மலேசியா வாசுதேவன்

பூங்காத்து திரும்புமா என்று நம்மையெல்லாம் திரும்பி பார்க்க வைத்த மலேசியா வாசுதேவன் நேற்று ( 20.2.2011) மரணமானார்… ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் நிலை இரண்டு மூன்று நாட்களாக கவலைக்கிடமாக இருந்தது… நேற்று மதியம் ஒரு மணிக்கு மலேசியா வாசுதேவன் மரணமானார்… தீவிர சாய்பாபா பக்தரான மலேசியா வாசுவின் மகன் யுகேந்திரன் அவரின் வாரிசாக திரைப்படத் துறையில் உள்ளார்…

மலேசியா சினிமாவில் முதல் பாடல் பாடியதே ஒரு சுவையான கதை… இப்படி தெய்வாதீனமாக சினிமாவில் நுழைந்த மலேசியா தன் முதல் பாடலான ஆட்டுக்குட்டி முட்டையிட்டிலேயே முத்திரை பதித்தார்… ஆசை நூறு வைகை என்ற புகழ்பெற்ற ரஜினி பாடல் மலேசியா பாடியதுதான்… அதனாலேயே அந்த காலங்களில் மலேசியா பாடல்கள் இல்லாத ரஜினி படங்களே கிடையாது… ஆகாய கங்கை……ஒரு தங்க ரதத்தில் …….மாமனுக்கு மைலாப்பூருதான்… வா வா வசந்தமே… அடியே அன்னக்கிளி …. சொல்லி அடிப்பேனடி….என்னோட ராசி நல்ல ராசி… என மலேசியாவுக்கே உரிய ட்ரேட்மார்க் பாட்டுக்கள் எல்லா ரஜினி படங்களிலும் உண்டு…ஏன் கமலுக்கும் கூட “காதல் வந்திருச்சு” என குரல் மாற்றி பாடியது மலேசியாதான்!

சிவாஜிக்கு டி.எம்.எஸ்க்கு பிறகு அதிகம் குரல் கொடுத்த பெருமையும் மலேசியா வாசுவுக்கே உண்டு… “என் நடிப்புகேத்த அழுத்த குரல் இப்ப இவன் கிட்ட தான்யா இருக்கு” என்று சிவாஜியே புகழ்ந்திருக்கிறார்…”பூங்காத்து திரும்புமா” … “வெட்டி வேரு வாசம்…” “ஒரு கூட்டுக் கிளியாக” போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை…

அதே போல் பாரதிராஜாவுக்கும் மலேசியாவுக்கும் ஒரு தனி பந்தமே உண்டு… அந்தக் காலங்களில் மலேசியா பாடல் இல்லாத பாரதிராஜா படம் எதுவுமே இல்லை… “மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது” …. “வான்மேகங்களே வாழ்த்துக்கள்…” “ஆயிரம் மலர்களே மலருங்கள்” ” செங்கிழக்குச் சீமையில…” ” அடி ஆத்தாடி..” “அரிசி குத்தும் அக்கா மகளே” “ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை”…”குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்” என பாரதிராஜா மலேசியா காம்பினேஷன் ஒரு தனி வெற்றிக்கதை…

“ஆசை நூறு வகை” என்று வெஸ்டர்ன் ஹிட்டாகட்டும் ” நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்” என கிக்கேற்றுவதாகட்டும் “குயிலே குயிலே பூங்குயிலே” என கிராமிய டூயட் பாடுவதாகட்டும் “மலையோரம் மயிலே” என கர்நாடக இசை கலந்த ஃபோக் ஆகட்டும் , சற்றும் சளைக்காமல் நம்மை மகிழ்வித்த மலேசியா நம் மனங்களில் அசையா இடம் பிடித்தது காலத்தால் அழிக்க முடியா அவரின் மெலடிக்களால் தான்…

” கோடை கால காற்றே…”

” அள்ளித் தந்த வானம் தந்தையல்லவா”

“நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு”

“பூவே இளைய பூவே”

என்ன குரல்… என்ன இனிமை.. என்ன லாவகம்…எட்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார் திரையில்…இளையராஜாவின் ஆண்குரல் அறிமுகங்களில் மிகச் சிறந்த அறிமுகம் மலேசியா வாசுதேவன் தான்… வாழ்நாள் முழுக்க இளையராஜாவுக்கு நன்றியைக் காட்டினார் மலேசியா வாசுதேவன்!

மலேசியா வாசுதேவன் எஸ்.பி.பியைப் போல பிற்காலத்தில் நடிக்கவும் செய்தார்…சில படங்களில் வில்லனாக தோன்றி அசத்தியிருக்கிறார்… அதில் “ஒரு கைதியின் டைரி”யில் கமலுக்கே வில்லனாய் கலக்கினார்…

முதல் வசந்தத்தில் சத்யராஜுடன் சேர்ந்து ரவுசு பண்ணுவதாகட்டும்… திருடா திருடாவில் காமெடி பண்ணுவதாகட்டும் மலேசியா ஒரு சிறந்த நடிகர்தான் என நிரூபித்தார்….

மலேசியா வாசுதேவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்…

பூங்காற்று திரும்பாது … ஆனால் நினைவிலிருந்தும் அகலாது!

Advertisements