முதல்வர் கலைஞருடன் ஒரு கற்பனை பேட்டி

ரஜினி -கருணாநிதி

கேள்வி : ராணான்னு ரஜினியோட அடுத்த படத்துக்கு பெயர் வச்சிருக்காங்களே… அது தமிழ் பெயரா? அதுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுமா?

கலைஞர் : ராணா என்று தமிழில் வார்த்தை எதுவும் தனியாக இல்லை என்ற போதும்… உடன்பிறப்புக்களுக்காக குவார்ட்டர் கட்டிங்கையே தமிழாய் பார்த்தவன் தான் இந்தக் கருணாநிதி… தமிழர் வாழ்க்கையில் குவார்ட்டரை அரசு மது பானக் கடைகளின் மூலம் சேர்த்தைத சாதனையாக சொல்லும் மக்களைப் பார்க்க அண்ணா இன்று உயிருடன் இல்லையே என்ற ஒரே கவலைதான் எனக்கு. ராணாவில் இரண்டு எழுத்து… ரா மற்றும் ணா. இதில் ரா என்றால் வா என்று தெலுங்கில் அர்த்தம்… தெலுங்கு தமிழ் வகையில் வந்ததுதான் என்பதை திராவிட வழியில் வந்தவர்கள் அறிவார்கள்… அடுத்தது ணா.. ணா என்றால் தனியாக எதுவும் பொருளில்லை… ஆனால் பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அருளுலகம் உண்டு என்று குறளோவியத்தில் நான் எழுதிய காரணத்தினாலே… தம்பி ரஜினி என் மேடைகளில் தோன்றும் வரை அவருக்கு என் அருள் இருக்கும் என்பதை நினைவில் கூரந்து…கா என்ற எழுத்தை தனியாக குறிப்பிடும்போது காணா என்றும் சா என்ற எழுத்தை தனியாக குறிப்பிடும்போது சாணா என்றும் அதுபோல ரா என்ற எழுத்தை தனியாக குறிப்பிடும்போது ராணா என்றும் தமிழர் சொல்லி மகிழ்வதால் ராணா தமிழ் பெயர்தான் என்று சொல்வதில் இந்தக் கருணாநிதி மகிழ்கிறேன்…

கேள்வி : அய்யா… ராசாவை புடிச்சி உள்ள போட்டுட்டாங்களே… ஆனாலும் அவர் குற்றவாளி இல்லைன்னு சொல்லியிருக்கீங்களே…

கலைஞர் : ஒருவரை கைது செய்வதினாலேயே ஒருவர் குற்றவாளி என்று சொல்லிட முடியுமா? நீதிமன்ற தீர்ப்பு என்ற ஒன்று எதற்கு?

கேள்வி : அப்ப, நீதிமன்ற தீர்ப்பு வந்தா ஒத்துக்குவீங்களா ?

கலைஞர் : உயர் நீதி மன்றம் , உச்ச நீதி மன்றம் எல்லாம் எதற்கு?

கேள்வி : உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தா ஒத்துக்குவீங்களா ?

கலைஞர் : தம்பி ராசா தலித் என்ற காரணத்தினாலேயே 2 G யை ஏலம் விட சொல்கிறார்கள்…. ஏலக்காய் விலை தெரியாத வீணர்கள்! … நீதிமன்றங்கள் புல்லுருவிகளின் கூடாரமாகிவிடக் கூடாது என்று பராசக்தியிலேயே வசனம் எழுதியவன்தான் இந்தக் கருணாநிதி!

கேள்வி: புரிஞ்சுடிச்சிங்க…. விலையேற்றத்தை மக்களால சமாளிக்க முடியலன்னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே…

கலைஞர் : அம்மையார் ஆட்சியில்  ராயபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள பெட்டிக் கடையில்  பெருங்காயம்  அநியாய விலைக்கு விற்றதை அம்மையார் மறந்திருக்கலாம்… கருணாநிதி மறக்கவில்லை!

கேள்வி : பாமகவுடன் கூட்டணி இருக்குன்னும சொல்லிருக்கீங்க… ராமதாஸ் மறுத்திருக்கிறாரே…

கலைஞர் : அது, தம்பி துரைமுருகன் ஏற்கனவே பெட்டி கொடுத்தாகிவிட்டது என்று சொன்னதன் விளைவு… பெட்டி இன்னும் கொடுக்கப்படவில்லை என்று பிறகுதான் தெரிந்தது…

கேள்வி : நிருபர் அதிர்ச்சியாகி… அய்யா எந்தப்பெட்டி?

கலைஞர் : சுதாரித்து…. பெட்டியில்லை…. பேட்டி… ராமதாஸ் கூட்டணியில் இணையும் பேட்டி!

கேள்வி : அய்யா… நீங்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட போராட்டம்.. எல்லாம் செஞ்சப்ப பிறந்தவர் அழகிரி என்பதால் போராட்ட குணம் மிக்கவராக இருக்கிறார் என்றும்… நீங்கள் அமைதியாக மெச்சூர்டாக இருந்தபோது பிறந்தவர் ஸ்டாலின் என்பதால் நிதானம் தவறாமல் இருக்கிறார் என்றும் சொல்லியிருந்தீங்க…கனிமொழி எப்ப பொறந்தாங்க?

கலைஞர் : நான் பெட்டி வாங்கும்போதுதான்…. அதாவது நான் பட்ஜெட் போட பெட்டியை கையில் எடுத்த போது பிறந்தவர் தான் கனிமொழி…

Advertisements