நிலவின் வெளிச்சத்தை உறிஞ்சிக் கொண்டது உன் நிறம்!நீ பூத்தோல் போர்த்திய புயல்!

புகைப்படத்திற்கு சிரித்தாய் படம் எடுத்தவன் மீது அடித்தது பிளாஷ்!

இழுத்துக் கட்டியதும் வீணையை இசைக்க ஆஅம்பிக்கலாம்.. உன்னை தளர்த்திக் கட்டியதும் தான் இசைக்க ஆரம்பிக்கலாம்!

நீ மதவாதமா? மித வாதமா? தெரியாது, ஆனால் நீ மன்மத வாதம்!

நஞ்சும் காதலும் தலைக்கேறி விட்டால் இறங்காது!

வலிக்கிறாய்! கண்ணில் விழுந்த முள்ளாய் அல்ல – கீழே விழுந்த கண்ணாய்!

ரோமின் தெருக்களில் எதிரொலித்த பாடல்களாய் என் பேனாவில் கேட்பதெல்லாம் உன் சிரிப்போசை தான்!

மண்ணைப் பிசைந்தால் பாண்டம் மனசைப் பிசைந்தால் காதல்! உடையக் கூடியவையெல்லாம் உருவாவது இப்படித்தானோ?

பூட்டிப் பூட்டி வைத்தாலும் தொலைந்து தான் போகும் போல புகையும் காதலும்…

உருகுவதற்காக  தயாரிக்கப்படுகின்றன மெழுகுவர்த்திகளும் மெல்லிய இதயங்களும்!

உன் ஞாபகங்களை புத்தகங்களாய் எழுதி அடுக்கிக் கொண்டே வந்தேன் ஒரு கட்டத்தில் தலையில் ஏதோ இடித்தது தடவிப் பார்த்தேன் நிலா!

இளம் வெய்யிலில் குளித்த புதிய மலரே…ரட்லஜ் நதிக் கரை ஓரமாய் நீ சென்ற போது செர்ரி மரங்களின் வேர்களில் கசிந்தது தேன்!

வானவில்லிலிருந்து வழுக்கி விழுந்த ஒரு வர்ணப் பிசிரைப் போல உன் முகத்தில் வெட்கம்!

ஏதாவது ஒரு அழகியின் ஆசிர்வாதம் கிடைக்காமல் எந்த எழுத்தாளனுக்கும் எழுத்து திறக்காது!

நிலாவின் பால் போல இரவெல்லாம் வழிகிறது என் கோப்பையில் உன் இளமை!

ஒரு புல்லங்குழல் மீது குயில் உட்கார்ந்து இருப்பது போல் உன் கீழுதட்டின் மீது உன் மேலுதடு!

என் நரம்புகளால் செய்த உதிர வீணை என் காதல்! அதில் முகாரியையாவது மீட்டி விட்டுப் போ!

குழி விழுந்த உன் கன்னத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது தானா ஹைகூ…

தராசுத் தட்டில் என் ஆயிரம் இரவு கண்ணீரை வைத்தேன்…நீ மறு தட்டில் ஒரே புன்னகையை வைத்தாய்..சமம்!

உன் வாசல் கோலத்தில் இரண்டு புள்ளி குறைகிரது என்றால் சொல்! என் கண்களைத்தருகிறேன்!

நீ வானவில் மாவில் செய்த பௌர்ணமிப் பலகாரம்!

உன் நிழல் என்பது கருப்பு வெளிச்சம்!

மீசை எழுத்தாணியோடு வந்தேன் காவியம் எழுதாவிட்டாலும் பரவாயில்லை! ஓலைச்சுவடியே…உன் மீது ஒரு ஓம் போட்டு விட்டுப் போகிறேன்…

உன்னைப் போன்ற அழகிகள் இல்லையென்றால் என்னைப் போன்ற கவிஞர்கள் ஒட்டகம் மேய்த்துக் கொண்டு இருப்பார்கள்!

இதழ் மேடையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா உன் புன்முறுவல்..


ஒரு கூடை கனவுகள் விற்கிறேன்! நீயும் ஒன்றை வாங்கி சூடிக் கொள்ளக் கூடாதா?

ஒரு வெள்ளை நீர் வீழ்ச்சியாய் நீ நுரை பொங்க ஓடும் போது ஒரு கரும்பாறையாய் ஓரத்தில் கிடந்தது என் இதயமே…

கண்ணீர் என்பது கண்கள் கொண்டவனுக்கானது அல்ல காதல் கொண்டவனுக்கானது!

ஒரு பிச்சைக்காரர்களின் கூட்டத்தில் நிற்கிறேன் உன் வைடூரிய விரல்களால் பொற்காசு போட்டாய்! என் தட்டில் ஒரு பார்வையைப் போட்டு விட்டுப் போ…

ஆம் …இல்லை..இரண்டில் ஒன்றை சொல்லச் சொன்னால் இல்லை என்றே சொல்வாய்! ஆம்! ஆமாம்..இந்த இரண்டில் ஒன்றை சொல்!

நீ வருகிறாய் என்ற செய்தி  வந்ததும் இதயம் -கண்களுக்கு இடம் பெயர்ந்து விட்டது!

ஒரே ஒரு முத்தம் தருவாயா? என் பெயரின் மேல்…உயிரின் மேலாய் நான் அதை உணர்ந்து கொள்கிறேன்!

பூக்களுக்கு ஆணி அடிப்பது மாதிரி தான் காதலிப்பதும்…மனம் வெட்டிப் போடுவதென்பது உனக்கு நகம் வெட்டிப் போடுவது போல…

இதயத்திலிருந்து உன்னை எவ்வளவோ கஷ்டப்பட்டு வெளியேற்றினேன்! அடிப்பாவி..அணு அணுவாய் அத்தனையிலும் போயா அமர்ந்து கொள்வாய்!

நீ என் தோளில் சாய்ந்த போது இமயம் என் காலில் சாய்ந்தது! நீ கனவில் வந்த போது தான் கண்கள் இருப்பதற்கான காரணம் புரிந்தது!

நீ கனவாய்ப் போன போது தான் எனக்கு கண்ணீர் இருப்பதற்கான காரணமும் புரிந்தது!

….ஷஹி..படங்கள் இணையத்திலிருந்து…

Advertisements