நடுநிசியிலெனது தேசம்..
பகல் மறையும் பொழுதுகளில் ஆரம்பிக்கும்

எம் மக்கள் பதற்றம்

மெல்ல இருட்ட ஆரம்பிக்கும் எங்கள்

உவகையெல்லாவற்றையும் உள்வாங்கி

குண்டு விழும்

விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்

இடி போலச் சத்தம் கேட்கும்

தூரத்து அவலக் குரல்கள்

குண்டு போடப்படுவதை

உறுதிப்படுத்தி தொடர்ந்து

எதிரொலிக்கும்

துப்பாக்கிகள் வீட்டுக்கதவு தட்டும்

சகல குடும்பத்தினரதும்

கதறலுக்கப்பாற்பட்டு இளைஞர்கள்

கடத்தப்படுவர்

பௌர்ணமியும்

பார்த்து அழும்

வதைப்படுதல் கண்டு

தினந்தோறும்

கடற்கறை, வயற்காடு,

வீதியோரம், களத்துமேடு,

பொதுமயானம், புளியந்தோப்பு

எங்கும் கண்டிடலாம்

எவர்க்கேனும் மகனாக,

கணவனாக, தந்தையாக,

சகோதரனாக, சினேகிதனாக

வாழ்ந்து வந்தவர்களின்

சடலங்களை

“இன்றெவர்க்குச் சாவோ…?”

பதுங்கு குழியிலிருந்தவாறே

உறவினரை எண்ணிப்பார்த்து

உயிர் துடிக்கும்

மூச்சடக்கி, மூச்சடக்கி

உள்நெஞ்சுக்கேவல் எழும்

அனைத்தும் முடிந்தநேரம்

வீட்டுச்சுவர் மேல் சத்தமின்றி

வெயில் ஏறும்

விதிக்கப்பட்ட மரணம்..

அது நீலமோ சாம்பலோ

தெரியவில்லை

இரண்டும் கலந்தவோர்

அடர்நிறம் போர்த்திய அதிகாலை

ஒரு பொழுதின் ஏக்கமும்

ஒரு பொழுதின் வசந்தங்களும்

பனியில் குழைக்கப்பட்டு

அந்நிறம் உருவாகியிருக்கக் கூடும்

அடர்ந்த வனாந்தரத்துள்

மெல்லிய துயரத்தோடு

தனித்தாடும் ஆண் மயிலின்

இறகுகளின் முனையில்

அந்நிறத்தைக் காணலாம்

அன்றியும்

மாலைவெயிலை

எதிர்கொண்டு நடைக்கையில்

சட்டெனத் திரும்பிப் பார்ப்பீர்களாயின்

நிழலில் ஒரு கணம் அந்

நிறம் தோன்றக் கூடும்

வனம் கலைத்துச்செல்லும் பறவை

வான்வெளியில்

சிறகுதிர்த்துச் செல்லுவது போல

உங்கள் மனப்பரப்பில்

அந்நிறம் இப்பொழுது

கிளைபரப்பத் தொடங்கியிருக்கும்

தொலைதூரப் பெருங்கடல்

தொடுவானுடன் சங்கமிக்கும்

புள்ளியொன்றில் தோன்றுமே..

அதே நிறம் தான்

விடுங்கள் உங்களுக்கு

ஆயிரம் வேலையிருக்கும்

அன்றைய விடிகாலையில்

அவன் இறுதி மூச்சு விட்ட காற்றோடு

ஆயுதங்களால் விதிக்கப்பட்ட

அநீதியைப் பார்த்த சாட்சியாய்

அந்நிறம் மட்டுமேயிருந்தது

முடிவிலி

அடர்ந்த இருளின் கரங்களில்

இன்று நிலவில்லை

ஒற்றை நட்சத்திரம்

ஒற்றைப் பூவரசு

ஒற்றைக் கிணறு

தனித்த நான்

இன்னும் பார்வைப் புலத்துக்கெட்டாச்

சில பிசாசுகளும் இருக்கக் கூடும்

நண்ப,

உயிர் பிரியும் வரை வலிகொடுத்த

குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை

ஒரு குறிப்பாக நீ

எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்

எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது

அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்

நீளக்கூடும்

ஒற்றைக்கிணற்று நீரில் மிதக்கும்

ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக

ஒற்றைப் பூவரசும்,

இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்

நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க

குருதி கசிந்து கொண்டிருக்கும்

ஒரு புதுச்சடலமாக நாளை நானும் மிதப்பேன்

இவர்கள் நம்மை வைத்துக் கவிகளும்

காவியங்களும் படைக்கட்டும்

Advertisements