A.M.Raja ஏ.எம்.ராஜா

“போய்யா, வெங்காயம்!.” தமிழ் நாடு முழுவதும் அறிமுகமான இந்த ‘வெங்காயம்’ என்ற வார்த்தை சாதாரண வார்த்தை அல்ல. புகழ்பெற்ற சமுதாயப் புரட்சியாளரான தந்தை பெரியார் அடிக்கொரு தடவை உபயோகப்படுத்தும் வார்த்தை. ஒன்றும் இல்லாத விஷயம் என்பதாக அதன் அர்த்தம்.’உரித்துப் பார்த்தால் வெங்கயத்தில் ஒன்றும் இருக்காது.’ என்று ஒரு பாட்டு கூட உண்டே! உண்மைதான். வெங்காயத்தில் ஒன்றும் கிடையாதுதான். ஆனால் அந்த வெங்காயம் உட்லுக்குத்தரும் நன்மைகள் மிகவும் பெரிதல்லவா? எனவேதான் நம் முன்னோர்கள் பழைய சோற்றையும் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட்டு பலம் கொண்டு விளங்கினார்கள். எனவே பழையவை என்றும் இனியவைதான்.!

ஜெமினி கணேசன் சரோஜா தேவி

இன்று ஏராளமான பாடல்கள் இருந்தபோதிலும், பழைய பாடல்களின் இனிமை அதில் வருமா? பழைய பாடல்களில் குறிப்பாக ஏ. எம். ராஜாவின் பாடல்களில் சொக்கிப் போகாதவர்கள் யார்..? கற்கண்டும் தேன் சுவையும் கலந்தது போன்றவை ராஜாவின் பாடல்கள். அதிலும் குறிப்பாக நடிகர் ஜெமினி கணேசனுக்காக ராஜா பாடிய பாடல்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.”ஆடாத மனமும் ஆடுதே; ஆனந்த கீதம் பாடுதே..” என்ற ராஜாவின் தேனிசைப் பாடலுக்கும் ஜெமினி கணேசனின் அழகு முக அபிநயத்துக்கும் மயங்காதவர் யார்..? நடிகையர் திலகம் சாவித்திரியின் ஒயிலும் ஜிக்கியம்மாவின் இசைப் பிண்ணனியும் சேர்ந்து கண்ணுக்கும் காதுக்கும் கொடுத்தது மிகப்பெரிய விருந்தல்லவா?

சரோஜா தேவி

இப்படி இன்னும் எத்தனையோ பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘கல்யாணப்பரிசு’ என்ற திரைப்படத்தில் ஏ. எம். ராஜா பாடியதுடன் மட்டுமல்லாது,இசையமைத்தும் பாடல்களுக்குப் புது மெருகு சேர்த்தார்.’ வாடிக்கை மறந்ததும் ஏனோ…’ என்ற பாடலின் இசையைச் சொல்வதா, அந்த தேன்குரலில் சொக்குவதா , கதா நாயகன் ஜெமினியும் கதா நாயகி சரோஜாதேவியும் சைக்கிளில் வலம் வரும் அந்தஅழகுப் பயணத்தைச் சொல்வதா, என்று ரசிகர்கள் லயித்துப் போனது இன்றைக்கும் நிலைத்து நிற்கும் நிஜம்!

சரோஜா தேவி ஜெமினி கணேசன்

‘ஆடிப்பெருக்கு ‘என்ற திரைப்படத்தில் “தனிமையிலே இனிமை காண முடியுமா” என்ற பாடலில் ஏ.எம்.ராஜாவின் தித்திக்கும் குரலும் ஜெமினி கணேசன், சரோஜா தேவியின் ரம்மியமான நடிப்பையும் எவராலும் மறக்க முடியாது. எத்தனையோ பாடல்களை சொல்லலாம் என்றாலும் தேனிலவு என்ற திரைப்படத்தில் வரும் அத்தனை பாடல்களும் தேன் போன்றவை. திரைப்படத்துக்கு இசையும் அமைத்து  “ஓஹோ எந்தன் பேபி” என்ற அருமையான பாடலுடன் “பாட்டுப் பாட வா”  என்ற வினாப்பாடலில் நமது ஆவலை எல்லாம் தூண்டும் ஏ.எம். ராஜாவை இன்னும் பாடு இன்னும் என்று தானே பதில் சொல்லத் தூண்டும்… “திங்கள் உறங்கிய போதும் தென்றல் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? என்றூ கற்கண்டையும் தேனையும்  குழைத்து வினாத் தொடுத்த ஏ.எம்.ராஜாவின் பாடல்களை நினைத்துக் கொண்டால் நம் நெஞ்சம் தான் உறங்கிடுமா… ரசிகர்களின் கண்கள் தான் உறங்கிடுமா?

[stextbox id=”info”]உங்களுக்குத் தெரியுமா? உங்கள் படைப்புகளை கட்டுரைகளை கவிதைகளை கதைகளை நீங்கள் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்… நல்ல படைப்புகள் பிரசுரிக்கப்படும்.[/stextbox]