ஆர்கூட்டில் வாழும்…
ஃபேஸ்புக் பறவைகள்..
நாங்கள்.

ஓர் கூட்டு பறவைகள்தான்
ஒரு நாளும் பேசியதில்லை
ஓரிரு வார்த்தைகள் தவிர்த்து.

அந்நிய முகங்கள் தேடி
அன்யோன்யம் நாடி
ஆர்கூட்டில் அடைக்கலம்.

பெற்ற சொந்தம்..
உற்ற சொந்தம்..
அருகிருந்தும்..
அன்பு அருகி

வீட்டுப்பொழுதுகள்
வெறும் பொழுதுகளாய்..
நகர்ந்திட

பெரும்பொழுதுகள்
பெரும்பாலும்
ஃபேஸ்புக்கில்.

பின்னிரவு ஃபேஸ்புக் அரட்டைகளும்..
முன்காலை குறுஞ்செய்தி ஓசைகளும்..
ஒரு நாளின்
நீள அகலங்களை
நிர்ணயிக்க

உலக எல்லைகள் தாண்டி
ஓய்வின்றி
இணைய உலா வருகிறோம்.
ஊருக்குள் மட்டும்
உயரச்சுவர்கள் எழுப்பி
உள்ளுக்குள் ஓளிந்து கொள்கிறோம்.

விளையாட்டு அரட்டையில்
வந்து மறையும்
பொய்யான, புரட்டான
வேற்றுக் கிரகத்து
தோழமையின்
தோற்றக்குறிப்பு பெயர்கள்
அனைத்தும் அத்துப்படி.

பக்கத்து வீட்டுக்காரர்
பெயர்..?
யோசித்துதான்
சொல்ல வேண்டியிருக்கிறதே..
அது எப்படி?

வெளியில் ஒரு முகமூடி
வீட்டுக்குள் ஒரு முகமூடி
கழற்றிய பிறகு
வெத்து வெடி
வேடிக்கை மனிதராய்

கண்ணாடி பார்க்கையில்
நிஜமுகம் கேலி செய்வதை
பாராமுகமாய்
பதுங்குகிறது.
மனசு.

இதையும் ட்வீட் செய்துவிடுவாயா?
கேட்கும் இதயத்தின் கேள்விக்கு
பதில் மெயில்
இன்னும் வரைவில்..

– பிரியன்
(நன்றி- படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)