காதல் தாபம் பற்றி பேசுகிறார்விஜயகங்கா..இவ்வாறு,

நீ வந்து எரியாத என் மழை இரவின் குளிர் நடுக்கங்களை

விழுங்கிக்கொண்டிருக்கின்றன,

நான் வந்து உதிக்காத உன் விடியலின் வெக்கைகள்.”

பிரிவின் தாக்கம் சொல்லி,

“ஒவ்வொரு பிரிதலிலும்

வார்த்தைகள் கைகுலுக்கிய பிறகும்

நினைவில் பின்னணியில்

விடை இற மறுக்கும் மவுன அதிர்வுகளே

மறுபடி சந்திக்கையில்

ஒன்றை ஒன்று இனங்கண்டு முதலில் தழுவிக்கொள்கின்றன.”

“கரை அரித்துச் செல்லும் அலையாகச் சில நினைவுகள் இருப்பினும்

நதியின் படுகையில் படிந்துவிட்ட பொக்கிஷக் குவியலாய் நெஞ்சின் தேக்கம்.”

மௌன மொழி பேசும் காதல் பற்றி..

“எந்நிலப்பகுதியில் எம்மொழி வழங்கப்பட்டால் என்ன?

அம்மொழி கடந்து பேசப்படும் உணர்வு மொழி நீயே.”

காட்டிக்கொடுத்து விடும் காதலின் இயல்பு பற்றி…

“சாய்ந்து உன் புறம் நோக்கிச் சுடர் விடும் என்னை

சடுதியில் பற்றி அணைக்கிறாய் ஓர் அயர் பொழுதில்

இப்போது எரியும் உன் சுடரில் கரைவதறியாது என்னைத் தேடுகிறேன் நான். “

காதலில் மெய்யுணர்வின் தேடலை,

“சில கையளவு நீர் பருகி திரும்பும் நொடி ஆவலைக் காட்டிலும்

வலிமையுடையவை

தள்ளி நின்று விரியும் உன் நீள் அழகை

இரு கண்களில் நிறைத்து நினைவில் வடியவிட எண்ணும்

மனதின் ஆரவாரங்கள்…

என்கிறார்.

காதல் மயக்கத்தை..

“நீ பிரபஞ்ச ஒளி

கால கடி அற்று ஒளிர்ந்து செல்கின்றாய்

உன்னிடம் சிறிது வெளிச்சம் பெற்று எமது உள்ளத்திருளை அகற்றி வருகிறோம்.

அறிவு உன்னிடம் மண்டியிட்டுள்ளது

ஆசை உன்னிடம் தண்டமிட்டுள்ளது… “

மேலும், எதார்த்த உலகைச் சொல்லுகையில்,

“நெருங்கி வர நெருங்கி வர

மாறுகின்றன

பார்வைக்கோணங்களும்

இலக்கின் தோற்றங்களும்.”

காதலில் ஜென்மங்களின் தொடர்பு போல் தோன்றும் மயக்கத்தை…

“எங்கேனும் சந்தித்துள்ளோமா நாம் இதற்கு முன்னம்?

எதையேனும் தவறவிட்டு அதைத்தேடி வந்தோமா இங்கு மீண்டும்? …

தாயின் கருவில் ஜனனம் நேராது

பாதிப் பேற்றில் பிரிவை எய்திய

மண்ணில் பிரவாத சிசுவின் பகிராத ஏக்கத்தோடு

நாம் பழகித்தான் வந்திருந்தோமா பன்னெடுங்காலம்?”

காதலின் தாபத்தை…

“தட்டுப்படாத உனது தாவரப்பசையில்

சிறகு சிக்கிப் பயணம் முறித்த என் இருதய பட்சிகளுக்கு

பச்சைத் தானியங்கள் வீசிச் செல்கின்றன

பரிதவிப்பினூடே பரவசித்துப் போகும் உனது தோற்ற வினாடிகளும் தணிந்த பார்வைகளும்”

காதலின் ஏக்கம் பற்றி ,

“தூரங்கள் சுருக்கிய காலத்தினோடும்

காலங்கள் பெருக்கிய வேகத்தினோடும்

நாம் இருவரும் கடந்து வந்துள்ளோம்

ஒரே பயணத் தூரத்தை.”

காதல் தோன்றியதை ,

“உனது ஈர வயல் பார்த்து விழுந்தன

மண்ணில் எனது தேடல் விதைகள்

கீறிய நிலங்களின் புதைவுகள் தென்பட

ஏந்தி வந்த காற்றின் பயணமும் முடிந்திட

தட்பங்கள் கனிய பருவங்காத்து

உயிர் ஊக்க விதையினின்று வெளிக்கிளம்புகின்றதோர்

முதன்மை வேர்…

உனது மண்ணில் உயிர் உள்ள மட்டும்

இடைவிடாது வளர்ந்துகொண்டே இருக்கும்

என் ஆணி வேர்”

காதலின் மெய் சிலிர்ப்பை ,

“வான் பிளந்து பொழிந்த

என் முதல் துளிகளின் தீண்டலில்

உடன் படர்ந்த உன் மண்வாசத்தின் நுகர்விலே உணர்கிறேன்,

மற்றொரு மழையில் முன்னம் இதுபோல் நாம் சந்தித்துச் சிலிர்த்ததை.

காதலின் ஆக்ரமிப்பு குறித்து …

“இல்லாத நிறம் ஈர்த்து

உள்ளார்ந்த நிறம் தெளிக்கும்

ஒளி வாங்கிகளாய்

எனது உயிர் நிறமிகள்

உன்னைச் சற்று உள்வாங்கி

மிகுதியான என்னை மெல்ல வெளியேற்றுகிறது”.

கடந்து விட்ட காதல் கணங்களை நினைவுறுத்தி,


“ஒடிந்த மூங்கிலும்

துளைகளிட்ட தீக்கோலும்

தவழ்ந்து வந்த பூங்காற்றும்

இனி எத்தொடர்ச்சியில் சந்தித்தால் மீட்டு வருமோ

கடந்து சென்ற இசைக்கணங்களை.”

காதலை சுவாசிப்பதை குறிப்பாகச் சொல்லி..

“கவிதைகள் சுவாசிப்பதால் வரவர பேச்சுத் தடைபடுகிறது.

உள்ளடைப்புகள் ஏற்படுத்தும் உன் நுண்ணிய படிமங்களை

என் காற்றில் கலக்காதே.”

என்கிறார்.

..ஷஹி..

படங்கள்..நன்றி..கூகுள்.

Advertisements