உலகம் போற்றிய இலக்கிய மேதை டால்ஸ்டாய். போரும் அமைதியும், அன்னா கரீன்னா ஆகிய அவரது புகழ் பெற்ற படைப்புகளுக்குப் பிறகு பத்து ஆண்டு உழைப்பில் உருவானது புத்துயிர்ப்பு. 1887 -இல் வெளியான இந்நாவல் டால்ஸ்டாயின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், பழைய மற்றும் புதிய நம்பிக்கைகள், வெற்றி தோல்விகள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது.

“டால்ஸ்டாய்-முழு உலகம் அவர்…மெய்யாகவே,மிகப் பெரிது இம்மானுடர் சாதித்த பணி: முழுதாய் ஒரு நூற்றாண்டினது அனுபவத்தின் சாரத்தையெல்லாம் வடித்துத்தந்தார், அதிசயிக்கத்தக்க சத்திய சீலத்தோடும் வல்லமையோடும் எழிலோடும் இதைச் செய்தார்.” இவ்வாறு பேசினார் மக்சீம் கோர்க்கி.

டால்ஸ்டாயின் கருத்துப்படி நேர்மையாய் வாழ்வதென்பது தமக்கென வாழாது மக்களுக்காக வாழ்வதையே, மக்கள் எல்லோரும் நலமடைந்து இன்பம் பெறுவதற்காக வாழ்வதையே, யாவற்றுக்கும் முதன்மையாகக் குறிப்பதாகும்.

1887-இல் அலெஃஸாண்டர்கோனி என்ற வழக்கறிஞர் டால்ஸ்டாயிடம் கூறிய வழக்கு ஒன்றே புத்துயிர்ப்பு உருவாவதற்குக் காரணம். நீதிபதி ஒருவர் இளமையில் பண்ணைப் பெண் ஒருத்தியை ஆசை காட்டி மோசம் செய்ய, அவள் வாழ்வு திசை தடுமாறி, பாழ்பட்டுப் போகிறது. திருட்டு மற்றும் கொலை குற்றத்துக்காக அவரிடமே விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறாள் அவள். திடுக்கிடும் நீதிபதி அவள் சிறையில் அனுபவிக்கும் துன்பங்களைக் குறைக்கப் போராடுகிறார். நீதிபதி செய்து கொண்ட ஆத்ம சோதனையே இந்நாவல்.

“எப்போதும் எல்லோரையும் மன்னிக்க வேண்டும், முடிவே இல்லாமல் அத்தனை தரம் மன்னிக்க வேண்டும், ஏனெனில் யாருமே குற்றமற்றோராகவும் அதனால் தண்டிக்கவோ சீர்திருத்தவோ கூடியோராகவும் இருக்கவில்லை என்பதுதான்.” நாவலின் 743 ஆம் பக்கத்தின் இவ்வரிகள் தான் என்னைப் பொருத்தவரையில் இக்கதையின் சாரம்.

நெஹ்லூதவ் கதாநாயகன், பெரும் பணக்காரர், பண்ணைக்காரர், ராணுவ சேவை செய்தவர், நீதி விசாரணைகளுக்கு ஜூரியாக அழைக்கப்படுபவர். இளம் வயதிலிருந்து பல பெண்களிடம் பழகினாலும், கூச்ச சுபாவம் உள்ளவர். கதையின் துவக்கத்திலேயே அவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றின குறிப்பு உள்ளது,இத்தொடர்பு குறித்து நெஹ்லூதவ் மிகுந்த குற்றஉணர்வும் வேதனையும் படுவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது . கோமகள் கர்ச்சாகினா என்பவருடனும் பழகி வரும் நெஹ்லூதவ் அவரையே மணம் செய்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறார்.

ஒரு நீதிவிசாரணைக்காக ஜூரியாக அழைக்கப்படுகிறார் நெஹ்லூதவ், கொலைகுற்றமும் திருட்டுப்பட்டமும் சுமத்தப்பட்டு அவர் முன் ஆஜர் செய்யப்படும் விபச்சாரி மாஸ்லவாவைப் பார்த்து அதிர்கிறார், அவளுக்கு நெஹ்லூதவை அடையாளம் தெரியவில்லை என்றாலும் குற்றஉணர்வு கொல்கிறது நாயகனை.

