உமா மகேஸ்வரி..ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1985 ம் ஆண்டைலிருந்து எழுதுகிறார். மஹி என்ற புனைபெயரில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. வெறும் பொழுது என்ற கவிதைத்தொகுப்பும் , நட்சத்திரங்களின் நடுவே கவிதைகள் என்றதும் பேசப்பட்டவை. கதா, கணையாழி பரிசுகள் பெற்ற மரப்பாச்சி தாம்பரம் கிருஸ்தவக் கல்லூரியில் பாட நூலாக இருக்கிறது.

நான் அறிந்த வரையில் இத்துனை கவிதை நடையிலான கதாநடை உமாமகேஸ்வரியிடம் மட்டுமே தான் உள்ளது.” மரப்பாச்சி” என்ற தலைப்பிலான இந்த சிறுகதைத் தொகுப்பில், பெண், காலங்காலமாய்ப் படும் பாட்டை தனக்கே உரிய கவிதை நடையில் வெகு இயல்பாகக் கூறியிருக்கிறார் உமா.

1.முதல் கதையான “மரப்பாச்சி”யில் உலகளாவிய , பெண்களுக்கெதிரான வன்கொடுமையான , பெண்குழந்தைகளுக்குச் செய்யப்படும் பாலியல் வன்முறையை கருவாகக் கொண்டுள்ளார். படிக்கும் ஏறத்தாழ அத்தனைப் பெண்களுக்குமே தங்கள் வாழ்விலோ அல்லது தமக்கு மிக நெருகியவருக்கோ, நடந்த அல்லது நடந்து விடுமோ என்று அஞ்சும் கொடுமை கண்ணில் நிழலாடுகிறது. அனு என்ற அந்தக் கதையின் நாயகியான சிறுமியின் வாயிலாக உலகப் பெண்டிர் அனைவருக்குமான அறைகூவலை விடுக்கிறார் உமா.

சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான கற்பனா மாய உலகம் எத்தனை அழகானது?…பதின் பருவம் நோக்கி அது நகரும் போது அவளுள் நிகழும் மாற்றங்கள் எத்தனை நாசூக்கானவை, எத்தனை எத்தனை கனவுகள் ,எவ்வளவு ஏக்கங்கள், தாய்க்கும் கூட நாணும், பெண்மையின் அழகை எத்தனை எளிமையாக ஒரு கொடூரன் தன் உடல் வலிமையினால் சிதைத்து விட முடிகிறது?

இனிமேல் கனவுகள் காணும் உறக்கம் வாய்க்குமா அவளுக்கு?கற்பனையில் வரும் காதலனும் தேற்றி விட முடியுமா அவளை? சிறிது கூட அவிழாத ஒரு மொட்டை விரியவிடாமல் அழித்து விடும் காமுகர்களை என்ன செய்யலாம்? தன் உடல் குறித்த அறுவெருப்பை, இம்மாதிரியான இன்னலை சந்தித்த பெண் ஒரு நாளும் மாற்றிக் கொள்ள இயலுவதில்லை.

2.“நிறைவின் உறைதளத்தில்”..மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் , தன் கணவனின் மனதில் குடியேறாமலே போன தன் வாழ்வு குறித்த பச்சாதாபத்திலேயே” இழுத்து கொண்டு” கிடந்த சரஸ்வதிப் பாட்டியின் கதை. ஆயிரம் பெண்களோடு கணவன் சல்லாபிக்கக்கூடியவன் என்று தெரிந்தும் அவனைச் சகித்த சரஸ்வதியால் தன்னுடைய மருமகளையே சீரழிக்கத்துணிந்த அவனுடைய அசூயையை சகிக்க இயலாமல் போகிறது. மறுதலிப்பை ஏற்கவியலாமல் எங்கெங்கோ சுற்றி மரித்தான் கணவன். இப்பொழுது தன் வாழ்நாள் துயரங்களை நினைத்தோ, கணவனால் சீரழிந்து போன தன் மகன் வாழ்க்கையை நினைத்தோ ,போகாமல் அவதியுறுகிறது சரஸ்வதியின் உயிர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் வெறுத்து போகும் குடும்பத்தார் என்னவெல்லாம் செய்வார்களோ அத்தனையும் சரஸ்வதியின் குடும்பத்தினரும் செய்ய, தூக்கி வளர்த்த பாட்டியின் அஸ்த்தமிப்பைப் பார்க்கவியலாமல் தவிக்கும் சுதாவின் பார்வையில் எழுதப்பட்ட கதை. வாழ்வின் அனர்த்தத்தையும் ,மரணத்தின் கொடூரத்தையும் அதன் போக்கில் கனம் துளியேனும் குறையாமல் சொல்லி முடிகிறது கத
.

