கவிக்கோ அப்துல் ரகுமான் , மிகமிகச் செறிவான ,புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா என்னும் மந்திரக்கோலால் , ஆழ்ந்த தமிழறிவால், மிக மிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுக்கிறார்; அழகு ஓர் ஆலயம் என்னும் தலைப்பில் தன்னுடைய இது சிறகுகளின் நேரம் என்னும் தொகுப்பில்.

ஒவ்வோர் இரவும் மணப்பெண்  போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு, நட்சத்திர மலர்கள் சூடி நமக்காகக் காத்திருக்கிறது. எத்தனை பேருக்கு இது தெரிகிறது? அழகைக் காணாத கண்கள் கண்கள் இல்லை: புண்கள். அழகை ரசிக்காதவன் மனிதனில்லை. மிருகங்கள் அழகை ரசிப்பதில்லை.

முத்தமிடமாட்டாயா என்று நாணத்தோடு அழைக்கும்  உதடுகள் போல் மலரும் பூக்கள்-

அமுத ஒளியைச் சொரியும் பௌர்ணமி நிலா-

வானம் வர்ணங்களால் எழுதிய காதல் கடிதம் போல் தோன்றும் வானவில்-

இவற்றையெல்லாம் எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? அழகு ஆனந்தத்தைத் தரும், சாந்தியைத் தரும் .அதை ரசிக்கக் கூடாதா? என்றால், அதற்கெல்லாம் நேரம்  எங்கே இருக்கிறது? என்கிறார்கள். ஆனந்தத்தை அனுபவிக்கக் கூட நேரம் இல்லையென்றால் வாழ்வது தான் எதற்கு?

வயிற்றுக்கு மட்டும் தான் உணவா? கண்ணுக்கும் உணவு உண்டு-அது தான் அழகு.

காதுக்கும் உணவு உண்டு- அது தான் இசை.

இவை வயிற்று உணவை விட உயர்ந்த உணவுகள். இந்த உணவுகள் வேண்டாமா? அழகாக இருக்க எளிமையான வழி இருக்கிறது-அழகை ரசிப்பது. அழகை ரசிக்க எங்காவது செல்ல வேண்டும் என்பது கூட இல்லை. உங்கள் வீட்டிலேயே இதை ரசிக்கலாம்.

உங்கள் மனைவியின் புன்னகையில், உங்கள் குழந்தையின் குறும்புகளில்

, விளக்குச் சுடரில்,

ஊதுவத்திப் புகையில் எல்லாம் அழகு உண்டு.

ஏன் உங்கள் மனைவியின் கோபத்திலும் அழகுண்டு.

இவற்றையெல்லாம் ரசிக்கப் பழகிக்கொண்டால் , வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்; இறுக்கம் (tension) இருக்காது. உங்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா? இதய நோய் இருக்கிறதா? அழகை ரசியுங்கள்; குணமாகிவிடும். அழகு அற்புதமான மருந்து. காதல், கவிதை எல்லாம் அழகு என்ற வீணையிலிருந்து எழும் ராகங்களே.

ஒரு சூஃபி ஞானி ஓர் இரவு வீட்டை விட்டு வெளியே வந்தார். அன்று பௌர்ணமி, அது ஓர் பாலைவனம். பாலைவனத்தில் நிலா ஒளி மணலிலும் பிரதிபலித்துப் பிரகாசிக்கும்.

அதனால் மிக அழகாக இருக்கும். சூஃபி ஞானி அந்தப் பாலைவன நிலா அழகில் பிரமித்துப் போய் , “இறைவா! உன்னுடைய இந்த ஆலயத்தில் ஏன் பக்தர்களையே காணோம்?” என்று கேட்டார். ” கொடுத்து வைத்தவர்களுக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கும்” என்று அசரீரி கேட்டது.  அழகு ஆண்டவனின் ஆலயம்.

ஏன் அழகே ஆண்டவன் தான். அழகே ஆண்டவன்: ஆண்டவனே அழகு. இதை உணர்ந்த யாரோ ஒரு ஞானி தான், இறைவனுக்குத் தமிழில் “முருகு” என்று பெயர் வைத்திருக்கிறார். “முருகு” என்றால் “அழகு ” என்று பொருள். அழகைத் தரிசிக்கிறவன் ஆண்டவனைத் தரிசிக்கிறான். அழகை ரசிக்கிறவன் ஆண்டவனுக்கு வழிபாடு செய்கிறான்.

….ஷஹி…(படங்கள் இணையத்திலிருந்து)

Advertisements