பலிபீடத்தில்..
இன்னொரு ரத்தம் சிந்தும் வரையிலும்,
நடை பெருக்கும் கிழவிக்கு,
நேரத்தில் பிரசாதம்..கிட்டும் வரையிலும்,
அன்னதானங்களில்…
சமபந்தி நடக்கும் வரையிலும்,
தூணில் சாய்ந்தழும் துயரங்களுக்காகவும்,
நேர்ச்சைத் தொட்டில்களில்..
பிள்ளைகள் ஆடவும்,
முகமறியாப் ப்ரார்த்தனைகள் நிகழும் வரையும்..
முதிர் கன்னிகள் மனம் கோணாமல்..
கோவிலில்..பெண் பார்த்து முடியும் வரையும்,
குறுந்தகடுப் பூசாரிகள்…..
கர்பக்கிரகம் நுழையும் நிமிடம் வரையிலும்…
அங்கேயே….இருப்பதாக சாமி சத்தியம் செய்ததாம்!
நேற்றிரவு…பொம்மியின் கனவில்..வந்து!!!

Advertisements