3.“ஆண்”… கதை சொல்லி, தன் பிரிய அக்காளின் வீட்டில் தங்க நேரும் பொழுது நடக்கும் நிகழ்வுகளை கதையாக் கூறியிருக்கிறார். தன் அழகான, நேர்த்தியான , ரசனையான அக்கா, தான் அவளாக இருந்திருக்கக் கூடாதா எனப் பலகாலம் ஏங்கியிருந்த அக்கா, ஆணாதிக்க மனோபாவம் கொண்ட கணவனிடம் படும் பாடுகளையும், அவற்றை ஏற்றும் பொறுத்தும் போவதே பத்தினித்தனம் என்றெண்ணி மயங்கும் மனோபாவத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்து, திருமணம் என்ற ஒன்றால், ஒரு ஆணின் நுழைவால், உயிருக்குயிரான இருவருக்குள் ஏற்படும் விலக்கம் குறித்த ஆதங்கத்தின் பதிவு “ஆண்”.


“இந்தப் புடவை எவனோ ஒரு ஆணாதிக்கவாதியின் கண்டுபிடிப்பு தான் அக்கா, உடுத்த சிரமமாயும் ,அவிழ்த்தெறிய சுலபமாயும்”..கிண்டல் போல, சீண்டல் போலத் தோன்றும் இந்த வரிகளுக்குள் அடங்கி விடுகிறது மொத்தக் கதையும்.

4.”வருகை”.. திருமணம் ஒன்றே பெண்ணாய்ப் பிறந்ததன் ஜென்ம பலன் எந்த எண்ணத்தோடே வளர்க்கப்படும், திருமணம் செய்விக்கப்படும், கனவுகள் மட்டுமல்லாமல் அவற்றைக்காணுவதற்கான அனுமதிகளும் மறுக்கப்படும் லச்சோப லட்ச பெண்களின் ஒட்டு மொத்த கண்ணீர்த்திவலை “வருகை”. திருமணத்துக்கு முன் தந்தைக்கும், பிறகு கணவனுக்கும் கட்டுப்பட்டு சேவைகள் செய்து வாழ்வதே தவிர வேறொன்றுக்காவும் அவள் பிறக்கவில்லை .

5.”கரு”,…. இலக்கியத்தின், எழுத்தின் மீது மிகுந்த காதல் கொண்டவள் கதாநாயகி லதா. திருமணம், சமையல், மையல், குழந்தை, குடும்பம் என்ற வட்டத்தில் சிக்கிக்கொள்ளும் பல ஆயிரம் லதாக்களின் பிரதிநிதியாக அவர்களின் வாழ்வனுபவத்தை இயல்பான கதையினோட்டத்தில் சொல்லி முடிக்கிறார் உமா. கருப்பையே தான் பெண், பெண் என்பவள் அவள் கருப்பை தான் என்ற ஏகதேச சிந்தனையின் வலியே “கரு”.

6.” நெடி” ..மென்மையான, இரக்க சுபாவம் கொண்ட நாயகி நந்தினி. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ள வேண்டியிருக்கும் அவலத்தைத் தாங்கவியலாமல் பாவம் புரிந்துவிட்ட மனநிலையில் , நிராதரவாகவும், பாதுகாப்பில்லாமலும் உணரும் நிகழ்வை எழுத்தில் வடித்துள்ளார். வெகுவாகப் பேசப்பட்ட விடயம் என்றாலும் உமாவின் எழுத்தில், அதன் வீரியத்தில், அவலத்தின் சகிக்கவியலாத் தன்மையும், சுயநலமாக உள்ள சமூகத்தின் செயல்பாடும் முகத்தில் அறைகிறது. சமூகம் என்றால் வேறென்ன நானும் நீங்களும் தான்!

7.” கதவு திறக்கும் கணம்”.… சமூகம் மற்றும் தனி நபர் பார்வைகளில் ஒரு விதவையின் வாழ்வும், அவளுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவள் துணிந்து விடும் போது அதனால் அவள் மகளின் மனம் படும் பாடும், தாயின் இன்னொரு முகத்தை கண்டுவிட்டதால், அச்சிறு பெண் இழந்து கொண்டிருக்கும் குழந்தைமையின் அருமையையும் பேசும் கதை. வாழ விரும்பும் வயதில் விதவையின் கணவனைக் கொள்ளை கொண்ட காலனை சொல்வதா? அவளும் பெண் தானே, உணர்வுகளைக் கொல்ல எவரால் இயலும் என்றென்னாமல் இகழும் சமூகத்தை சொல்வதா? தன் இச்சைகளைப் பிரதானப் படுத்தி மகள் மனதைக் கூறு போட்ட அவளை நோவதா? என்ற பல கேள்விகளை நம் முன் வைக்கும் கதை.

