காதல் தேவதையால் தாராளமாக ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன் தபுசங்கர் .அவருடைய கவிதைகளில் நிரம்பி வழிவது காதலே..அவருடைய காதல் ததும்பும் வரிகளில் நான் வெகுவாக ரசித்த சில:

“ஒரே ஒரு முறைதான் எனினும்

உன் உன்னத நிழல் என்மீது பட்டபோதுதான்

நான் ஒளியூட்டப்பட்டுக் கவிஞனானேன்!”

“காதல்தான் நான் செய்யும் தவம்.

என் கடுந்தவத்தைக் கலைத்து

என்ன வரம் வேண்டும் என்று

எந்தத் தெய்வமும் என்னைக் கேட்காமலிருக்கட்டும்.

என் தவத்தைவிடச் சிறந்ததாய் எந்த வரத்தையும்

எந்தத் தெய்வத்தாலும் தந்து விட முடியாது. “

“ஒரு தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில்

நிலவைக் காட்டுவது மாதிரி,

காதல்

எனக்கு உன்னைக் காட்டியது.”

“நீ

எப்போதும்

தலையை குனிந்தே வெட்கப்படுவதால்..

உன் மதிப்பு மிக்க வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது!

ஒரேயொரு முறை

கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படேன்…

வெகு நாட்களாய்

உன் வெட்கத்தைத் தரிசிக்கத் துடிக்கிறது வானம்!”


“சில நேரங்களில்

அவள் உள்ளங்கையில் உயிர் வாழ்கிறாய்.

சில நேரம்

அவள் கன்னத்தை வருடுகிறாய்.

அப்புறம் அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.

கடைசியில் அவள் இடையில் ஊஞ்சலாடி ஓய்வெடுக்கிறாய்.

கைக்குட்டையே ..

நீ குட்டியூண்டு துணி என்றாலும்

கொடுத்துவைத்த துணி. “

“இந்த வேப்பமரத்தின் பழங்கள் இனிக்கிறதே..

என்றாய்,

இனிக்காதா பின்னே..

இப்படி நீ மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினால்?”.


“காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.

அவ்வளவு தான்…நின்று விட்டது காற்று.”

“நீ

யாருக்கோ செய்த

மௌன அஞ்சலியைப் பார்த்ததும்..

எனக்கும் செத்துவிடத்தோன்றியது”.

“என்னை உடைப்பதற்காகவே

என் எதிரில் சோம்பல் முறிப்பவள் நீ.”


“மழை வந்து போன பிறகும்

செடிகள் வைத்திருக்கும் மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது நீ வந்து போன பிறகும் உன்னை. “


“என் செய்கைகளில் இருந்து

காதலை மட்டும் எடுத்துக்கொண்டு

காமத்தை உதறி விடுகிற அதிசய அன்னம் நீ.”


“அன்று

நீ குடை விரித்ததற்காக் கோபித்துக் கொண்டு

நின்று விட்ட மழையைப் பார்த்தவனாகையால்

இன்று சட்டென்று மழை நின்றால்,

நீ எங்கோ குடை விரிப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்.”

“உன்னைப் பார்த்தால்..

எடை பார்க்கும் இயந்திரம் கூட

கவிதை எழுத ஆரம்பித்து விடும் போல .

உன் எடையைஅடிக்க வேண்டிய இடத்தில்

‘ அழகு நீங்கலாக 50 கிலோ ‘ என்று அடித்திருப்பதைப் பார்!”


“உனக்கு வாங்கி வந்த நகையைப் பார்த்து

‘அய்..எனக்கா இந்த நகை’ என்று கத்தினாய்.

நகையோ ,

‘அய்..எனக்கா இந்தச் சிலை’ என்று கத்தியது.”


“கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன கடல்அலைகள்…

‘கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே விட்டோமா நிலவை!’ என்று.”

”  இந்தா என் இதயம்.

விளையாடும்வரை    விளையாடிவிட்டுத்

தூக்கிப் போட்டுவிடு.

அது அதற்குத்தான் படைக்கப்பட்டது.”

“ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னைக் காட்டி

என்னிடம் கேட்கிறது-

‘ஏன் இந்தப் பூ நகர்ந்து கொண்டே இருக்கிறது’ என்று! ”

“இன்று காதல் ஜெயந்தி.

முழிக்காதே..

இன்று உன் பிறந்தநாள். ”

“சின்ன வயதிலிருந்தே

என்னை தொட்டுப் பேசும் பழக்கத்தை

நீ நிறுத்திக்கொண்ட போதுதான் தெரிந்து கொண்டேன்…

நீ என்னைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுவதை. ”

“இன்று

என்ன ராகத்தில் சிரிப்பாயோ என்றேன்.

நீ மெல்லிய புன்னகை செய்தாய்.

இன்று மௌன ராகம் தானோ. ”

“எதற்காகக் கஷ்டப்பட்டு கோலம் போடுகிறாய்?

பேசாமல்

வாசலிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திரு போதும்! ”

!காதலைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளத்தான் நான் பிறந்திருக்கிறேன் தெரிந்து கொண்டதும் இறந்து விடுவேன்!.”

..ஷஹி..

படங்கள் நன்றி இணையம்

Advertisements