படத்தில்…

ஐந்து தலை

ஆயிரம் கை

கையில்

சிலவமயம் சூலம்

சிலவமயம் வீணையென

க்ரீடத்துடன் வந்த பெண்கள்

தெய்வமென்று பிறர் சொல்ல

தேவதைகளாகினர் பெண்கள்…

காகிதத்தில்…..

நீலி யட்சி

மோகினி யென

நீளும் பாத்திரங்களில்

பேய்களெல்லாம்

பெண்களாகிப் போக

நிஜத்தில் பார்த்த

பெண்களெல்லாம்

பேய்களாகிப் போயினர்!

திரையில்….

சிலதில் பதிவிரதையாய்

சிலதில் காமக் காரிகையாய்

ஒரே பெண்முகம்

மாறி மாறி வந்ததால்

எப்போதும்

மாறும் முகமாய்

பதிந்தனர் பெண்கள்!

விளம்பரத்தில்……….

ஆண் உள்ளாடை விற்க

தான் உள்ளாடை துறந்து

கிறக்கம் தந்தாள் பெண்!

போகப் பொருளாய்

ஆயினர் பெண்கள்!

பேருந்தில்…

உன் அம்மாவும் பெண்தானே…

யாரையோ பார்த்து

கோபமாய் கேட்ட பெண்முகம்

அம்மாவை விடவும்

அதிகம் பதிகையில்

ஆக்ரோஷ அலட்டலாய்

ஆகினர் பெண்கள்!

அண்மை வீட்டில்……

கணவனை வழியனுப்பி

நண்பனை விழி வருடும் பெண்

அலுவலம் கிளம்புகையில் – அவன்

மனைவியை ஐயுறச் செய்ய

காக்கும் பெட்டகமாய்

மாறினர் பெண்கள்!

செய்திதாளில்..

ஸ்டவ்வில் எரிந்து

கற்பை இழந்து

விபச்சாரத்திற்கு உட்பட்டு

விவாகரத்து செய்யப்பட்டு

பரிதாபப் பொருளாய்

பாவமாய் பெண்கள்!

இப்படி…

சமுதாயத்தில்

கதை நாயகிகளாய்

அவனைச் சுற்றி

ஆயிரம் பிம்பங்கள்!

இதில் எந்த நாயகி

அவன் கதா நாயகி?

——————————————-xxxxxxxxxxxxxxx————————–

படம் : நன்றி – இணையம்

Advertisements