“அறுத்த முண்டைக்கு கொழுப்பப் பாத்தியா” என்ற கேள்விக்குப் பதிலாக வருவது ” அவரவர் உடம்பு அவரவர் இஷ்டம் அவரவர் வாழ்க்கை” என்ற சாட்டையடி.

8.”தொலைந்தவன்”….. நம் நாட்டில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் நடப்பது , கதையாக நம் முன். ஆண் குழந்தைக்கான முயற்சிகளின் தோல்விச் சின்னங்களான நான்கு பெண்குழந்தைகளில் ஒருவள் கதைசொல்லி.

தவப்புதல்வனே போற்றி!
குலக்கொழுந்தே போற்றி,
வம்ச விளக்கே போற்றி ,
வாரிசாக வந்தானே போற்றி!

என்னும் வரிகளில் நகைச்சுவை அல்ல, காலங்காலமாக சிறுமைப் படுத்தப்பட்டு, ஆண் உசத்தியானவன் என்ற மூளைச்சலவை செய்யப்பட்ட ஒட்டு மொத்த பெண்சமூகத்தின் எரிச்சலும், கோபமும் அல்லவா தெரிக்கிறது? தன் சித்தியுடனே உறவாக இருக்கும் அவனுடைய நீசத்தனத்தைக் கூட ” ஆம்பிளப் பிள்ளைன்னாகொஞ்சம் அப்படி இப்படி தானிருப்பான் .நாம தான் விட்டுப் பிடிக்கணும்” என்ற வழக்கமான வாசகத்தில் பூசி மெழுகுகிறார் தகப்பனார். அவரும் ஆம்பிளை தானே?

தம்பி என்ற பிறந்த பாசம் உள்ளத்தை அறுக்க, அவன் சிறிது சிறிதாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து ,தொலைந்தே விடுவதை இயல்பாகவும் நம் கணகள் கசியும் வண்ணமாகவும் எழுதியுள்ளார் உமா.

9.” புதர்கள்”.… கதை சொல்லி மீனா. அவள் வசிக்கும் தெருவில் திடீரென்று தோன்றும் நிராதரவான, மனம் திரிந்த நிலையில், பொட்டுத்துணி உடுத்தாமல் திரியக்கூடிய இளம் பெண் ஒருத்தியின் வரவால் ஏற்படும் சம்பவங்களை கோர்வையாக்கி உள்ளார்.

“நீண்ட கரும்பழுப்புச் சுடரென பகலில் நின்றெரிந்தது அவளது நிர்வாணம்” என்கிறார் உமா. எரிந்த அவள் நிர்வாணம் வெளிச்சமிட்டுக் காட்டியது , மனங்களின் ஆழத்தில் புதைந்திருந்த அழுக்கை, காமத்தை, இச்சையை.

எதனாலும் அசைவுறாத, எதிலும் பற்றில்லாத, எதையும் பொருட்படுத்தாத அவளின் உடல் அழகில் இச்சையுற்ற மிருக்கங்கள் சில ஓர் இரவில் அவளை நாசம் செய்கின்றன. எப்போதும் அவளைப் பற்றியே பேசி கொண்டிருந்த தெரு வழமையே போல் அவளைக் கைவிடுகிறது. காணாமல் போகிறாள் அவள். அவளைக் காவுகொண்ட பாழ்வெளி அமர்த்தலாக இறுகி இருந்தது என்று முற்றுகிறது கதை.

இறுகி உள்ளது பாழ்வெளி மட்டும் தானா?

10.”மலையேற்றம்”….. மேலே மேலே உயர வேண்டும் என்ற பெண்ணின் தாகமும், சிகரமென்பது வெறுமை, நிச்சலனம், ஒன்றுமில்லை என்று புரிபடும்போது தோன்றும் நிறைவும், ஏமாற்றமும் எல்லாமுமான பதிவு.

“அதிகமான, தீவிரமான தேவைகள் கூட சுமைகளாகவே உருக்கொள்ளும். அவை நம் ஏற்றத்திற்குப் பெரிய தடையாயிருக்கும்”…

உமா சொல்ல விழைவது என்ன? பெண்ணின் மீது சுமத்தப்படும் பெருஞ்சுமைகள் அவளை நகர விடாமல் செய்யும் அவலத்தையா?

