“விழுகின்ற மழைத்துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையில் சேமிக்கத்துணியும்”;” இப்படிக்கு இளங்கோ”...மூன்றாம்கோணம் குழுவிற்கு மிகவும் பிடித்தமான பதிவர்,  விழுதுகள் என்ற அமைப்பைத்துவங்கி அருமையாக நடத்திக்கொண்டு இருக்கும் சமூக அக்கறை மிக்கவர், அழகான இயல்பான எழுத்து நடை, துளியும் அலட்டல் இல்லாத யதார்த்தமான இலக்கிய பாணி என்று சீரான பயணம் செய்து கொண்டிருக்கும் பதிவர் அவருடைய பேட்டியை மூன்றாம்கோணத்தில் பதிவு செய்வதில் மகிழ்கிறோம்…இனி பேட்டி..

1.உங்களப் பத்தி சொல்லுங்களேன்…(இந்த நான் ரொம்ப நல்லவன் தமாஷ் எல்லாம் வேணாம்..சீரியஸ் பேட்டி பாஸ்!) (இளமை, பள்ளி நாட்கள், வாலிபம்…..)

கோவை மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமான நல்லகாளிபாளையம் என்னும் ஊர்தான் நான் பிறந்த ஊர். மீறிப் போனால் ஒரு ஐம்பது வீடுகள் இருக்கும். சிறு அளவில் கிணற்று விவசாயம், நிலகடலைக் காடுகள், நெசவுத் தொழில் என இருந்த ஊர். பக்கத்தில் உள்ள புன்செய் புளியம்பட்டிதான் எங்களுக்கு டவுன். எது வாங்க வேண்டுமென்றாலும் புளியம்பட்டிதான் போக வேண்டும். வீட்டில் அப்பாவுக்கு தொழில் கைத்தறி நெசவு. இப்பவும் ஊரில் நெய்து கொண்டிருப்பவர்களில், இருவரில் அவரும் ஒருவர்.

படம்: எங்கள் வீட்டு கைத்தறி.

கைத்தறி, weaving machine

ஐந்தாவது வரைக்கும் கிராமத்தில் பள்ளி உண்டு. ஆறாம் வகுப்பிலிருந்து புளியம்பட்டி கே.வி.கே அரசுப் பள்ளியில். அது முடித்து ஈரோடு கலைக் கல்லூரியில் பட்டம். பள்ளி நாட்களில் பெரிய அளவில் எதுவும் நிகழவில்லை என்றாலும், பத்தாம் வகுப்பில் முதலிடம் வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. என்னை விட என் ஆசிரியருக்குத்தான் ரொம்ப மகிழ்ச்சி.

பள்ளி, கல்லூரி நண்பர்கள் நிறைய உண்டு, இப்பொழுதும் தொடர்பில் இருப்பவர்கள் நிறைய. 🙂

2.புத்தகங்கள் மீதான ஆர்வம் குறித்து….? ரஷ்ய இலக்கியம் ரொம்ப புடிக்குமோ?

வீட்டில் அவ்வளவாக வெளியில் சுற்ற விட மாட்டார்கள் . எனவே ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள். அப்பா, அக்கா என எல்லோரும் புத்தகங்களைப் படிப்பார்கள். புத்தகங்கள் என்றால் பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இல்லை. ராணி, தேவி, குமுதம், விகடன் போன்றவைகள். அந்தப் புத்தகங்கள், பக்கத்துக்கு வீட்டில் கடன் வாங்கிப் படித்த புத்தகங்கள் என நான் வளர்ந்தேன். கதைப் புத்தகம் படித்தால் திட்டாத ஒரே வீடு, எங்கள் வீடாகத்தான் இருக்கும். சாப்பிடும்போது படித்தால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அப்பொழுது படிக்க ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது.

ரஷ்ய இலக்கியத்தில் நான் படித்த முதல் நாவலே ‘குற்றமும் தண்டனையும்’ தான். இனிமேல்தான் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக ரஷ்ய இலக்கியம் மட்டும் பிடிக்கும் என்றில்லை. நல்ல இலக்கியம் எங்கிருந்தாலும் படிக்க வேண்டும் என்பது என் ஆசை.

3.ஜெயமோகன்…?

ஜெமோவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், வழி தெரியாமல் இருந்த ஒரு வாசகனுக்கு நல்ல இலக்கியத்தை சொல்லிக் கொடுத்தவர் அவர். அவரைத் தொடர்ந்தே ப.சிங்காரம், ‘குற்றமும் தண்டனையும்’ எம்.ஏ.சுசீலா, இப்பொழுது ஆ.மாதவன் எனத் தொடர முடிகிறது. ஒரு கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, மார்க்சியம் என்றெல்லாம் பேசினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதை அவரிடம் கேட்க ‘முதலில் அப்படித்தான் இருக்கும்.. பழகினால் சரியாகப் போய்டும்’ என்றார். இன்னும் படிக்க வேண்டியது நிறையஇருக்கிறது.

4.சுசீலா அம்மா…?

ஜெமோவின் தளத்தில் இருந்து சுசீலா அம்மாவிடம் வந்து சேர்ந்தேன். அப்புறம் அவரின் மொழிபெயர்ப்பு நாவலான, ‘குற்றமும் தண்டனையும்’ படித்து விட்டு அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். ஆ.மாதவன் அவர்களுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ வழங்கிய விருது விழாவில் அவரைச் சந்திக்க முடிந்தது. அதிகம் பேச முடியவில்லை. நலம் விசாரித்து விட்டு திரும்பி விட்டேன். அவரின் அடுத்த மொழிபெயர்ப்பு நாவலான ‘அசடன்’ படிக்கவேண்டும்.

5.உங்க விழுதுகள் அமைப்பு பத்தி சொல்லுங்க…எப்புடி ஆரம்பிச்சீங்க? எதனால இந்த ஆர்வம்? நீங்க வளர்ந்த, படித்த சூழல் தான் காரணமா?

என் நண்பன் கமலக்கண்ணன் சென்னையில் சமூக சேவையில் டிப்ளோமா படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நானும் சென்னையில் இருந்தேன். அவ்வப்பொழுது பேசி, ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன என்று, இன்னொரு நண்பனான பார்த்தசாரதியைச் சேர்த்து இவ்வமைப்பை உருவாக்கினோம். முதலிலேயே கொஞ்சம் ஆர்வம் இருந்தது. நாங்கள் வளர்ந்த சூழல் கூட காரணம் என்று கூட சொல்லலாம். கிராமங்கள் நிறைந்த எங்கள் ஊர்ப் பகுதிகளில், குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்களாகி விட்டால் திருப்பூர் பனியன் கம்பனிகளுக்கு வேலைக்கு போய் விடுகிறார்கள். ஏன், எங்கள் கிராமத்திலிருந்து என் கூட படித்த ஒரு பத்து பேரில் முழுதாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவன் நான் மட்டும்தான்.

எங்கள் விழுதுகள் அமைப்பின்  புகைப்படம்

இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் பெற்றோர்கள் என்றாலும், பெரும்பாலும் குழந்தைகளுக்கு கல்வி மேல் ஆர்வம் ஏற்படுவதில்லை. ஆங்கிலம் தெரியாதது, கணக்கு வராதது, பெயில் ஆனது என அவர்களாகவே பள்ளியில் இருந்து நின்று விடுகிறார்கள்.

பெற்றோர்களுக்கும் அவர்கள் வேலைக்குப் போவது மகிழ்ச்சியே. ரொம்ப காலம் கழித்து திரும்பிப் பார்க்கும்பொழுது இப்பொழுது அவர்கள் உணர்கிறார்கள் படிப்பின் அருமையை. இதைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் விழுதுகளை 2008ல் ஆரம்பித்தோம்.

6. உங்களோட இந்த அமைப்புல ஆர்வமா ஈடுபாடு கொண்டுள்ள உங்க நண்பர்கள் பத்தி?அவங்க புகைப்படம் கிடைக்குமா?

விழுதுகள் ஆரம்பித்தவுடன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி அனைத்துச் செலவுகளுக்கும் நண்பர்கள் தான் கை கொடுக்கிறார்கள். எங்கள் நண்பர்கள் வட்டம் பெரிது என்பதால் ஒவ்வொரு நண்பரையும் பங்கு பெறச் செய்தோம். எல்லோராலும் உதவிகள் செய்ய முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு என்று சில கடமைகள், வீட்டு பிரச்சினைகள் என பல்வேறு செலவுகள் இருக்கும். எனவே நாங்கள் யாரிடமும் வற்புறுத்தி கேட்பதில்லை. இணைத்து கொண்ட சில நண்பர்கள் மூலமாக நாங்கள் விழுதுகளை நடத்தி வருகிறோம்.

