3.11.10 தேதியிட்ட ஆனந்த விகடனில், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், இறையடி சேர்ந்த தன் துணைவியாருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தார். திருமதி.மஹபூப் பேகம் அவர்களின் குணநலன்களைச் சிலாகித்து, ஆஸ்த்துமா நோய்க்கு அவர் பலியான செய்தியை கூறியுள்ளார். மஹபூப் என்றால் காதலியாம்! எத்துனை பேருக்கு, மனைவியே காதலியாகவும் அமைவாள்? காதல் பறவைகளாய் அவர்கள் வாழ்ந்தது, அவர் தம் கட்டுரையின் வாயிலாகப் புலனாகிறது.46 ஆண்டுகாலம் சண்டைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்! இன்றைய காலகட்டத்துக்கு இவர் போன்ற தம்பதியரின் வாழ்வு பெரிய பாடம்!என் மனதை வெகுவாகப் பாதித்த அந்தக் கட்டுரையையே கவிதை வடிவில் புனைய முயன்றிருக்கிறேன்…

எங்கு மறைந்தாய் மஹபூப்..

கனிவான உன் முகம் காலனவன் கண்டிருந்தால்,

கனிந்துருகி அவனும் கசிந்திருப்பான்,
முகத்தை ஏன் மறைத்து உறங்கினாய்?
என் அகத்தில் இருள் சேர்த்து நீங்கினாய்.

தனியொரு கனிமரமே தோப்பாகித் தாங்கினாய்,
இளமையில் இனித்தாய்,
நடுமையில் தோழியானாய்,
முதுமையில் தாயாய்த் தாதியானாய்.

நாரில் பூத்திட்ட பூக்களாய் இருந்தோமே..
என் மஹபூபைப் பறிக்க பூகம்பம் ஏன் வந்தது?
என் உயிர் எனை நீங்கி சொல்லாமல் ஏன் சென்றது?

சோலை போல் நிழல் பரப்பி, .
சுமை எமை வருத்தாமல் தாங்கினாய்..
பாலையில் தவிக்கவிட்டு பாங்கி எங்கு ஏகினாய்?

உன்னை விடப் பெரிய வரம் கேட்டிருந்தேன் என்றால்,
அந்த அல்லாவும் திகைத்திருப்பான் இயலாது என்று!
கூறாமல் சந்நியாசம் கொண்டிருத்தல் நன்று,
உனைத் தவிர எவரையும் மணந்திருந்தால் அன்று!

இறையவனின் விருந்தினனாய் ஆஸ்துமாவை நினைத்தாய்,
உன் ஸ்வாசப்பையையே விருந்தாகச் சமைத்தாய்.

என் துடிப்பில் உன் மூச்சு என்று மட்டும் இருந்திருந்தால்..
துடியாய்த் துடித்தேனும் உன் துயர் நீக்கிப் பார்த்திருப்பேன்..
இரைப்புக்கு இணங்கி முடிந்தது உன் பாடு..
உனக்கென்ன அமைதி கொண்டாய்,
என்னில் விஞ்சியது வெறும் கூடு.

இறைவன் திருமதி.மஹபூப் அவர்களின் ஆத்மாவுக்கு சாந்தியையும், கவிக்கோவின் மனதுக்கு சமாதானத்தையும் அருள்வானாக.

…ஷஹி..
Advertisements