அமைதியாய்க் காதலிப்பது பிடிப்பதில்லை உனக்கு…

அன்றொரு நாள் அப்படித்தான் “கொஞ்சடி” என்னை என்றாய்..

நானும்” போடா குயவா “என்று விட,

கோபம் கொஞ்சமும்  கேள்வி கொஞ்சமுமாய் “என்ன” என்றாய்!

ஆமாம் பின்னே’ குயவன் தானே  நீ ‘என்றேன் விடாமல்..

நன்றாய் உன் நெஞ்சில் நானும் சாய்ந்தபடி!

வெற்றுக் களிப்பெண்ணாய் இருந்தேன்..

நாணமும் பெண்மையும் என்னில் சேர்த்து,

காதலும் கொஞ்சம் இட்டுப் பிசைந்து …

காதலி செய்தாயா? என்றேன்..

கர்வத்தில் உன் கண்களில் களிப்பேறியது!

“அப்புறம்” என்றாய்…

என்னை நானே சுற்றும் மோனத்தவத்தில் ஆழ்த்தி

நீயும் என்னைச் சுற்றி வந்தாயா?என்றேன்..

“ம்ம்ம்” என்றாய் …

உன் மோகப் பெருமூச்சில் என் தேகம் கருகியது!

வெறும் வண்ணத்தினளாய் இருந்தவளை

தொட்டுத் தொட்டுச் சூடேற்றி சிவக்கச் செய்தாயா?என்றேன்..

உன் ஆசையைப் போலவே மீசையின் வண்ணமும் அடர்ந்தது..

என்னையும் ஈடேற்றி…

உன் தாகமும் தீர்த்தாயா என்றேன்..

போதுமடி உன் பேச்சில் குளிர்ந்தது என் நெஞ்சம்..

சூடேறிவிட்டது தேகம்

முத்தம் நூறு பொழிந்து அணைக்கவா…

என் காதல்பாண்டமே என்றாய்!

…ஷஹி..