காதல் செய்திகள்

வணக்கம்!

காதல் செய்திகள் !

வாசிப்பது நான் !

சுவாசிப்பது உன்னை !

தலைப்புச் செய்திகள் …

திங்கள் – 34

செவ்வாய் – 24

புதன் – 36

வியாழன் – விடுமுறை

வெள்ளி – 43

உன் துப்பட்டா தலைப்பில்

எத்தனை பூவென்ற

எண்ணிக்கை கூட

எனக்கு செய்திதான்!

அரசியல் செய்திகள் !

கூட்டணி பற்றி- என்

கட்சியில் முடிவு!

கட்சியைக் கலைத்துவிட்டு

உன் கட்சியில் இணைவெதென்று!

வணிக செய்திகள்

பங்குச் சந்தை

பலநூறு பாயின்டுகள் சரிவு!

உனக்கு ஜலதோஷமாமே!

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பைக்கு அணி அறிவிப்பு!

நான் தான் ஒரே வீரன்!

உலகமே நீதானே…

கோப்பையை எங்கே

ஒளித்து வைத்திருக்கிறாய்?

வானிலை அறிவிப்பு!

மேக மூட்டமோ

இடி மின்னலோ

எதுவாயினும்….

இதய வானில்

மையம் கொண்டிருக்கும்

இந்தப் புயல்

கரையை கடக்கவே கடக்காது!

சற்று முன் கிடைத்த தகவல்:

நீ படிக்கிறாய் என்றதும்…

இந்தச் செய்திகள்…

“கரன்ட்” செய்திகளாய் மாறிப் போனது!

மீண்டும் தலைப்புச் செய்திகள்

திங்கள் : 45

செவ்வாய் : 27…..

Advertisements