23/2/11 தேதியிட்ட ஆனந்த விகடனில், நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில், தாமிரா எழுதியுள்ள மியாவ் மனுஷி இக்காலகட்டத்தின் நடப்பை, மனித மனங்களின் பலவீனத்தை, அப்படியே உள்ளபடி பதிவு செய்துள்ள சிறுகதை.

“என் பலவீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே”

என்ற ,கதைக்கு மிகப் பொருத்தமான, அறிவுமதியின் கவிதையோடு துவங்குகிறது மியாவ் மனுஷி.

முக நூலில் ஏற்படும் ஒரு அறிமுகம் எப்படி மதியை மயக்கி , காதலோ இது என்ற எண்ணத்தை, திருமணமான ஒரு ஆண் பெண் இருவருக்குள்ளும் ஏற்படுத்துகிறது என்று விவரிக்கிறது கதை. புகைப்படத்தை மட்டுமே பார்த்து, குறுஞ்செய்திகளில் தெரியும் மொழியறிவிலும் புலமையிலுமே மட்டுமே ஒருவர் மீது மற்றவர் மோகங்கொண்டு விடுகின்றனர் பார்வதியும் கதைசொல்லி ஜேம்ஸும். தினந்தோறும் பறிமாறிக்கொள்ளும் குறுஞ்செய்திகளிலும் பகிர்ந்து கொள்ளும் லைக்குகளிலும் தெரிக்கும் விருப்பத்துளிகளில் அச்சம் நீங்கி ” நாம் எங்கு இருக்கிறோம். நட்பின் எல்லையில் மஞ்சள் கோட்டு விளிம்பில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உன் புன்னகை விரல் பிடித்து எனை அழைத்துச் செல்லும் இடத்தில் நட்பு இல்லை.” என்பதாக ஜேம்ஸ் இட்டு விடும் வாசகத்தில் கலக்கமுற்று விடுகிறது பார்வதியின் பெண் மனம்.

வழமையே போல் ஆண் பயம் இல்லாமல் மனதில் உள்ளதைப் போட்டு உடைத்து விடுவதும், பெண் அச்சமுறுவதுமாக வரிகள் நகர்கின்றன. சில நாட்களின் வலையமதிக்குப் பிறகு, மீண்டும் குறுஞ்செய்திப் புள்ளிகளிட்டு காதல் கோலம் போட்டாகிறது. “சரி ,இந்தப் பட்டாம்பூச்சிகளை என்ன செய்யலாம். எனக்குள்ளும்  பறந்து திரிகின்றன”…இந்த வரிகள் இருவருள்ளும் ஒரு முக்கிய மாற்றம் துவங்கிவிட்டத்தை உணர்த்த, “ஒரு வேளை பட்டாம்பூச்சியற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ என்னவோ” என்று, ஜேம்ஸ்- யோசிப்பது இக்காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒரு சிந்தனை. மிகப் பிரமாதமான, விரசமற்ற , யதார்த்தமான ஒரு சொல்லாடல். ரொமான்ஸ், அதாவது காதலற்ற மணவாழ்வு, எத்துணை துன்பமான ஒன்று, அது எத்தகைய விளைவுகளை ஒரு மணவாழ்வில் ஏற்படுத்தும் என்பதை மிக அழுத்தமாக இந்தச் சிறுகதை பதிவு செய்திருக்கிறது.

“திருமணம் முடிந்ததுமே காதல் ஜன்னல் வழியாகப் பறந்து விடும்” எங்கின்றது ஒரு ஆங்கிலப் பழமொழி. மணமாகும் வரையில் ஒருவருக்காக மற்றவர் உருகுவதும், காத்திருப்பதும், அடுத்தவரை எப்படியாவது நெகிழச்செய்து விட வேண்டும் என்று தவிப்பதும், தவறுகளை எல்லாம் பொறுத்து மன்னிப்பதும், கவர்வதற்காக ஏகப் பிரயத்தனம் செய்வதும்… மணம் புரிந்து கொண்டவுடனே எப்படியெல்லாம் மாற்றம் கொண்டு விடுகிறது?

நண்பர்களிடமும் தொழிற்ரீதியில் பழக வேண்டியிருக்கும் வாடிக்கையாளர்களிடமும் காட்டும் மரியாதையையும் கண்ணியத்தையும் நம் துணையிடம் ஏன் காட்ட முடிவதில்லை?

என்ன தான் இருவரும் ஒன்று என்றெல்லாம் பேசிகொண்டாலும் புறக்கணிப்பின் வலி மற்றவரை வாதை செய்யத்தானே செய்கிறது, மட்டுமல்லாமல் குடும்ப வாழ்வுக்கே ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை உண்டு பண்ணி விடுகிறதே?

தன் துணையிடம் இல்லாத, தான் பெரிதும் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று இம்மாதிரியான நட்பில் கிடைப்பதாகத் தோன்றும் போது மனித மனம் தடுமாறத்தானே செய்யும்?

