அபிமன்யு அவர்களின் “அபியும் நானும் “கவிதைத்தொகுப்பிலிருந்து நான் ரசித்த சில வரிகள்…

காதல் மீது நண்பருக்குக் கொள்ளைக்காதல்! உற்சாகம் கரைபுரளும் அவர் காதல் கவிதைகளில், காதலியைப் பற்றின வர்ணனைகளில் அவர்காதலி மட்டும் அல்லாமல் படிப்பவர்களும் காதல் வசப்படும் அபாயம் உண்டு..குறும்பும் கொப்புளிக்கும், பிரிவுக்காலக் கவிதைகளில் சோகம் தெறிக்கும். இதோ அவர் காதல் கவிதை வரிகளில் சில.

பிரிவில் பாடியது..

இனிய சகாப்தம்

நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை – உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


வர்ணனை..

மன்னாதி மன்னி

விழியில் பாண்டியம்,

நகத்தில் சோழம்…

அமைப்பில் பல்லவம்,

சேரத்து செருக்கு…

மட்டும் சேலைக்குள் அடைக்கலம்.

குறும்பு..

என்ன செய்யப் போகிறேன்?

கண்ணதாசன் கவிதை

ஒன்றேயொன்று சொல் என்றாய்!

சினிமா பாட்டிலிருந்து

அர்த்தமுள்ள இந்துமதம் வரை

அவரின் உயில் தவிர

அவர் எழுதிய

அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி

நீ எதைக் கேட்டாலும்

அதிகமாகத் தந்தே

பழகி விட்டேன்!

இன்று

ஒரே ஒரு

முத்தம் கேட்டிருக்கிறாய்…

என்ன செய்யப் போகிறேன்?!


பொய்யாவது சொல்

என்னைக் காதலிக்கிறாய் என்று!

சொல்லியாகிவிட்டதா?

சரி!

என்னது

சொன்னது பொய்யா?

அதெல்லாம்

கிடையாது!

ஆட்டத்தின் விதி

மாறிவிட்டது!

சொன்னது சொன்னதுதான்!

வா, காதலிக்கலாம்!


கிணற்றுத்தவளை..

தத்துவம்வாழ்வியல்

என்று

தாவித் தாவி பார்த்தாலும்

உன்

ஒரேபார்வைமழைத் துளியில்

மீண்டும்

காதல் கிணற்றிலேயேவிழுந்து விடுகிறது

என்

கவிதைத் தவளை.

பூ…

ஜோடிப் பூக்களைக் காட்டி ..

அது நீயும் நானும் என்றேன்!

நமக்குள் இத்தனை இடைவெளியா..

என்று ஏக்கப்பட்டாய் நீ!


யார் வந்தது கனவில்?

……..இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா பொய் விடுவாய்!

சமூக அவலங்களும் ,சோகமும் சொல்லும் கவிதைகளும் எழுதுவதில் மிகுந்த திறன் உள்ளவர்….

…என் மனதை வெகுவாக பாதித்த…. ஒரு ஏழைப் பெண்ணின் புலம்பல்….

கூரை..

முப்பது வயசு கிட்ட

மூத்தவ காத்திருக்கா!

இருவது வயசு தாண்டி

இளையவ இங்கிருக்கா!

பதினாலு வயசிலயே

பருவம் வந்து சேந்துட்டியே!

எரியுற என் வயித்தில்

எண்ணைய ஊத்திட்டயே!

அபியின் கவித்திறத்தில், உருவாகும் எந்த வார்த்தைக்கோப்பும் சோடை போவதில்லை என்றாலும் ,என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அவருடைய தத்துவம் பேசும் கவிதைகள் தான்….

சரளமான உருவக வீச்சு, யதார்த்தமான வார்த்தைப் பிரயோகம், ஆஹா வென வியக்க வைக்கும் அழகிய தத்துவங்கள் என , அருமையான வார்ப்புகள்…

அடையாளம்..

உருகும் பனிப்போர்வை

உதித்ததின் அடையாளம்!

புரிதலும் புன்னகையும்

மனிதத்தின் அடையாளம்!

அருகாமை நாடல்கள்

அன்பின் அடையாளம்!

நெருடாத ஊடல்கள்

நேசத்தின் அடையாளம்.

காணாமல் போன கனவுகள்

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

அதனால்…

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

தேடுகிறேன்..

என்னைத் தொலைத்து என்னுள் தேடுகிறேன்….

……நிறம்__

பாலைப் போல

என்று பாலூட்டியவள் சொல்வாள்,

கள்ளைப் போல்

என்று கள்ளூட்டியவர் சொல்வார்.

கருமை நிறமென்று –

என்னால் கருகியவர் சொல்வார்!

செம்மை நிறமென்று –

என்னை செதுக்கியவர் சொல்வார்!

நிமிஷத்துக்கு நிமிஷம் நிறம் மாறுவதால்..

பச்சோந்தி நிறமென்று –

தேடல்

பலகையில் எழுதுங்கள்!

அருமையான கவிதைகள் இன்னமும் உண்டு…நான் ரசித்த வரிகளும் ஏராளம்…நினைவில் நின்றவையும், நெகிழச்செய்தவையும் நிறையச்செய்திடும் பக்கங்களை…உனை நண்பனெனச் சொல்லிக் கொல்வதில் பெருமை…அபி.

DEDICATED TO ALL MY SCHOOLMATES…(THE 1991 BATCH)

ALPHA MATRICULATION SCHOOL..

CHENNAI

…..ஷஹி…

….

Advertisements