11.”மரணத்தடம்” ……ஒரு பெண்ணின் மனதுக்குள் எப்போதும் உறைந்து போயிருக்கும் பிசிறற்ற அன்பின் தேடல், அந்த உணர்வே ஒரு மானசீகக் காதலனாக உருக்கொண்டுவிடும் கற்பனை, அதிலும், நோயின் தீவிரத்தில், உயிர் போகும் துன்பத்தில் அவனோடு கூடி விடத்துடிக்கும் அவளுடைய ஆன்மா. பெண்ணின் நிறைவேறாத ஆசைகளும் , வேட்கைகளும் ஒரு கற்பனைக் காதலனால் மட்டும் தான் ஒரு சிறிதேனும் அமைதி அடைகின்றன எனும் விதமாகத் தான் புரிபடுகின்றது மரணத்தடம்.

அன்பிற்கான அதி தீவிரத்தேடலும், பெண் மனம் அறிந்து அவள் விரும்பும் வண்ணம் அவளை பாவிக்கும் ஆண் இன்னமும் இந்தப் பூமியில் பிறக்கவேயில்லை என்ற செய்தியுமே மரணத்தடம் கூறு
் செய்தி.

12.”இறந்தவளின் கடிதம்”..… கதை சொல்லி அனுவின் சகோதரி பானுவின் வாழ்வு மற்றும் மரணப் போராட்டத்தின் கதை. வாழ்வின் அபத்தமும், முரணான விழைவுகளின், தேடல்களின், அவஸ்தைகளின் வெற்றுக் குவியலான அதன் தன்மையையும் , மரணப் படுக்கையில் அவதியுறும் ஓர் ஆன்மா எவ்வாறெல்லாம் துன்புறுகிறது, நாமெல்லாம் அஞ்சி நடுங்கும் மரணம் எப்படி ஒரு புதிரான இன்பமாகவே இருக்கக் கூடும் என்றெல்லாம் பேசுகிறது கதை.

“அறிந்ததின் எல்லைகள் மிகவும் சிறியவை; அதற்கான போராட்டத்தில் ஒரு பயனும் இல்லை. அனைத்தையும் அதனதன் போக்கில் நகர விடுத்து வேடிக்கை பார்க்கலாம்”
என்று போகிற போக்கில், ஒரு தேர்ந்த ஞானியினுடையதே போன்ற ஒரு மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை, சர்வ சாதாரணமாக சொல்லிப் போகிறார் உமா.

13.”தற்கொலை”.…. இதுவும் மரண பயம் , மற்றும் வாழ்வு குறித்த கேள்விகள்,”அம்மா” என்ற ஒரு ஸ்தானம் ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களையும், அவளோடே பிறந்த வீம்பையும் ரோஷத்தையும் கூட தூக்கி எறியும் படி பணிக்கிறது என்பதைப் பேசும் கதை.

14.” ரணகள்ளி” …பதின் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமி, தன் தாயை இழப்பதால் சந்திக்கும் நிராதரவான , பாதுகாப்பின்மையின் அச்சுறுத்தலைச் சொல்லும் கதை. ஒரு சிறுமியின் உற்ற தோழியாக, ஆசிரியையாக , பாதுகாக்கும் தெய்வமாக எப்படி ஒரு தாயால் மட்டுமே இருக்கவியலும் ,அவள் மரித்தால் அச்சிறுமியின் வாழ்வும் மனமும் எப்படியெல்லாம் சிதைவுறும் என்பதை மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறார் உமா.

தன் பேனாவின் நாத்துளையில் நம் மனங்களைக் கட்டி, புத்தகத்தோடு நம் ஆன்மாவை இணைத்துத் தைத்துவிடுகிறார் உமா. தொகுப்பைப் படிப்பது ஒரு இன்பமான அனுபவமா? என்றால்… இல்லை!

கவிதை நடையில், இயல்பான வீச்சில், ஒரு காட்டாற்றின் வேகத்துக்குச் சமமாக செல்லும் அவருடைய எழுத்தின் வீச்சில் நாம் புத்தகத்தோடு ஒன்றி தான் விடுகிறோம் என்றாலும், பெண்ணின் தத்தளிப்பைப் பற்றியதேயான கதைகள் எல்லாம் என்பதால் வாசிப்பு ஓர் துன்பமான அனுபவமாகத் தான் இருக்கிறது. அதில் தான் உமாவின் வெற்றியும் உள்ளது.

ஏதோ அவருடைய கற்பனை ஊற்றிலிருந்து புறப்பட்ட கதைகளாகத் தெரியவில்லை இவை. கதை சொல்லிகள் தத்தம் துயரங்களை , கதைகளை உலகுக்கு உரைக்க உமாவைத் தேர்வு செய்து விட்டார்கள் என்று தான் நினைக்க முடிகிறது.
…ஷஹி…

Advertisements