மாஸ்லவா, கதையின் நாயகி…கத்யூஷா என்ற பெயரில் அழைக்கப்பட்டு, நெஹ்லூதவின் அத்தைமாரால் எடுத்து வளர்க்கப்படும் அவர்களின் பணிப்பெண். பேரழகியாகவும் பதின்பருவத்தினளாகவும் திகழும் அவளைப் பார்த்து காதல்(காம) வசப்படுகிறார் நெஹ்லூதவ். அவ்விளம் வயதுக்கே உரிய குழப்பம் அவரிடம் மட்டுமல்லாமல் கத்யூஷாவிடமும் தொற்றிக்கொள்கிறது. ஒரு ஈஸ்டர் தினத்தன்று, அவளை வண்புணர்கிறார் நெஹ்லூதவ்.

(திரைப்படமாக்கப்பட்ட “புத்துயிர்ப்பிலி”ருந்து படங்கள்..இணையத்திலிருந்து)

நிகழ்வின் முடிவில் நூறு ரூபிளை அவள் கைகளில் திணித்து அவள் நிலை பற்றி ரொம்பவும் கவலை கொண்டு விடாமல் அத்தைகளின் வீட்டை விட்டு ராணுவசேவைக்குக் கிளம்பிவிடுகிறார்.

கத்யூஷா கர்ப்பமாகிறாள், நெஹ்லூதவின் அத்தைகளின் வீடைவிட்டு வெளியற்றப்படுகின்றாள். வறுமையில் வாடும் அவளுக்கு குழந்தை ஒன்று பிறந்து இறக்கின்றது. பலவாறாக சீரழிந்து விபச்சாரியாகிறாள் கத்யூஷா. அவளுடைய இயல்பான நல் உள்ளமும், பிள்ளைமையும் அவளை விட்டு விடை பெறுகின்றன. பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கிறாள். அவளிடம் சுகம் நாடி வந்த ஒரு பெரும் பணக்காரரின் சாவிற்கு பொறுப்பு சாட்டப்பட்டு நெஹ்லூதவின் முன் கைதியாக நிற்கிறாள்.

செய்யாத குற்றத்துக்காக கடும் துயர் அனுபவிகின்றாள் மாஸ்லவா என்ற கத்யூஷா, அவளின் அவல நிலைக்குக் காரணமான நெஹ்லூதவ், அவளை விசாரிக்கும் ஜூரியாக இருக்கிறார். தன்னுடைய ஓர் இரவுப்பசிக்கு இரையானதால் அவள் வாழ்வே பாழாகி விட்டதை உணரும் நெஹ்லூதவ் மாஸ்லவாவின் தண்டணையைக் குறைக்கவும் அவளை விடுதலை செய்து விடவும் இயன்ற அளவில் போராடுகிறார்.

சிறையில் வாடும் அவளைச்சந்தித்து,

தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதுடன், அவளைத்தாமே மணந்து கொள்வதாகவும் வாக்களிக்கிறார், எப்படியும் அவளைச்சிறையிலிருந்து விடுவித்து விட ஆவன செய்வதாகவும் கூறுகிறார்.

வாழ்வில் கடுந்துயர்களையும், போராட்டங்களையும் சந்தித்து மனநிலையே மாறிப்போயிருக்கும் மாஸ்லவா அவரை அடையாளம் தெரிந்து கொண்ட பின்பும் கூட எவ்விதமான எழுச்சிக்கும் ஆளாகவில்லை. அவர் தன்னை மணந்து கொள்வதாகக் கூறுவதையும் கூட பெரிதாக சட்டை செய்துவிடாத அவள், ஒரு பணக்காரன் சிக்கியிருக்கிறான், அவனிடமிருந்து எத்தனை பணம் சுருட்டலாம் என்ற அவள் தொழிலுக்கே உரிய புத்தியுடன் மட்டுமே சிந்திக்கிறாள். எத்தனை முயன்றும் நெஹ்லூதவவால் மாஸ்லவா குற்றமற்றவள் என்று நிரூபிக்கவியலாமல் போகிறது. சைபீரிய சிறைக்கு அனுப்பப்படுகின்றாள் மாஸ்லவா, நெஹ்லூதவும் பல இன்னல்களை ஏற்றுக் கொண்டு அவளுக்காக சைபீரியா செல்கிறார். ஒரு கட்டத்தில் மாஸ்லவா அவர் தன்னுடைய நிலைக்குக் காரணம் இல்லை எனவும், அவளைப் போன்ற ஆதரவற்ற பெண்களின் கதியெல்லாம் இப்படித்தான் முடியும் என்று கூட பேசி நெஹ்லூதவ் குற்ற உணர்வு காரணமாக இத்தனை சிரமப்படவேண்டாமென கூறுகிறாள். மேலும் அவரை மணந்து கொள்ள மறுத்துவிடும் அவள் , ஒரு அரசியல் கைதியிடம் காதலாகிறாள். தன்னால் இயன்றவரையில் அவளுக்காகப் போராடிப்பார்க்கும் நெஹ்லூதவ் முடிவில் அமைதி கொள்கிறார்.

