ஒரு நாள் நம்ம பஞ்சு சென்னையில இருக்கற தன்னோட தங்கச்சி தனம் வீட்டுக்கு போனான். அங்க கொஞ்சம் வேலை இருந்ததால் அங்கனவே ஒரு வாரம் தங்க வேண்டி வந்துடுச்சு. அப்படி இருந்தப்ப ஒரு வித்தியாசமான சம்பவத்த நம்ம பஞ்சு பார்த்தான். அவன் தங்கச்சிக்கு பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்துருப்பாங்க போலிருக்கு. அப்ப அவங்க மொட்ட மாடி பஞ்சு தங்கச்சி வீட்டுல இருந்து தெரியும் … ஏன்னா நம்ம பஞ்சு தங்கச்சி தனம் வீடு இருந்தது மூணாவது மாடி. டெய்லி ஜன்னல் வழியா வெளிய பாத்தா அங்க அந்த புது வீட்டு மொட்டை மாடில துணி காயப் போடுறது தனத்துக்கு தெரியும். 
அப்படிப் பார்த்ததும் தனம் அந்த பக்கத்து வீட்டு பெண்ணை விமர்சனம் பண்ணா…
“என்னா துணி துவைக்கிறா இவ.. பாருண்ணா அவ துவச்சிப் போட்ட துணியெல்லாம் கற படிஞ்சிருக்கு… இப்படி துவைக்கறதுக்கு துவைக்காமயே இருக்கலாமே !” 
தனம் தினசரி அந்த புது வீட்டு பெணணின் துவைக்கும் திறமைய பத்தி விமர்சனம் பண்ணிட்டிருந்தா. 
நாலாவது  நாள் அவ ஜன்னல் வழியா பார்த்தப்ப அந்த பக்கத்து வீட்டு மாடியில காயுற துணியெல்லாம் பளிச்சுன்னு இருந்தது. கறையெல்லாம் தெரியவே இல்லை. 
“பாருண்ணா , இன்னைக்கு அவ துணி துவைச்சிருக்கறத… யாரு அவளுக்கு துணி துவைக்கிறதை சொல்லிக் கொடுத்தாங்களோ!” அப்படின்னா தனம்…
அப்ப நம்ம பஞ்சு நிதானமா சொன்னான்…..
” தங்கச்சி! அவ துவைக்கிறதென்னவோ ஒரே மாதிரி தான் துவைக்கிறா… நாந்தேன் நம்ம வீட்டு கிளாஸ் சன்னலையெல்லாம் இன்னிக்கு சுத்தம் பண்ணி நல்லா துடைச்சி விட்டேன்” னான்.
தனத்துக்கு பேச்சு மூச்சே காணும்..
கதையிலிருந்து நம்ம பன்ச் : மத்தவங்களை குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்மள நாமளே பாத்துக்குறது நல்லது… இந்த மாதிரி கற படிஞ்ச கண்ணாடி வழியா பார்த்தா எல்லாமே கறையாத்தான் தெரியும்!
Advertisements