“கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை, கவித்துவம், ஒரு வகை விவேகம் அல்லது நகைச்சுவை வெளிப்படுவதற்குரிய வடிவம், மனம் செயல்படுவதன் தடயம்,போடப்படாத அல்லது அழிந்து விட்ட கோலங்களின் புள்ளிகள்” என்றெல்லாம் ஜெயமோகனால் விவரிக்கப்படும், அஃபோரிஸ்ம் (aphorism) எனப்படும் வரிகள் அவருடைய டைரியில் இருந்து எடுக்கப்பட்டு,தனிமொழிகள் என்ற தலைப்பின் கீழ் ஜெயமோகனின் “வாழ்விலே ஒரு முறை”யில் இருந்து…

1. மென்மையான சிறு பூனைக்குட்டி ,மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்?

2. ஒட்டு மொத்த மானுட வாழ்வே ஒரு பிரம்மாண்டமான வேதியியல் நிகழ்வு தான்.. எனத் தோன்றும் கணங்கள் கொடுமையானவை.

3. குழந்தைகள் கற்பிக்கின்றன ,எதைக் கற்பிக்க முடியாதென.

4. கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக்கொண்டிருப்பவை, ஒலிகள்.

5. வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில் புதைத்து விடுகிறோம்.

6. பெரிய நாவல் நம்மை குலைத்து விடுகிறது. திரும்ப அடுக்கும் போது தான் அந்நாவலைப் புரிந்து கொள்கிறோம்.

7. அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?

8. மேய்ந்து கொண்டிருந்த போது தன்னைத் தாண்டி பாய்ந்தோடிய காலத்தை, படுத்துக் கொண்டு அசை போடுகிறது மாடு.

9. மூன்று வயதில் பேருந்தில் மடியில் வைத்துக் கொண்ட பெண்ணின் கன்னவாசனையை, நாற்பது வருடங்களாக நினைவில் வைத்திருப்பது எந்தப் புலன்?

10. பால்யகால நண்பனிடம் நாம் உணரும் தூரம் எதனால் ஆனது?

…..ஷஹி…..
(படங்கள் இணையத்திலிருந்து)
Advertisements