• காதல் மழைக்காலம்…
 • குடையாய் வருவாயா?
 • இல்லை..
 • மழையாய் வருவாயா?

 

 • நீண்ட இடைவெளிக்கு பிறகு.. ஓரு மாலை நேரத்து அடை மழை பொழுது..
 • உன் நினைவுகளை.. என்னுள் மறுபடியும் எழுப்பிவிட்டு செல்ல…

 

 • அது ஒரு கிராமத்து மழைக்காலம்..
 • ஒற்றை குடையில் நீயும் நானும்..
 • நனைந்ததும்… நனையாததுமாய்…
 • ஊர் சுற்றிய ஞாபகங்கள்..

 

 • நகரத்தின் பரபரப்பு வாழ்க்கையில்..
 • மழை ரசிக்க யாருக்கும் விருப்பமில்லை..
 • உங்களுக்குமா?
 • நீ  கேட்பது எனக்கும் கேட்கிறது..
 • இரை தேடி திசை மாறிய தேடல்களில்
 • வாழ்வை மறந்துதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

 • பள்ளி வயது காலம் முதலே..
 • உங்களுக்கும் மழைக்கும் கண்ணாமூச்சு என்பாய்..
 • நீங்கள் நடந்தால் பெய்கிறது..
 • நீங்கள் நின்றால் நிற்கிறது என்று கேளி செய்வாய்…

 

 • பேய்ந்துதான் பாரேன்..
 • மழைக்கு சவால் விட்டு நடந்த காலங்கள்.. அவை..
 • மழைக்கு பயந்து ஒதுங்கியவன் அல்ல நான் … 
 • அது உன் வீட்டுச் சுவராய் இல்லாதவரை…

 

 • வாசலில் நீ..
 • விண்ணிலிருந்து.. போட்டியிட்டு விரையும்.. 
 • மழைத்துளிகள்..
 • எந்த துளி உன்னை முதலில் தொடுமாம்?

 

 •  மழை நாளில் நான் மறந்தும் குடை தொடுவதில்லை..
 • மழை பிடித்தவர்களுக்கு.. குடை பிடிப்பதில்லை..
 • ஆனாலும் உன் குடை மட்டும் விதி விலக்கு.

 

 • நீ எடுத்து வரும் குரும்புக்கார குடைக்கு…
 • மழைக்கும் ஆசை…
 • வெயிலுக்கும் ஆசை..
 • மழை நாளில் உன்னோடு வர வேண்டுமாம்..
 • ஆனால் மழை வேண்டாமாம்.
 • நீ நெஞ்சோடு சேர்த்து அணைத்த புத்தகங்களோடு…
 • ஒரு பக்கமாய் இருந்து விட வேண்டுமாம்…     
 • புத்தகங்களோடு…புத்தகமாய்…
 • நீ விரிக்காத குடை…

 

 • விரியும் ஆசைகளை..
 • மடக்கி வைக்க முடியமால்… நான்…

 

 • மழை மறைக்க குடை எடுத்ததில்லை நீ…
 • நம் இடைவெளிகளை குறைப்பதற்காகவே.. அந்த குடை..

 

 • ஆளரவமற்ற சாலைகளில்..
 • உன் அவசர… அவசரமான..
 • தாவணி தலை துவட்டல்களுக்காவே…
 • இன்னும் கொஞ்சம் நனைவேன் நான்…

 

 • சில்லென்ற சிலீர் மழை..
 • உன் மேல் வீழ்ந்து குளிர் காயும்.
 • வீழ்ந்து வழிந்த மழைத்துளிகளை பார்த்து
 • மற்ற மழைத்துளிகள்
 • மறு ஜென்மம் வேண்டும்.

 

 • மழை முடிந்து சாரலில்..
 • நம் ஊர் நோக்கி நடக்கையில்..
 • உன் வீடு.. இன்னும் கொஞ்சம் தூர இருக்க கூடாதா?
 • மனசுக்குள் ஆசை கேள்வியெழுப்பும்..

 

 • வெளியில் நனைந்த நான்
 • உள்ளுக்குள் காய்வேன்

 

 • ஈரப்புத்தகங்களில் ஓரப்பக்கங்களில்
 • எழுதி வைத்த என் புனைப்பெயர்
 • அழிந்து விடுமே என்ற கவலை உனக்கு..

 

 • காய்ந்து பிரிய வேண்டுமே என்ற கவலை
 • நனைந்த உன் உடைகளில் ஒட்டியிருக்கும் மழைக்கு..

 

 • தோழி…
 • அந்த நாட்களில் நாம் நனைந்து காய்ந்து விட்டாலும்..
 • மனசு மட்டும்… இன்னும் ஈரமாகவே…இருக்கிறது
 • விழிகளும்தான்… 

 

 • பிறிதொரு மழைக்காலத்தில்..
 • குடையாய் வருவாயா?
 • இல்லை..
 • மழையாய் வருவாயா?
Advertisements