தற்சமயம் ஏழு கிராமங்களில் நாங்கள் மாலை நேரக் கல்வி மையங்களை நடத்தி வருகிறோம். அங்கங்கு உள்ள பொது இடங்களில் நடத்துவதால் வாடகை செலவு இல்லை. ஒவ்வொரு மையத்திற்கும் அந்தப் பகுதியில் உள்ள படித்தவர்கள் / தனியார் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள் என அமர்த்தி அவர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு நண்பர்களும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவர் பெயரை சொன்னால் நீண்டு விடும், குறிப்பாக ரஞ்சித் குமார், கார்த்திகேயன், பிரகாஷ், திருச்செந்தில், சரவணக்குமார், லோகநாதன், வினோத்குமார், அக்க்ஷய்… எனப் பல நண்பர்கள் எங்களின் பினனால் கரம் கொடுத்து தாங்கி கொண்டிருக்கிறார்கள்

(நண்பன் கமலக்கண்ணன் திரு.அய்யாசாமி அவர்களுடன்)

(எங்கள் மாணவர்களுடன் பிரகாஷ் மற்றும் நான்)

7.பதிவுலகத்துக்கு வந்தது எப்புடி? ஏன்? வருங்காலத் திட்டம் என்ன?

இரண்டு கருத்துக்கள் தவிர மூன்றாவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது என வெளிப்படுத்த இந்த பதிவுலகம் தான் துணையாக இருக்கிறது. எதைப் பற்றியும் வெளிப்படையாக சொல்லி விட முடிகிறது. என் கருத்தை நான் சொல்லுவேன் என்பதில் உறுதியாக இருக்கும் பல பதிவர்கள் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறார்கள்.

பதிவுலகம் பற்றி தெரியாத ஒரு காலத்தில், முதலில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்றுதான் படித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு அவர்கள் வழியாக மற்ற பதிவர்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். அதை எப்படி ஆரம்பிப்பது என ஒரு பதிவர் விளக்கி இருக்க, நானே என்ன பெயர் வைப்பது எனத் தெரியாமல் ‘இப்படிக்கு இளங்கோ’ என வைத்து விட்டேன்.

பள்ளி நாட்களில் கவிதை, கட்டுரை, பேச்சு என எந்தப் போட்டி வந்தாலும் கலந்து கொள்வேன். பதிவுலகம் பற்றித் தெரிந்தவுடன் என எண்ணங்களை வார்க்கும் ஒரு பெட்டகமாக அது இருக்கிறது. நான் எழுதுவதால் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை. என் எழுத்தைப் பார்க்க எனக்கு ஆசை, அவ்வளவுதான்.

8.பதிவுலகத்தில் உங்கள் நண்பர்கள்…அவங்கள பத்தி?அவங்க புகைப்படம்?

பதிவுலகத்தில் எழுத்து வழியாக நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் நேரில் பார்த்து பழகியது, பிரகாஷ்(சாமக்கோடாங்கி), முரளி(அன்பே சிவம்) இருவர்தான். அதிலும் பிரகாஷ் எங்கள் விழுதுகள் செயல்பாடுகளில் ரொம்ப ஆர்வமாக இருப்பவர். அவரைப் பற்றி என் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். முரளி நல்ல கவிஞர். இவரின் சில கவிதைகள் விகடனில் வந்திருக்கின்றன. பல நல்ல உலகத் திரைப்படங்களை பற்றி கூறியவர். நல்ல நண்பர். பிற பதிவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆர்வம் இருக்கிறது. ஆனால் காலம் அமையவில்லை, பார்க்கலாம்.

9.சினிமாவுல ரொம்ப ஆர்வமோ? கொஞ்சம் விலாவாரியான பதில்…

இலக்கியம் என்று வந்து விட்டால் சினிமாவும் சேர்ந்து தானே. சில நல்ல திரைப்படங்களைப் பார்க்கும்போது இதை பதிவு செய்தால் என்ன என்றுதான் எழுதுகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அவ்வப்பொழுது நல்ல படங்களைப் பற்றி எழுதுவார். அப்படித்தான் எனக்கு உலக சினிமா அறிமுகம் ஆகியது. ஒரே மாதிரியான மொக்கைக் காட்சிகளை பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, சில உலக சினிமா படங்களைப் பார்க்கும்போது அதன் ஆழமும், சொல்ல வந்த கருத்தும் எனக்கு முக்கியமாகப் பட்டது. அழுது வடியும் நாயகி இல்லை, செண்டிமெண்ட் இல்லை, ஐம்பது பேரை அடித்து துவைக்கும் நாயகன் இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் நான் எந்திரன் பார்க்கவில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?. அதற்காக தமிழ் படங்கள் பிடிக்காது என்றில்லை. ஆனால், பசங்க, நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் என்னைக் கவர்கின்றன.

