“ரசித்ததில் பிடித்தது”- தலைப்பில் விஜய கங்காவின்’ மற்றொரு மழையில்’ தொகுப்பிலிருந்து நான் ரசித்த வரிகளைப் பகிர்ந்து கொண்டதிலிருந்தே கேள்விகள் பல கிளம்பிவாறு உள்ளன என்னுள். திரு.அபி அவர்கள் விஜயகங்காவின் கவிதைகளை வெகு காட்டமாக விமர்சித்தார். பின்னூட்டங்களைப் பார்த்துப் பொங்கி , பதில் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயத்தின் காரணம் நானும் ரொம்பவும் மெனக்கெடாமல் தோன்றியதெல்லாம் எழுதிவிட்டேன்.ஆனால் என் பங்கு நியாயம் செய்யத்தவறி விட்டேன் என்று மனம் சொல்லிக்கொண்டே தான் இருந்தது.

விஜயகங்காவின் கவிதைகள் திமிரான நடை கொண்டவை, மறு வாசிப்பு தேவைப்படும் அளவு புரியாத்தன்மை கொண்டவை என்பது தான் அபியின் வாதம். சினிமா ரசிகர்களை நாம் A, B, C என்று நிலைப்படுத்துவதில்லையா? வாசிப்பும் அப்படித்தானே? புத்தகங்கள் வாசிக்க வாசிக்க சாதாரண எழுத்து, தீவிர இலக்கியம் என்பதெல்லாம் வாசிப்பின் நிலைகள் என்று புரிந்து கொள்கிறோமே? எத்தனை அதிகம் வாசிக்கிறோமோ(எத்தனை முறை என்றல்ல, எவ்வளவு புத்தகம் என்று)..அத்துணை எளிது தானே புரிதலும்? ஒரே முறை வாசிப்பில் புரிந்து விடுவதெல்லாம் நல்ல கவிதைகள் அல்ல என்று ஒரு போதும் சொல்வதற்கில்லை..அதே சமயம் மறு வாசிப்பு தேவைப்படும் படியான இருண்மைக் கவிதையும் பலப் பல தளங்களுக்கு வாசகனை இட்டுச் செல்கிறதே..அதுவே தானே இருண்மைக் கவிதைகளின் (obscurity)சிறப்பு? வாசகனை யோசிக்க வைப்பது எல்லோராலும் முடியுமா?எழுதுபவனை, கவிஞனை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமா?

அதிகமான, தீவிரமான வாசிப்பு அனுபவம் உள்ளவர்களின் மொழி வல்லுனம் பெற்றதாகத்தானே இருக்கும், அதுவே தானே அவர்கள் இயல்பான நடையாகவும் இருக்கும்? கடலைப் போய் குப்பிக்குள் அடைக்கவியலுமா? நீரோடைகளும், ஆறுகளும் தாம் குளிக்க ஏற்றவை, கடல் சீற்றங்கொள்ளும் என்றால் அது தனிப்பட்ட ஓர் கருத்து அவ்வளவு தான். கடலைத் தேடி நீந்தத் துடிப்பவர்களின் ஆவலை குட்டைகள் தீர்க்குமா? வாசகனின் மனநிலை, அவனுடைய வாசிப்பார்வம், காலம் இவை எல்லாவற்றையும் பொறுத்து பலப் பல கருத்துக்களைச் சொல்லவல்லன இருண்மைக் கவிதைகள். சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லாமல், உணர்த்த முயலுவன இக்கவிதைகள்.

அழகிய ஓவியங்கள் ரசிப்புக்குரியன தாம்…மாடர்ன் ஆர்ட் புரியவில்லை என்பதால் வெறுக்க முடியுமா? அவையும் ஓர் இலக்கணத்துக்கு உட்பட்டு வரையப்பட்டு பல அர்த்தங்களைத் தம்முள் பொதிந்து வைத்திருப்பவை தான்.

அதோடு காதல் கவிதைகள் மட்டுமே எழுதுவது என்று ஓர் கூட்டம் உள்ளது. எழுத்தாற்றல் என்பது எத்தகைய ஓர் வரம்! எல்லாருக்கும் கைவரப்பெறுமா? அதைக் காதலைப் பற்றி மட்டுமே எழுதி ஏன் சுருக்கிக் கொள்ள வேண்டும்? அவசியம் காதலை எழுதத்தான் வேண்டும்.ஆனால்…இங்கு தான் எனக்கொரு சந்தேகம். பெண்களை தேவதைகள், மலர்கள் என்றெல்லாம் அதீதமாய்ப் புகழ்கிறார்கள் ஆண்கள், பெண்களும் காதல் கவிதைகள் எழுதுகிறோம்..ஆனால் எந்த ஆணையும் சிறகுகளோடு கற்பனை செய்வது கொஞ்சம் சிரமம் தான் எமக்கு!

..ஒரு விடயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று விஞ்ஞானி சொல்வான், ஏன் செய்ய வேண்டும் என்று இலக்கியவாதி சொல்வான் என்பதாய் எங்கோ படித்த நினைவு. விஞ்ஞானிகளுக்குப் பாடம் நடத்தவல்ல இலக்கியவாதி, அவன் ஆற்றலை வாழ்வின் ஒரு கட்டத்தை மட்டும் எழுதி ஏன் அடக்கி விட வேண்டும்? எழுத்து எனும் கூர்வாள் கொண்டு சமையலும் செய்யலாம் போரும் புரியலாம். சமையல் செய்து தான் ஆக வேண்டும்..ஆனால் உண்டு உறங்குவது மட்டும் தான் வாழ்வா? இத்தனை அரிய கூர்வாள் கொண்டு சமூகப் புரட்ச்சிகள் செய்ய வேண்டாமா? குளிரூட்டப்பட்ட அறைகளில் வாழ்ந்து, அமர்ந்தபடியே பணி புரியும், கணிணி யுகம் வாழ் கவிஞன் காதலைத் தவிர வேறெதையும் பெரிதென ஏன்  நினைப்பதில்லை? பெண்ணியம், சமூக ஏற்றத்தாழ்வு, அரசியல், உலகமயமாக்கல், சுற்றுசூழல் மாசு இவற்றையெல்லாம் யார் எழுதுவது?…

..ஷஹி..

Advertisements