தவறு செய்துவிடுவது மனித இயல்பு தான் என்றாலும் அதை உணர்வதும் மேலும் தவற்றுக்காக வருந்துவதுமே சராசரி மனிதர்களால் இயலாத ஒன்றாகவிருக்கும் போது..பல வருடங்களுக்கு முன் தான் செய்துவிட்ட தவற்றை எண்ணி எண்ணி வருந்தி, அதற்கான பிராயச்சித்தம் செய்து விடத்துடிக்கும் நெஹ்லூதவின் பாத்திரப்படைப்பு அருமையானது. தான் சொன்னாலே ஒழிய யாருக்கும் தெரிந்து விடாது என்பதான ஒரு குற்றத்தை பல பேரிடம் ஒப்புக்கொள்வதோடு அல்லாமல், அதற்கான தீர்வையும் காணத்துடிக்கிறார்.

ஆனால் பல இன்னல்களையும் எதிர்நோக்கி, பணமே வாழ்க்கை என்ற இழிநிலையில் இருக்கும் மாஸ்லவா, தன்னை விடுவிக்க வரும் நெஹ்லூதவை எப்படியும் பயன்படுத்தி இருக்கலாம் …. அவ்விதம் செய்யாததோடு தன்னுடன் சிறையில் வாடும் சக குற்றவாளிகளுக்கு உதவக் கோருகிறாள் நெஹ்லூதவை..எத்தனை உயரிய சிந்தனை? அவரை மணந்து கொள்ள மறுப்பதிலேயே வாசகர்களின் மனங்களில் பெரியதோர் இடம் பிடித்து விடும் மாஸ்லவா, கைதி ஒருவரை மணக்க விருப்பம் தெரிவிப்பதில் பேராச்சர்யம் படச் செய்கிறாள். சுயமரியாதையும், சீரிய புத்தியும் இயல்பானதாக அவளிடம் இருந்து வந்தது, அதனை முழுவதுமாக இழந்து விடவில்லை என்பதை நிரூபிக்கின்றாள் மாஸ்லவா.

புத்தகத்திருந்து சில முக்கிய வரிகள்….

‘நெஹ்லூதவ் தமது வாழ்வில் “ஆன்மாவைச் சுத்தம் செய்தல்” என்பதாக அவர் பெயரிட்டிருந்த ஒரு வேலையைப் பல தரம் செய்திருந்தார். அகவாழ்வானது நீண்ட காலமாய் மந்தமடைந்து அதன் செயற்பாடு அறவே நின்றுவிடும்படியான நிலையை எய்தியதும் ,அவர் தமது ஆன்மாவினுள் குவிந்து இப்படி ஆன்மச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தும் குப்பைக்கூளங்களை அள்ளியெறிய முற்பட வேண்டுமென மனத்துள் முடிவு செய்து கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு “ஆன்மாவைச் சுத்தம் செய்தல் “என்று பெயரிட்டிருந்தார்.’

‘ஒவ்வொருவரும் தமக்கென்றே வாழ்ந்தார். தமது புலன் இன்பமே பெரிதெனக் கொண்டார். தெய்வம், நல்லொழுக்கம், நேர்மை என்பதான பேச்செல்லாம் வெறும் ஏமாற்று தான்.’

ஜூரிக்கள், மற்றும் நீதிபதிகள், சாட்சியங்கள் இவர்களின் சிறிய தவறுகள் காரணமாக எத்தனை பேரின் வாழ்வு தடம் புரண்டு விடுகிறது, செல்வந்தர்களின் உல்லாசப்போக்கு எத்தனைப் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றது ,மேலும் ஆடம்பர வாழ்கையின் போது ஒரு வேடமாக எப்படி மத நம்பிக்கை இருக்கின்றது என்பதையெல்லாம் அலசுகின்றது நாவல். மனிதனின் அடிப்படை உணர்வுகளையும், அவன் வாழ்வின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் ,கதாபாத்திரங்களின் இரு வேறுபட்ட உலகங்களின் இடைவெளியைக் காட்டி அவற்றை இணைப்பதின் மூலம் இந்நூல் எடுத்து இயம்புகிறது.

…ஷஹி…

Advertisements