காங்கிரஸ்-தி.மு.க. பனிப்போர்

சமீபத்தில் அரசியல் அரங்கில் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பிய ஒரு விஷயத்தை தமிழகத்தின் சாமானியக் குடிமகனும் கவனித்துக் கொண்டுதானே இருந்தான்! பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல தன்னுடைய வீட்டுக்கே முதல்வர் வருவார் என்பதை, தமிழக பி.ஜே.பி பிரமுகரான இல.கணேசனே நம்பவில்லையாம்.60வது மணி விழாவுக்கோ அல்லது 80வது பவள விழாவுக்கோ போயிருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். 66வது பிறந்த நாளுக்கெல்லாம் போவதன் பிண்ணனி அரசியல்தானே! இல. கணேசன் வீட்டில் இருந்த முதல்வர், அங்கிருந்தபடியே, அத்வானிக்கு போன் செய்து பேசியதாகவும் தகவல். ‘ நான் எதற்கும் தயார்’ என்று கலைஞர் கிளப்ப நினைத்த சூட்சும’ த்தின் விளைவாக, ‘காங்கிரஸ் கை கழுவ நினைத்தால், நானும் தயார்தான். பாரதீய ஜனதா எனக்குப் பழக்கமானவர்கள்தான்’ என்ற செய்தி றெக்கை கட்டிப் பறந்தது. மேலும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால், கைது செய்து சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கைத் தூதரகம் முன்னால் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியதின் பிண்ணனியும் கங்கிரஸுக்கு குடைச்சல் கொடுப்பதற்கென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளாக காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறதாம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு, இப்படிச் செய்வது, ஆ.ராசா கைது முதல்,90 சீட்- கூட்டணிஆட்சி என்ற பேரம்,”ஆ.ராசாவின் முடிவு அனைத்தும் தன்னிச்சையானது; எனக்கு எதுவும் தெரியாது-ஆ.ராசாவின் மத்திய அமைச்சர் நியமனம் உட்பட எதையுமே ‘ நானறியேன் பராபரமே’ பாணியில் அமைந்த பிரதமரின் பேட்டி இவற்றின் மூலம் விளைந்த கலைஞருடைய சினத்தின் வெளிப்பாடே என்பதையும் புரிந்துகொள்ளவேண்டியவர்கள் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். இது மட்டுமின்றி, விண்வெளித்துறை தொடர்பாக வெளிவந்த எஸ். பாண்ட் முறைகேடு சம்பந்தமான செயதிகளை மீடியாக்களுக்கு கொடுத்ததே தி.மு.க. தான் என்றும் மன்மோகன்சிங் கோபத்தில் இருக்கிறாராம். படபடவென யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் , பா.ம.க. வுக்கு சீட் ஒதுக்கியதும், பத்தோடு பதினொன்றாக சேர்ந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் காங்கிரஸும், தி.மு.க. வும் ஒருவரை ஒருவர் கழட்டிவிடும் நிலையில் இல்லையாம்.

கலைஞர் டி.வி ரெய்டு

ரெய்டு நடந்த கலைஞர் டி.வி. அலுவலகம், தி.மு.க வின் தலைமையிடம். இது தொடர்பாக தி.மு.க.வுக்கு ஏகப்பட்ட கவலையாம். ஸ்பெக்ட்ரம் பணப் பரிமாற்றங்கள் குறித்து மும்பையில் கைதான ஷாகித் பாவ்லா தந்துள்ள தகவல்களில் கலைஞ்ர் டி.வி.யும் வருவதால் கணக்கு வழக்குகளை சரிபார்க்க சி.பி.ஐ. நினைத்ததன் விளைவுதான் ரெய்டாம். பாவ்லாவின் பணம் பாவ்லா காட்டியிருப்பதைப் பார்த்தால், இன்னும் யார் யார் தலை உருளுமோ? எல்லாக் கண்ட்றாவியும் இந்த தேர்தல் நேரத்திலா வரணும்? கூட்டணி-சீட் பேரத்தை முடிச்சமா, தேர்தலுக்குத் தயாரானமான்னு இல்லாம இந்த ஸ்பெக்ட்ரம் வேற, குறுக்க குறுக்க!

