• என் உயிர்த்தோழனே..
 • எங்கே இருக்கிறாய்?
 • எப்படி இருக்கிறாய்?

 

 • பொறியல் கல்லூரியில்
 • சி புரோகிராம்களையும், சிட்னி ஷெல்டன்களையும்
 • பேசிய முகங்களுக்கு நடுவே..
 • பாரதியையும் பாமரக்கவிதைகளையும் தேடிய
 • உன்னைப் பார்த்து உண்மையிலேயே வியந்துதான் போனேன்.

 

 • அந்த கிராமத்து அமைதி
 • சற்றே வெட்கப்படும் ஆண்பிள்ளை
 • இந்த நகரத்து யுவதிக்கு
 • புதுமையாய்.. புரியாத ஆச்சரியமாய்..
 • நீ.

 

 • மேடைப் பேச்சில்
 • மின்னலாய்.. இடியாய்..
 • கவிதையில்.. சாரலாய்..
 • சர்க்கரை மழையாய்..
 • நீ பொழிந்து இறங்கிய ஒரு பொழுதில்..
 • கல்லூரி மட்டுமல்ல..
 • இந்த கான்வென்ட் கன்னியும்
 • தமிழை நேசிக்க ஆரம்பித்தது..

 

 • உன் நட்பு வேண்டி
 • தவமிருந்த நட்சத்திரங்களின் நடுவே..
 • இந்த மின்மினி பூச்சிக்கு..
 • வந்தது வரம்..

 

 • மடி கொடுத்த தாயாய்..
 • மழலை விரல் பிடித்த தந்தையாய்..
 • தோள் கொடுத்த தோழனாய்..
 • நாளும் ஞானம் கற்பித்த குருவாய்..
 • இன்முகத்தோடு பன்முகம் காட்டிய பகலவன் நீ

 

 • வார்த்தைகளை தாண்டி..
 • என் மௌனங்களையும் புரிந்தவன் நீ..
 • கண்ணீரை தாண்டி..
 • என் வலிகளையும் தெரிந்தவன் நீ..

 

 • நம் நட்பில் காதலை கலப்படம் செய்து
 • கல்லூரியில் கதை சொன்ன பொழுதும்..
 • கோவப்படாமல் புன்னகைத்தவன்.. நீ..

 

 • உன் புன்னகையையும் சம்மதமாய் எடுத்து
 • ஏளனம் செய்தவர்கள் ஏராளாம்..
 • காதலையும் நட்பையும் பிரித்தறிந்து
 • ப(ரு)ழகிய அன்பு அன்னப்பறவை நீ..

 

 • ஒரு கணமும் பிரியாமல்..
 • ஊர் சுற்றிய நம்மைக்கண்டு..
 • என் அறை தோழிகள்கூட வினவியது உண்டு..
 • நீ என்ன உறவுக்காரானா என்று?

 

 • எனக்கு மட்டும்தான் தெரியும்..
 • உறவுகளையும் தாண்டிய என் உயிர்க்காரன்
 • நீ என்று..

 

 • சராசரிகளிலிருந்து வேறுபட்டு..
 • சற்றே வித்தியாசமனவன் நீ
 • பிரிவையும் ரசிக்கச் சொல்லிக்கொடுத்தாய்..
 • கண்ணீரையும் நேசிக்க கற்றுக்கொடுத்தாய்..

 

 • பெண்ணுக்கே உரிய சமுக கட்டுப்பாடுகள்..
 • உயரச்சுவர்களை நம் உறவுக்கு இடையே
 • காலம் கட்டி வைத்த போதும்..
 • கண்ணுக்கு தெரியாத..
 • காற்றை விட மென்மையாய்..
 • கண்ணாடி நூலிழையாய்..
 • நம் நேசம்..
 • காலங்கள் தாண்டி..
 • இந்த இரு ஜீவன்களை ரகசியமாய் கட்டி வைத்திருக்கிறது..

 

 • வானம் பார்க்கையில்..
 • வண்ண நிலா பார்க்கையில்..
 • நெஞ்சில் நினைவுகளாய்..
 • நிற்கும்.. நீ
 • கண்ணுக்குள் கண்ணீராய்..
 • எட்டிப் பார்க்கிறாய்..

 

 • என் உயிர்த்தோழனே..
 • எங்கே இருக்கிறாய்?
 • எப்படி இருக்கிறாய்?
Advertisements