நீ..
அழகையும் அழகையும்..
கூட்டி..
கடவுள் செய்த..
அழகுக் கூட்டல்.

நீ..
தேவதைகள் செய்ய
பிரம்மன் படைத்த..
மாதிரி தேவதை.

நீ..
அவைகளின் இனமாம்..
ரோஜாவும் மல்லிகையும்..
வழக்கு தொடுத்திருக்கிறது..
தங்களையும் அந்த அழகுப் பட்டியலில்
சேர்க்கச் சொல்லி.

நீ..
வாசலுக்கு அடிக்கடி..
வந்து போவதால்..
புலம்புகிறது நந்தவனங்கள்..
வண்டுகள் வந்து நாளாயிற்றாம்.

கொஞ்ச நேரம் வீட்டிற்குள் செல்லேன்..
உன் வாசல் சுற்றும் வண்டுகள்..
மறுபடியும் நந்தவனம் சுற்றட்டும்..

நீ..
நகர்வலம் போகிறாய்..
இலையுதிர் காலத்திலும்..
பூத்துக்குலுங்கும் சாலையோர மரங்கள்..

நீ..
எடை குறைக்க.. சென்ற
நடை பயணத்தில்..
எடையேறின பூங்காவின் பூக்கள்..

நீ..
சுவாசித்ததால்..
தென்றலாய் ஆனது புயல் காற்று…

நீ..
பேசுகிறாய்..
பேசும் பூவைக் கண்டு..
இமைக்க மறந்தன பூக்கள்..
வாயடைத்து நிற்கின்றன வண்டுகள்..

நீ..
தொட்டால்..
விரிகிறது தொட்டாச்சிணுங்கி..

நீ..
பேசும் சங்கீதத்தை..
எப்பொழுது கற்றுத்தருவாய்..
உன் வீட்டு மரக்கிளையில் தவமிருக்கும்
அதிகாலை குயில்கள்..

நீ..
குளக்கரையில்.
குளிக்க வந்ததாய் எண்ணி..
குதூகுலிக்கிறது குளம்..

நீ..
குளித்துவிட்டு வந்து ஆடைப்பெட்டி
திறக்கையில்
என்னைக் கட்டிக்கோ..
என்னைக் கட்டிக்கோ..
கேட்கிறதா புடவைகளின் கெஞ்சல்கள்?

நீ..
முகம் பார்க்கையில்..
வானமாகிவிடுகிறதடி..
கண்ணாடி..

நீ..
பூமியில் இருப்பது..
சூரியனுக்கும் தெரிந்துவிட்டதோ?
பாவம் 24 மணி நேரமும் பூமியை சுற்றுகிறது..

நீ..
இன்று குடை மறக்கவேண்டுமாம்..
மழையின் பிரார்த்தனை..

உன் பிறந்த நாளை..
அகில உலக அழகு தினமாய்..
இன்னும்..
அறிவிக்காததை கண்டித்து..
கண்டம் விட்டு கண்டம்..
கண்டனப் பேரணி செல்லும் பறவைகள்..

உன்னையும் காதலையும் அல்லாமல்..
நான் கவிதை எழுதவேண்டுமாம்…

நீயும் காதலும் இல்லாமல்..
நானே இல்லை என்பதை
எப்படி இவர்களுக்கு புரியவைப்பது?

என்னைத் தாண்டி நீயும்
நம்மைத் தாண்டி காதலும்..
வாழ்வதைச் சொல்லவே..
இந்த கவிதைகள்…
உனக்காவது புரிகிறதா?

Advertisements