“கேள்விகள் சாவிகள் ; பூமியின் புதிர்களை,வாழ்வின் ரகசியங்களை அவை திறக்கின்றன” என்கிறார் வைரமுத்து, தன் “பாற்கடல்” என்ற, வாசகர் கேள்விகளுக்குத் தான் அளித்த பதில்களின் தொகுப்பிலிருந்து.

1.வானில் தவழும் நிலா-தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது?

” நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்- வளர்ந்த நிலாவுக்கு கரை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை”.

2. வாழ்க்கை என்பது?

“கல்யாணத்துக்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.”

3. எப்போது ஆச்சர்யம் வருகிறது?

” தலையில்லாமல் ஆறு நாட்கள் வாழுமாம் கரப்பான் பூச்சி!
ஒரே நாளில் ஐம்பது முறை உறவு கொள்ளுமாம் சிங்கம்!
கால்களைக் கொண்டு ருசி அறியுமாம் வண்ணத்துப் பூச்சி!
மனித உடலின் கடினத்தசை நாக்குத்தானாம்!
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தூங்குமாம் நத்தை!
இப்படி அறியாத ஒன்றை அறிந்து கொள்ளும் போதோ , முடியாத ஒன்றை முடித்துக் காட்டும் போதோ, காணாத ஒன்றைக் கண்டு கொள்ளும் போதோ வருகிறது ஆச்சர்யம்!!!

4. நீங்கள் எம்.பி. ஆகவில்லையா?

“ஆகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. “Master of Poetry”( மாஸ்டர் ஆஃப் பொயட்ரி)”.
5. மனிதன் எங்கே கெடுகிறான்?

” மனிதனும் மீனும் ஒன்று தான். இர்ண்டுமே அழுக ஆரம்பிப்பது தலையிலிருந்து தான்.”

6. வாழ்க்கை எங்கே இருக்கிறது?

” இன்னும் கொஞ்சம் பசியுள்ள போதே நிறுத்திக் கொள்ள வேண்டும் உணவை ,இன்னும் கொஞ்சம் சக்தியுள்ள போதே அடக்கி விட வேண்டும் கலவியை, இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்தி விட வேண்டும் பணத்தை , இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டு விட வேண்டும் மூச்சை,

இந்த முயற்சிகளுக்கும் – முடியாமைக்குமான இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை.”

7. காலை உணவாக என்ன சாப்பிடுகிறீர்கள்?

” முளை கட்டிய பயறு:
முட்டையின் வெண்கரு:
மிளகளாவிய காய்கறி:
மெல்லிய ரொட்டி:
கொழுப்பு நீக்கப் பட்ட பாலில் கொதிக்க வைத்த ஓட்ஸ்:
பேரீச்சம் பழம் இரண்டு;
பப்பாளி ஆறு துண்டு;
இவற்றில் ஒன்றிரண்டு மாறலாம்; இன்றிரண்டு குறையலாம்.
எப்போதாவது சாப்பிடும் இட்டிலிக்கு இரண்டு சட்டினி இருக்கும். ஒன்று தக்காளி சட்டினி; இன்னொன்று தேங்காய்ச் சட்டினி.
இதில் தக்காளி சட்டினி மனைவி மாதிரி; தொட்டுக்கொள்ளலாம். தேங்காய்ச்சட்டினி மைத்துனி மாதிரி; தொடாத வரைக்கும் நல்லது; அதில் கொழுப்பு உள்ளது.”

8. மனித உறவுகள் மலிவாகிவிட்டனவா?

மலையாளக் கவிதை ஒன்று;ஐயப்பப் பணிக்கர் எழுதியது. தந்தையின் மறைவுக்கு அமெரிக்கவிலிருந்து செய்தி அனுப்புகிறான் மகன்.

“விடுமுறை இல்லை;
வீடியோ அனுப்புங்கள்;
வாரக்கடைசியில் பார்த்து வருத்தப்பட.
வீடியோ கலரில் இருப்பது உத்தமம்;
ஏனெனில் –
மலையாள மரணம் பார்த்ததில்லை என் அமெரிக்க நண்பர்கள் யாரும்”

மனித உறவுகளில் ,மரணம் இ-மெயில் ஆகிவிட்டது; சடங்கு வீடியோவாகிவிட்டது.

9. வர வர ஊடகத் தமிழில் பிழைபட எழுதுகிறார்கள் ! கவனிக்கிறீர்களா?

“கவலையோடு கவனிக்கிறேன்.
“கொழும்புவில் பதட்டம்” என்று எழுத
ுகிறார்கள். ஒரே தொடரில் இரண்டு பிழைகள். “கொழும்பில் பதற்றம்” என்றெழுத வேண்டும். “குழம்புவில் உப்பில்லை” என்றெழுதுவார்களா? அது போலத்தான் கொழும்புவில் என்பதும்.

குற்றச்சாட்டு என்பது பிழை; குற்றச்சாற்று என்பதே சரி;
தூசி என்பது பிழை; தூசு என்பதே சரி.
மீனவர்களை மீட்டி வந்தார்கள் என்பது பிழை; மீட்டு வந்தார்கள் என்பதே சரி. வென்னீர்- தேனீர் தவறு; வெந்நீர்- தேநீர் சரி.
உடித்தி வந்தாள் தவறு; உடுத்து வந்தாள் என்பதே சரி.
திருநிறைச்செல்வி -தவறு; திருநிறை செல்வி சரி.
கோர்த்தான்- தவறு; கோத்தான் சரி.
சுவற்றில் , பிழை; சுவரில் சரி.
இதற்குத் தமிழாசிரியர்கள் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். அடித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கன்னத்தில் அல்ல எண்ணத்தில்.
சீனாவில் போல அரசுக்குழு ஆய்ந்து அறிவிக்கும் முத்திரைச்சொற்களையே ஊடகங்களும், பாட நூல்களும் பயன்படுத்த வேண்டும்.

10. சலிக்காத பத்து?

ஜன்னலோர மழை .

தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.

உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.

ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.

சாலையோர மரங்கள் .

மலைகோதும் மேகம்.

மல்லிகை வாசம்.

கடந்து போகும் ரயில்.

பொன்மாலைப் பொழுது.

போயிட்டு வா மகனே!
….ஷஹி…

Advertisements