மு.மேத்தா அவர்களின்

“ஆகாயத்துக்கு அடுத்த வீடு” கவிதைத் தொகுப்பிலிருந்து,

“பூமியில்

நட்சத்திரங்களைப் பயிரிடு…

புல்லாங்குழல்களை

அறுவடை செய்..

பொங்கல் விழாக் கொண்டாடு!

கோவில்களில்  மசூதிகளில்

உன்

குப்பையைக் கொட்டாதே..

இதயத்தைப் பூக்கூடையாக்கி

ஏந்திச் செல்!

சாதி மத சமயப் பூசல்கள்

ஆயிரமாயிரம்

ஆண்டுகளுக்கு முந்திய

அழுக்கு நாட்காட்டிகள்!

மூலையில் வீசவேண்டிய

அவற்றிலா

முகம் பார்த்துக் கொள்கிறாய்?

விடிகாலைப் பொழுதுகளில்

ஏராளமான கண்ணாடிகளை

ஏந்திப்

புன்னகை செய்கின்றன

பூக்கள்!

அந்தப்

பனித்துளிகளில் உன்னைப்

பார்த்துக் கொள்!

தூசி துப்பட்டைகளை

ஒதுக்கித் தள்ளும்போது

துடைப்பங்கள் அழுவதில்லை.

பொய்மையைக்கொளுத்து !

போகியை நடத்து!

கண்ணீரிலா துவைப்பது

கைக்குட்டைகளை?

கசக்கியா பிழிவது

இதயங்களை?

தமிழ்ச் சங்கங்களில்

தீர்மானம் போடு

சாதிச்சங்கங்களைக்

கலைத்துவிடு!

காதலோடு உன்னைத்

தீண்டுகிறது காற்று!

அதன்

சிறகுகளில் தீவைக்காதே!

பசியோடு அமர்ந்திருக்கிறது

பானை!

அதன் அடுப்பில் நெருப்பு மூட்டு!

வழங்குவோம் இந்த

பூமிக்கு வரம்..

இனி..

தேசமே சமத்துவபுரம்!

உலகமே சமாதானபுரம்!”

Advertisements