பத்தாரிடம் சொல்வோம், பிறகு குடும்பத்தாரின் வேண்டுகோளைப் பொறுத்து, நோயாளியிடம் நாங்கள் சொல்வதோ குடும்பத்தாரே சொல்வதோ இருக்கும்.

சில நோயாளிகளுக்கு இறுதி வரை சொல்லாமலே விட்டு விடுவதும் உண்டு…அவர்கள் கடைசி நிலையில் வியாதி கண்டுபிடிக்கப் பட்டவர்களாய் இருந்து, குடும்பத்தார் அவர்களுக்கு தெரியவே வேணடாம் என்று விடும் போது! ஆனால் குழந்தைகளுக்கு புற்று நோய் எனும் போது தான் நாங்களும் வெகுவாகக் கலங்கிவிடுவோம். அது எங்கள் பணியில் சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு தருணம்.

கேள்வி12.; கேட்கவே மிகவும் சங்கடமாய் உள்ளது. சரி டாக்டர் பெண்களைத்தாக்கும் புற்று நோய்கள் என்ன வகையானவை?

பதில்; பெண்களைப் பொறுத்தவரையில் மார்பகப் புற்று நோய், மற்றும் கர்ப்ப வாய
, கர்ப்பப் பை புற்று நோய்கள் தான் மிகவும் அச்சுறுத்துபவை.

எல்லாப் பெண்களும், கருப்பைக் கோளாறுகளுக்கு PAP SMEAR, பாப் ஸ்மியர் பரிசோதனையை 20, இருபது வயதிலிருந்தே வருடம் ஒரு முறை செய்து கொள்வதும், மார்பகப் புற்றுநோயை முன்னமே அறிந்து கொள்ள , நாற்பது வயதிலிருந்தே பெண்கள், வருடம் ஒரு முறை MAMMOGRAM ,

மாமோகிராம் எனப்படும் பரிசோதனையும் செய்து கொள்வது அவசியம். குடும்பத்தில் இவ்வகையான புற்றுநோயாளிகள் இருந்த பட்சத்தில் மேலும் விழிப்பாய் இருப்பது நல்லது. மார்பகத்தில் உண்டாகும் கட்டிகளைப் பெண்கள் எளிதாக சுயப் பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அப்பகுதியில் பார்வைக்குத்தெரியக் கூடிய மாற்றங்கள், மற்றும் தொடுதலில் தெரியும் மாற்றங்கள் குறித்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி13.; கடைசி கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கான கவனிப்பு குறித்து?

பதில்;HOSPICE என்று சொல்வோம், இறுதி கட்ட நோயாளிகளுக்கான கவனிப்பு நம் நாட்டில் அத்துனை பிரமாதமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், கண்டிப்பாக மேம்படுத்தப் படவேண்டிய விஷயம் அது. ஒருவர் இனி வெகு காலம் வாழ மாட்டார் என்று தெரிந்து விடுவதாலேயே, அவருக்குக் கவனிப்பு தேவையில்லை என்று ஆகுமா? மாறாக ஏற்கனவே கடும் துன்பத்தில் இருக்கும் அவருக்கு தானே அதிக கவனிப்பும் ஆறுதலும் தேவை?


கேள்வி14.;
இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து?

பதில்:
SYMPTOMATIC MANAGEMENT என்று சொல்லக் கூடிய சிகிச்சைதான் செய்யவியலும். அதாவது அவர்களை எத்தனை சௌகர்யமாகவும், வசதியாகவும் அவர்கள் இறக்கும் வரை வைத்திருக்க முடியுமோ, அத்தனை வசதியாக அவர்களை வைத்திருப்பது. அவர்கள் வலியைக் குறைப்பது, நீர் கோவைகளை வெளியேற்றி உதவுவது போன்றவை.

கேள்வி15.; புற்றுநோய் தொடர்பாக எவ்விஷயம் குறித்தாவது எச்சரிக்கை செய்ய விரும்புகிறீர்களா?

பதில்; கண்டிப்பாக …. மிகுந்த உயிர் சேதமும், பொருட்செலவும், மனக்கஷ்டமும் தரக்கூடிய இந்தப் புற்றுநோயை விலை கொடுத்து வாங்குவது என்றால் புகைபிடிப்பதும், மது அருந்துவதும் தான். புகை மனிதருக்குப் பகை..வேண்டாமே! நமக்கு மட்டுமல்லாமல் சுற்றி உள்ளோருக்கும் குடும்பத்தாருக்கும் துயரம் தரக்கூடிய புகைப்பழக்கத்தையும் ,மதுப் பழக்கத்தையும் அடியோடு ஒழித்து விட வேண்டும் . இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாள் தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்,

SAY NO TO SMOKING AND DRINKING.

நல்ல ஆரோக்கியமான ஒரு மனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு சமூகத்தை இந்த பழக
கங்கள் எத்தனை தூரம் சீரழிக்கின்றன என்று பார்க்க வேண்டுமென்றால், எங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள்,

எத்தனை பேருடைய வாழ்வும் ,மகிழ்ச்சியும் ஒரு தனி மனிதனின் தகாத பழக்கத்தால் சீரழிகின்றது என்பதற்கு ,புகை மற்றும் மதுப் பழக்கத்தால் நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு ஆளான மனிதர்கள் தான் உதாரணம்.

நல்ல சீரான உணவு மற்றும் வாழ்க்கை முறை, புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல், புற்றுநோய் பற்றின விழிப்புணர்வு இவை இருந்தால் புற்று நோயற்ற நல் சமுதாயம் உண்டாகும். மேலும் நோய் கண்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். குறைந்த பட்சம் சில மணித்துளிகளை அவர்களுக்காக செலவு செய்யலாமே, ஆறுதல் சொல்வது, அவர்களை இயன்றவரை மகிழ்சியாய் வைக்க முயல்வது என?

மிக்க நன்றி டாக்டர், புற்று நோய் பற்றி தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

நன்றி ஷஹி..வணக்கம்..

புற்று நோய் பற்றின கேள்விகளுக்கு( questions and guidance) டாக்டர் அகிலா பதில் அளிக்க சித்தமாய் உள்ளார்.தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கேட்கலாம்.

……ஷஹி…..

Advertisements