நீக்கப்பட்ட திமுக  பேச்சாளர்

காங்கிரஸைத் தாக்கிப் பேசியதால், தி.மு.க.விலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் பேச்சாளர் வாகை முத்தழகன், , இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து , மறுபடியும் காங்கிரஸை விளாசித் தள்ளுகிறார். ”ராசா குற்றம் செஞ்சாரா, இல்லையா என்பதை சட்டம் சொல்லட்டும். அதைவிட்டுட்டு அவரைத் தாழ்த்தப்பட்டவர்னு , கலைஞர் ஏன் சொல்லணும்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்துல, தி.மு.க.வைப் பழிவாங்குனது யார்? காங்கிரஸ்தானே? அந்தக் கட்சியோடு இவங்க எப்படி கூட்டணி பேசுறாங்கன்னு புரியலை. ஊருக்கு 10 பேராவது காங்கிரஸ்காரன் இருக்கானா? அவனை ஏன் தூக்கிச் சுமக்கணும்? ஆட்சியில பங்குன்னாலே தமிழ் நாட்டு ஜனங்க அந்த அணிக்கு ஓட்டுப் போட மாட்டாங்க.” என்று தி.மு.க. வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து கொண்டே வாங்கு- வங்குன்னு வாங்குகிறார் வாகை முத்தழகன்!. இது எங்க போயி முடியுமோ?

திமுகவின் பவர்பிளான்

கூட்டணி பலத்தைவிட இந்த முறை தன் பலத்தையே தி.மு.க பெரிதும் நம்பியிருக்கிறதாம். தேர்தல் கமிஷன் அறிவிப்பு வருவதற்கு முன்பே ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது, அரசு. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 56,016 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தி.மு.க.வின் ‘பவர் பிளான்’ 54000 பூத் கமிட்டிகளை அமைத்துள்ளதாம். அதில் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இருப்பார்களாம். பூத்வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் போடப்படுமாம். பூத் கமிட்டி, இலவசம், பிரச்சாரம் இவற்றைத்தான் கூட்டணியைவிட பலமாக நினைக்கிறார்களாம்.

காத்திருக்கும் காங்கிரஸ்

ஒருவேளை தி.மு.க. வுடனான பேச்சு வார்த்தை முறிந்தால், தனித்துப் போட்டியிடும் எண்ணம் காங்கிரசுக்கு இருப்பதாகவும், தெரியவில்லை. அது தற்கொலைக்குச் சமம் என்பது அவர்களுக்குத் தெரியாதா? ஒருவேளை மூன்றாவது அணி அமைக்கலாம் என்றாலும் அது, தே.மு.தி.க. எடுக்கும் முடிவில் இருக்கிறது. காங்கிரஸ்- தி.மு.க. பேச்சு வார்த்தை முறிஞ்சுபோகாதான்னு, தே.மு.தி.க.வும், அ,தி.மு.க.- தே.மு.தி.க. பேச்சு வார்த்தை முறியாதான்னு காங்கிரஸும் வெய்ட் பண்ற சங்கதியும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்யுது.

அதிமுக – கம்யூனிஸ்ட் கூட்டு

அ.தி.மு.க. வுக்குத்தான் சரியான கடுப்பு. கம்யூனிஸ்டுகளைத் தவிர கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. ம.தி.மு.க. வைப் பெரிதாக எடுத்துக்க முடியாது. எனவே, தே.மு.தி.க.வின் காலம்- தாழ்த்தும் செயலால் எரிச்சலுற்றிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வெய்ட் பண்றாங்க. விஜய்காந்த் வீட்டுக் கல்யாணம் எல்லாத்தையும் முடிவுக்குக் கொண்டு வராமலா போயிடும்?
பொறுத்ததே பொறுத்தோம்; இன்னும் கொஞ்சம் பொறுப்போம். அம்மா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

************************

Advertisements