அவள் எழுதுகிறாள்…

அவன் கொஞ்சம் கறுப்பு..

இருட்டு எனக்கு சினேகிதமாகி விட்டது !

அவன் குரல் கொஞ்சம் கரகரப்ரியா குயில்களை நான் வெறுக்கத் துவங்கியிருக்கிறேன்!

அவன் மீசை கொஞ்சம் குத்தும் இப்போது நான் முட்களின் ரசிகை!

அவன் ஒரு மௌன வாசி கச்சேரி நடக்காத அரங்கங்களில் அமரவே பிரியப்படுகிறேன்!

அவன் குறுந்தாடி மன்மதன் பல் துலக்கியால் என் முகமுரசி பழக்கபடுத்திக் கொள்கிறேன்!

சுவாசத்தைப் பரிமாறிக் கொள்வோம் ..

உன் கேசத்தைக் கலைத்து விடாத காற்று !

உன் மேனியை சுட்டு விடாத வெய்யில் !

உன் மேல் மட்டும் தூறாமல் பொழியும் மழை !

உனக்கு மட்டும் தென்றலடிக்கும் மரம்!

இருந்தால் நல்லது .

கனவில் நீ..

ஒரு சமயம் நீ அழகான பயங்கரம்!

ஒரு சமயத்தில் நீ பயங்கரமான அழகு!

நீயும் காதலும் ஒன்று !

கொல்வீர்கள், சாகவிட மாட்டீர்கள் !

நீ தான் எவ்வளவு இனிப்பான விஷம் !

மெட்டியை விட சின்னது பூமி !

மிதித்து விட்டா போவது வழியில் அவள் பாதச் சுவடு !

பேருந்து கம்பியைத் தடவிப் பார்க்கிறேன் அவள் ரேகைத் தட்டுப்படுமா ?

இந்தச் செடிக்கு காதியில் வாங்கிய கெட்டித் தேன் ஊற்றலாம் அவள் தவறாமல் அதில் பூப்பறிக்கிறாள்!

அவள் வீட்டு வாசலைத் தோண்டினால் புதையல் நிச்சயம் அங்கே அவள் தினசரி கோலம் போடுகிறாளே !

இதோ அவள் மறந்து போன கைக்குட்டை …இல்லை கசங்கிய ஒரு துண்டு வானவில்!

உதட்டோரப் புன்முறுவல் அது ஐம்பெருங்காப்பியத்தின் ஆரம்ப விழா!

இரவில் விழுகிறதே வானவில் ஓ! அவள் உறக்கம் வராமல் மாடியில் உலவுகிறாளா ?

இந்தப் பூமிக்கு இவ்வளவு அழகாக ஓவியம் வரைய வருமா? அடடா..அது அவள் பாதத் தடமா ?

அவளிடம் சொல்லுங்கள் உனக்காக ஒருவனுக்கு அங்கே கண்கள் வழியாய் இதயம் ததும்பிக்கொண்டிருக்கிறதென்று !

நிலவில் வானவில் ..

நீ சிரித்துக் கொண்டிருக்கிறாயா?

என் வீட்டுச் செடிகள் பூத்துக் கொண்டிருக்கிறது !

நீ அண்ணாந்து பார்த்திருப்பாய் ஆகாயத்தில் வானவில் !

உன் பெயரை எழுதுகிறேன்… நான் எவ்வளவு பெரிய கவிஞன் !

பறிக்கத் துடிக்கிறது கைகள் உன் புடவையெங்கும் பூக்கள் !

என் இருதயத்தில் ரத்தக் கசிவு என்று மருத்துவத் தகவல் என்றாவது நீ அழுதிருப்பாயோ !

இரவு வருகிறதோ இல்லையோ கனவு வருகிறது ! கனவு வருகிறதோ இல்லையோ இமைகளை மூடினால் நீ வருகிறாய் !


ஈரமான தீ..

முத்தம்..

நான்கு உதடுகளும் ஒரு தலைப்புச் செய்தியை வாசிக்கிறது !

குருதியைக் கொதிக்க வைக்கும் மலர் உலை!

இரண்டு ஓவியங்கள் ஒன்றில் ஒன்றை வரைந்து கொள்வதற்கான வாய்ப்பு !

ஒரு காப்பியத்தின் தகுதி பெறும் கவிதை!

ஒரு கவிதையின் நுணுக்கம் பொருந்திய காப்பியம் !

இதழ்கள் செய்து கொள்ளும் ரகசிய காப்புப் பிரமாணம் !

ஒரு விடுகதையை எழுத வந்து தொடர்கதை எழுத துவக்கி வைப்பது !

ஒரு ஜீவனின் மொழியை இன்னொரு ஜீவன் மொழிபெயர்க்கிறது!

…ஷஹி…

Advertisements