10.இப்ப வந்துட்டேன் டெரர்ரான கேள்விக்கு…மூன்றாம் கோணம் பத்தி என்ன நெனக்கிறீங்க?

மூன்றாம் கோணம் தளத்துக்கு நான் முதல் வருகை தந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ‘குற்றமும் தண்டனையும்’ விமர்சனம் பார்த்துதான் நான் உள்ளே வந்தேன். கவிதைகள், திரை விமர்சனங்கள், கதைகள் என கலக்கி கொண்டிருக்கும் மூன்றாம் கோண நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

11.புகைப்படங்கள் எடுக்க புடிக்கும்னு நெனக்கிறோம்..அப்புடிதானே?…
அது பத்தி….

புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். நான் எடுக்கும் புகைப் படங்கள் அனைத்தும் என் செல் போனில் எடுத்தவை. ஒரு இருபது படம் எடுத்தால் ஒரு படம் தேர்கிறது. ஒரு நல்ல போட்டோவை பார்த்தால் அதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசிப்பேன். அதன் கோணம், வெளிச்சம் என யோசித்து நான் எடுக்கும்போது முயற்சி செய்வேன். நல்ல சூழ்நிலை இருந்தால் படம் நன்றாக அமைகிறது, இல்லை எனில் குழந்தை எடுக்கும் படங்கள் போலத்தான் நான் எடுப்பதும். மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.

12.நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல சேதி உண்டா?( ‘இளம்-கோ’ வாச்சே அதான் கேட்டோம்?) அதாவது சமூக சேவை, சமூக அக்கறை குறித்த உங்கள் கருத்து…

ஆஹா.. நாட்டு மக்களுக்கு நான் சொல்வதா?. கொஞ்சம் வயசு ஆகட்டுங்க, நான் சின்னப் பையன். 🙂

எல்லோரும் சமூக சேவை என்று இறங்கி விட முடியாது. ஏனெனில், பொருளாதார பலம் சிறு அளவாவது தேவை. இது வரைக்கும் எங்கள் விழுதுகள் அமைப்பிற்கு பெரிய அளவில் நாங்கள் எதுவும் செய்ய முடிவதில்லை. எங்களால் முடிந்த அளவிற்கு, மாணவர்களுக்கு நற் பண்புகள் சொல்லித் தருதல், மரங்கள் நடுதல், கண் முகாம் நடத்துதல் என சிறிய அளவில் நடத்தி வருகிறோம்.

அமைப்புகள் மூலம் அல்லாமல், நாமாகவே விரும்பினால் சில காரியங்கள் செய்யலாம். பக்கத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு சொல்லித் தருதல், நமது வீதியில் மரங்களை நடுதல்.. இவையெல்லாம் கூட வேண்டாம் ஒரு மூதாட்டியோ, கண் குறைபாடு உடையவரோ சாலையைக் கடக்க நாம் உதவலாமே.

13.உங்க விழுதுகள் மாதிரியான அமைப்பு ஆரம்பிக்க என்ன செய்யனும்? (அதாவது formalities, register பண்ணனுமா?)

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. முதலில் உங்கள் அமைப்பின் பெயரையும், முகவரியையும் முடிவு செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் நண்பர்கள் யார் இதில் இணைவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். மூன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பது நன்று. உங்கள் பகுதியில் உள்ள ஆடிட்டரை அணுகினால் அவர், உங்களுக்கு தேவையான ‘DEED’ மற்றும் ‘Trust’ பற்றி சொல்லுவார். அவரிடமே அந்த டாகுமெண்ட்களை வாங்கி, உங்கள் நண்பர்கள் அனைவரும் கையெழுத்துப் போட்டு, உங்கள் பகுதி பதிவாளரிடம் பதிந்து விட்டால், உங்கள் அமைப்பு ஆரம்பித்தாகி விட்டது. 🙂 . ஆடிட்டரை அணுகினால் அவரே வழிநடத்துவார்.

Advertisements