உனக்கு என்ன குறை வைத்தேன்? என்று துரோகம் இழைத்துவிட்ட துணையிடம் பாதிக்கப்பட்டவர் முறையிடுவதை அன்றாட வாழ்க்கையில் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கு அர்த்தமேயில்லை! ஏதோ குறைகிறது என்பது தானே இப்படியான அதி தீவிர மனநிலைக்குக் கொண்டுசென்று விடுகிறது?. எல்லை தாண்டிவிடுவது என்பது நம் சமூகத்தில் மிகக் கேவலமாகப் பார்க்கப் படும் ஒரு செயல் என்பதை எல்லோரும் உணர்ந்து தான் இருக்கின்றனர்..ஆனாலும் துணிவது என்பது, மிகுந்த மன அழுத்தம் மற்றும் தேவைகளின் காரணமாகத்தான் இருக்கவியலும். ஏதோ கலாச்சார சீரழிவுக்கு அடித்தளமிடத் துணியவில்லை நானும்…சீரழிவை ஓரளவுக்காவது சீரமைக்கவியலுமா என்று தான் எண்ணமிடுகிறேன். பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் எப்படி சரி செய்வது?

எல்லா மனித மனங்களும் எதிர்பார்த்து ஏங்கும் அடிப்படைத்தேவைகளை திருமணம் பூர்த்தி செய்ய வேண்டும். தன் துணையின் எல்லாத் தேவைகளையும் திருப்தி செய்கிறோமா என்ற கேள்வியை மணமான அனைவரும் நேர்மையாகத் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய கால கட்டமும், வாழ்சூழலும் வந்து விட்டது…பதில்” இல்லை “எனும் பட்சத்தில் எப்பாடு பட்டாவது அதை சரி செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏற்படப்போவது ஒரு மிகப் பெரிய சீரழிவுதான்.

கதையின் ஊடாக “மியாவ்” என்று ஜேம்ஸும் பார்வதியும் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதும்,” நான் என் லைஃப் டைம்ல இவ்ளோ சிரிச்சது இல்லை “என்பதும் , “நாப்பது வயசுல காதல் வந்தா அது நல்லதா ஜெம்” என்பதாகவும் வசனங்கள் வருகின்றன. உணர்த்துவது எதை என்று யோசிக்கும் போது இவையெல்லாம் இயல்பான மனித எதிர்பார்ப்புகளும் தேவைகளும் தான் என்பது பட்டென்று புலனாகின்றது, கொஞ்சப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டும், ஆராதிக்கப்படவேண்டும் என்பதெல்லாம் எல்லோருள்ளும் இருக்கும் ஆதங்கங்கள் தானே? பூர்த்தி செய்யப்படாத சித்திரங்கள் தமக்கான ஓவியனைத் தேடிக்கொள்ளும் காலம் இது.

“சமூகம் இதைக் கள்ளக் காதல்னு சொல்லும். என் குழந்தைகளுக்கு நான் ரோல் மாடலா இருக்க விரும்பறேன். தாய்மைக்குள்ள காதல் அசிங்கம் ஜெம்” என்று பார்வதி பேசும் வசனம் மிக அழுத்தமான ஒன்று. இம்மாதிரி, திருமணத்துக்கு அப்பால் ஏற்பட்டு விடும் பல காதல்கள் ,சொல்லப்படாமலும் , கட்டுக்குள் இருப்பதும் குழந்தைகளின் நலன் கருதித்தான். ஏனென்றால் மண வாழ்வு ஆட்டம் கண்டுவிட்டால் அடித்தலமின்றி இடிந்து போவது குழந்தைகளின் வாழ்க்கை தானே? “பலவீனங்களில் சுள்ளி பொறுக்கும் மனநிலை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. பார்வதி சற்று யோசித்துப் பார்த்தாளானால் அவள் கணவனுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது புரிந்திருக்கும்”. இவை தான் கதைக்கே முத்தாய்ப்பான வரிகள் முகத்திலறையும் உண்மையும் கூட. ஆனால் மனம் தடுமாறிவிட்ட நிலையில் இப்படியெல்லாம் தர்க்கரீதியில் யோசித்து தீர்வு காணுவது மிகக் கடினம். தடுமாறாமல் தன்னையும் தன் துணையையும் காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

“நான் உனக்கு அம்மாவா இருக்கலாம்னு நெனைக்கிறேன். காதலோட தாய்மையில் உன்னைக் குழந்தையா ஏத்துக்கலாம்னு பாக்கறேன். காமம் இல்லாத ஒரு காதல் ஓ.கே வா” என்று ஜேம்ஸ் கேட்பதாக கதை முடிந்தாலும் தர்க்கம் முடிவதாக இல்லை. சிறுகதை இது என்பதால் இங்கு முடிக்க வேண்டிய ஓர் கட்டாயம் அவ்வளவே..நாவலாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதை தானே இது? காமம் இல்லாத காதல் பேச்சளவில் அல்லாமல் வேறெப்படியாம் சாத்தியம்? தன் மனைவியை ஜேம்ஸும், கணவனைப் பார்வதியும் குழந்தையாக வரித்துக்கொண்டிருந்தால் இப்படியோர் கதையே எழுதப்படிருக்காதே? இணையத்தலங்களிலும், முக நூல் போன்ற ஊடகங்களிலும் இப்படி மனங்கள் தடுமாறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. திருமணம் ஆகிவிட்டால் மட்டும் மனம் என்ன தாவும் தன் இயல்பை மறந்து விடுமா? வெறும் புகைபடங்களையும் வார்த்தை ஜாலங்களையும் நம்பி எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டால் திருமணத்திலும், குழந்தைகளிடத்திலும், சமூகத்திலும் மிகப் பெரிய சீர்கேடு உண்டாகும் என்பது திண்ணம் . காத்துக் கொள்வது அவரவர் கடமை.

..ஷஹி..

Advertisements