சோ ராமசாமி

துக்ளக் பத்திரிக்கையின் முதலாளி சோ வருடா வருடம் துகளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை விமரிசையாக நடத்துவார். இதில் துகளக் வாசகர்கள் கலந்து கொள்வார்கள். அதில் துகளக் சோ தன் அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.

இந்த முறை சோ துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதன் முக்கிய அம்சங்கள் :

1. கருணாநிதி அரசு ஊழலின் உச்சத்தையே ஸ்பெக்ட்ரம் மூலம் தொட்டு விட்டது.

2. கருணாநிதி குடும்பம் திரைப்படத்தில் செலுத்தும் ஆதிக்கம் நல்லதற்கல்ல!

3. கருணாநிதி பதிவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு தகுந்த ஆள் ஜெயலலிதாதான்.

4. விஜய்கந்த் தனித்து நிற்க கூடாது. அவர் அதிமுகவுடன் இணைந்து கூட்டணி வைத்து கருணாநிதியை எதிர்க்க வேண்டும்.

5. கருணாநிதியின் அறிக்கையில் தெளிவில்லை. அவர் பயப்படுகிறார். பெண்மைத்தனம் கருணாநிதியிடம் வெளிப்படுகிறது . ஜெயலலிதாவின் அறிக்கைகளில் தெளிவு இருக்கிறது. அவரிடம் ஆண்மைத்தன்மையை பார்க்கலாம்.

சோ பேசிய முத்துக்களில் நாம் தேர்ந்தெடுத்த ஐந்து முத்துக்கள் இவை. ஒரு காலத்தில் சோ தமிழகத்தின் தலை சிறந்த நடு நிலை வாய்ந்த அரசியல் விமர்சகராக மதிக்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது சோவுக்கு வயதாகிவிட்டது. உளற ஆரம்பித்து விட்டார். சோ பேசியதில் முதல் இரண்டு கருத்துக்களில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவை அனைவரும் அறிந்ததே! ஆனால் அதன் பிறகு அவர் பேசிய கருத்துக்களில் தாம் நாம் சோவின் மீது பிழை காண்கிறோம். கருணாநிதி ஆட்சியில் ஊழல் இருப்பதற்காக ஜெயலலதாதான் ஒரே தீர்வா? ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மெகா ஊழல்களை சோ மறந்து விட்டாரா? வளர்ப்பு மகன் கல்யாணம், லட்சம் மதிப்பு செருப்புகள், டான்சி ஊழல் என்று தமிழகமே ஆடிப் போனதே அம்மையார் ஆட்சியில்… அப்போது சோ தமிழ்நாட்டில் இருந்து இதே அம்மையாரை எதிர்த்து எழுத வில்லையா? ஊழல் என்ற பிரச்சினையை முன் வைத்தால் அதில் திமுக. அதிமுக இரண்டுமே சறுக்கி விழும். இதில் எந்த பாம்பு நல்ல பாம்பு? விஜய்காந்த தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் இணைய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்… ஏன் தமிழகத்தில் திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக ஒரு ஊழலற்ற புது அரசு உருவாகக் கூடாது என்பது சோவின் எண்ணமா?

சோ பேசியதில் ஐந்தாவது பாயின்ட் உண்மையிலேயே நமக்கு அதிர்ச்சி தருகிறது. ஒரு முதிர்ந்த பத்திரிக்கையாளர் பேசுகிற பேச்சா இது ? பெண்மைத்தன்மை… ஆண்மைத்தன்மை… என்ன செக்ஸ் க்ளீனிக்கா நடத்துகிறார் சோ?  அதுவும்  தெளிவில்லை என்றால் அது பெண்மைத்தன்மையாம். இப்படி ஒரு சாவினிஸ்டிக் உரையை இந்த நூற்றாண்டில் சோ பேசலாமா? சோவின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இனி வரும் காலங்களில் பழைய நடுநிலை வாய்ந்த தெளிவான சோவை பார்க்க வேண்டும் என்ற அவாவை துக்ளக்கிற்கு தெரிவித்துக் கொள்கிறோம்!

Advertisements