27.10.10 தேதியிட்ட ஆனந்த விகடனில், MUSCULAR DYSTROPHY என்ற தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகளைப் பற்றி படித்ததில் இருந்து ,இயல்பாய் மூச்சு விடவும் கூட ,மிகுந்த குற்ற உணர்வு தோன்றுகிறது!

” எங்கள் உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்களை நாங்கள் உணர்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் எங்களின் கண் இமைகள் இமைப்பதை நிறுத்திக்கொள்ளும், தூங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்தும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால், இன்னும் 200 வருடங்களுக்குப் பிறகு பிறக்கும் ஒரு குழந்தைக்குக் கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில், அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்!” என்று இந்த சகோதரிகள் பேசுவதைப் பார்க்கும் போது, சிறு துன்பங்களுக்கும் , நிராசைகளுக்கும் துவண்டு போகும் நம் மனம் இறுகித்தான் போகிறது…வேதனையாலும், வெட்கத்தாலும்.

வம்சாவளிக் கூறுகளினால் வரும் இந்தத் தசை நோய் மனிதன் தன் உடலை அசைக்க உதவும் தசைகளை செயலிழக்கச்செய்யும். முக்கிய அறிகுறிகள்..

1. வளர் தசைச்சிதைவு
2. சமநிலைக் குறைபாடு
3. நடப்பதில் சிரமம், நடக்கவியலாமல் போதல்
4. கெண்டைக்கால் சதைவளர்ச்சி சிதைவுறுதல்
5. சுவாசக் கோளாறு
6. கண்ணிமைகளை அசைக்கவியலாமல் சிரமம்
7. முதுகும் முதுக்குத்தண்டும் வளைந்து போதல்.

எலும்புத்தசையின் படம்

டிஸ்ட்ரோஃபின் என்ற புரோடின் குறைபாடு தான் இந்நோய்க்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் என்று தான் ஆங்கில மருத்துவ உலகம் சொல்கிறது. வியாதி பீடித்து பத்து வருடங்களுக்கு உள்ளாகவே நோயாளி மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சர்க்கர நாற்காலியில் காலம் தள்ள வேண்டிய கொடுமையோடு, சில அபூர்வ நேரங்களில் நோயாளி முதுமை வரையில் இந்நோயோடே போராட வேண்டி வரலாம்.

மஸ்குலார் டிஸ்ட்ரோபி யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்க ஒரு மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும் என்பதை தங்கள் வாழ்நாள் லட்சியம் என்று கூறும் மாதேவி,வல்லபி சகோதரிகளுக்கு நாம் எந்த விதத்திலும் உதவ முடியாதா?

மாற்று மருத்துவத்தில் இந்த வியாதிக்கு எந்தத் தீர்வும் இல்லையா?

குறைந்த பட்சம் இந்நோயாளிகளின் சிரமத்தைக் குறைத்து, அவர்கள் வாழ்நாளை சிறிதேனும் அதிகரிக்க முடியாதா?

இத்தனை கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் உலகில், மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ,இளங்கோ- கலையரசி தம்பதியரின் இந்தப் பிள்ளைகளுக்கு வலியில்லாமல் அமைதியாக வாழ ஒரு வழி இல்லையா?

(நன்றி விக்கிபீடியா இணையம்.. படங்கள் மற்றும் தசைச்சிதைவு நோய் பற்றின தகவல்களுக்கு )
…..ஷஹி….
Advertisements