போருக்கு போகாதே வீரா..

நாட்டுக்கு நலம் சேர்க்கவென்று,

நன்றாய் நீயும் நின்று,

தோட்டாவைத்  தோளில் தாங்கி,

தூய மரணம் எய்திடுவாய்!

கார்கிலில் செத்தான் என்று,

கரிசனம் மிகவும் காட்டி,

வீடெல்லாம் கட்டி

நம் குடும்பம்  வாழ வழி செய்வர் என்று…

இறுதிக் கணத்திலும் கூட..

இன்முகம் காட்டிப் போவாய்!

வீடும் கட்டும் அரசு..

வகையாய் அதிலே வாழ,

உன் இல்  போகாதறிவாய்!

அரசை ஆள்பவருக்கும்,

அன்பாய் சொந்தம் உண்டு!

சொகுசாய் அவை குடியேற..

உமக்கான வீடுகள் நன்று!

ராசனாய் இருந்தால் என்ன!

ஆசைக்கு அளவா உண்டு?

லட்சங்கள் இல்லை லட்சியம்!

கோடிகளில் விருப்பம் நிச்சயம்!

தார்மீக வெட்கமெல்லாம்,

தயை கூர்ந்து எதிர்பாராதீர்!

சாதீயம் பேசிப்பேசி,

நாணம்,

எப்போதோ தொலைத்துவிட்டோம்.

மக்களும் மகேசனும் ஒன்று!

ஆம் மக்களும் மகேசனும் ஒன்று!

இரண்டும் கொல்லாது இன்று!

நின்று நீவிர் கொல்வதற்குள்

நன்று யாம் உண்டு கொழுப்போம்!

அச்சமும் நாணமும் எல்லாம்

வேண்டும் நாய்களுக்கு…

நாடாளும் எமக்கு..அதுவெல்லாம் எதற்கு?

விளையாட்டுப் போட்டிகளிலும்

விருப்பமாய் ஊழல் செய்வோம்..

பாலங்கள் உடைந்தால் பதறி

பதவிகள் விலகிட மாட்டோம்!

வருமானம் ஈட்டல் பெரிதா?

தேச மானம் காத்தல் பெரிதா?

உள்ளூரில் இத்தனை நாள்

ஊழல் செய்து அலுத்து விட்டோம்!

சர்வதேச அளவில் இன்றே

நாட்டின் மானம் காற்றில் விட்டோம்!

….ஷஹி…

Advertisements